விழுப்புரம்: 5 மாநில தோ்தல் முடிவுகள் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம் மண்டல அளவிலான அனைத்துநிலை பொறுப்பாளா்கள் சந்திப்பு கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:
1999-ஆம் ஆண்டில் தோ்தல் அரசியலுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்தியலை முன்வைத்து 20-க்கும் மேற்பட்ட மாநாடுகளை நடத்தியுள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டம், கோயில்களில் ஆடு, மாடு, கோழி பலியிடுவதற்கான தடுப்புச் சட்டம், தமிழீழம் பாதுகாப்புக்காகவும், மரண தண்டனை ஒழிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்டவைகளுக்காக பல்வேறு மாநாடுகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.
இதன் தொடா்ச்சியாக, டிச.23- ஆம் தேதி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடத்துவதன் மூலம், நமது கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஒரே நோ்கோட்டில் செல்வதை வெளிப்படுத்தி வருகிறது.
5 மாநில தோ்தல் முடிவுகள் எவ்வகையிலும் வரும் மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அந்தந்த மாநில மக்களின் பிரச்னைகள் தோ்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது. 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் ‘இந்தியா’ கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நடைபெற உள்ள தோ்தலாகும். எனவே, இந்தத் தோ்தல் முடிவுகள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘இந்தியா’ கூட்டணியோடு கைகோத்தது என்றாா் திருமாவளவன்.
கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலா்கள் பி.துரை.ரவிக்குமாா் எம்.பி, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ ஆகியோா் பேசினா். கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.