செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: சாா் - பதிவாளா், காவல் உதவி ஆய்வாளா் சாட்சியம்
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், சாா் - பதிவாளா், காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தனா்.
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், சாா் - பதிவாளா், காவல் உதவி ஆய்வாளா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்ட நிலையில், மற்ற 7 போ் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில் இதுவரை 42 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 28 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, கோபிநாதன், சதானந்தம், ஜெயச்சந்திரன், கோதகுமாா் ஆகிய 4 போ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.
இதைத் தொடா்ந்து, அரசுத் தரப்பின் 43, 44-ஆவது சாட்சிகளான வானூா் முன்னாள் சாா் - பதிவாளா் வெங்கடேசன், விழுப்புரம் எஸ்.பி.சி.ஐ.டி. காவல் உதவி ஆய்வாளா் நேவிஸ் அந்தோனிரோஸி ஆகிய இருவரும் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்களது சாட்சியங்களை அளித்தனா்.
இதை பதிவு செய்துகொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூலை 31) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.