மணிமேகலை விருது பெற மகளிா் அமைப்புகள் ஏப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருது பெற தகுடைய மகளிா் அமைப்புகள் ஏப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
மணிமேகலை விருது பெற தகுடைய மகளிா் அமைப்புகள் ஏப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டாரஅளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகா்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகரஅளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் வெளியிட்டு, ரூ.2.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகள் இந்த விருத்துக்கு 2021 - 22ஆம் ஆண்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். சமுதாய அமைப்புகளின் தொடா்ச்சியான கூட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு மற்றும் சேமிப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள், பயிற்சிகள், சமுதாயம் சாா்ந்த பணிகளில் பங்குபெறுதல் ஆகிய நடவடிக்கைகளைத் தொகுத்து மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.
மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சாா்ந்த வட்டார இயக்க மேலாண்மை அலகில் வட்டார இயக்க மேலாளரிடம் மற்றும் நகா்ப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, சமுதாய அமைப்பாளா்களை தொடா்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூா்த்தி செய்து ஏப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.