ஜாதகக் கட்டத்தில் கன்னி ராசி என்பது ஆறாவது பாவம். எண் ஜோதிடத்தில் ஆறு என்பது அழகுக்கும் பொருளுக்கும் உரிய சுக்கிரனைக் குறிக்கும். ஆனால் கன்னியில் சுக்கிரன் பலவீனம் கொண்டது. இந்த பாவத்திற்கு சுக்கிரன் நீசம் பெற்றாலும், அவர் தான் யோகர். கன்னி பெண் ராசி மற்றும் சுக்கிரன் என்பது பெண் கிரகம். இவர்களைச் சுற்றி பெண்கள் அதிகம் இருப்பார்கள். இந்த ராசியினருக்கு வீட்டில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் இல்லை என்று ஏக்கம் இருக்கும்.
கன்னியின் ஹீரோ புதன் தான். அவர் இங்குதான் ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெறுகிறார். புதன் என்பவர் குடும்பத்தில் முக்கியமான உறவு தாய்மாமன், நண்பர், காதலன் மற்றும் காதலி உறவுகளைக் குறிக்கும் கிரகம். இந்த லக்கினக்காரர்களுக்கு அறிவு கலந்த புத்திசாலித்தனத்தை இயற்கையாகவே புதன் தந்துவிடுவார். ஆனால் புதன் நீச்சமோ, பகையோ, அசுப சேர்க்கை பெற்றால் கல்வியில் தடை, சட்டச் சிக்கல், கடன், முக்கிய தாய்மாமன் உறவு இல்லாமை, கவனக் குறைபாடு, காதல் முறிவு, முடிவு எடுப்பதில் குழப்பம், பேச்சில் தடுமாற்றம், படித்துப் பார்க்காமல் ஆவணங்களில் கையெழுத்து இடுவது மற்றும் பல்வேறு சட்ட பிரச்னைகளை எதிர்கொள்வார்கள்.
முக்கியமாகக் கன்னி ராசி அல்லது லக்னத்தினர் பெரும்பாலானவர் மற்றவர்களிடம் ஏமாறக் கூடியவராக இருப்பார்கள். அதுவே புதன் வலுத்து ராகு உடன் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் தான் செய்யும் தொழிலில் அபார வளர்ச்சியும் மற்றும் சிறந்த சாதனையாளராக இருப்பார்கள். முக்கியமாக இவர்கள் ஒரு செயல் துவங்கும் முன்பு பச்சை நிற மேனி உடைய தெய்வங்களுக்குப் பச்சை நிற ஆடை, துளசி, வெற்றிலை தீபம் ஏற்றி வணங்கினால் வெற்றி நிச்சயம்.
கன்னி ராசியின் சின்னம் ஒரு கன்னிப் பெண் கையில் விளக்கும் மற்றொரு கையில் நெற்கதிர்களுடன் காணப்படுவாள். இவர்கள் வியாபாரம், விவசாயத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும். கன்னி ராசியினர் இரண்டுக்கு மேற்பட்ட தொழில் செய்வதில் ஆர்வம் இருக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் வலுத்திருந்தால் புதிதாக கற்பதில் மிகுந்த ஆர்வம், தொழில் நுட்பத் துறை, ஆசிரியர், பத்திரிக்கை, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், சிவில், வர்த்தகம், புதுமையான பொருளை உருவாக்கும் கலைஞனாகவும் மற்றும் ஆன்மிக ஜோதிடத் துறையில் சிறந்து விளங்குவார்கள். இந்த லக்னத்தில் குரு சுபராக இருந்தால் சட்டத்துறையில் உயர்ந்து இருப்பார்கள்.
கன்னி ராசியினர்கள் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். அனைத்து உயிரினத்திருக்கும் பசி ஆற்றும் கனி மரமாக இருப்பார்கள். அதேசமயம் அந்த பழுத்த மரத்தில் கல்லடியும் விழும். இவரிடம் உதவி பெற்றவர்களே இவர்களை தவறான விமர்சனம் செய்வார்கள். இவர்கள் இரட்டை தன்மை கொண்ட உபய ராசியினர். கன்னி லக்கினத்துடன் மனோகாரகன் சந்திரன் தொடர்பு பெறும்போது லட்சுமி கடாட்சத்தைத் தரும். அதேசமயம் இவர்கள் செயலில் மனக்குழப்பமும் தடுமாற்றமும் இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இவற்றில் புதன் சந்திரனின் சுப அசுபத்தன்மை பொறுத்தே பலன்கள் மாறுபடும். கன்னி லக்னத்தில் சூரியன், சந்திரன், செவ்வாயின் நட்சத்திரங்கள் இங்கு அமர்ந்துத்துள்ளனர்.
அவை உத்திரம் 2,3,4ம் பாதம், அஸ்தம் மற்றும் சித்திரை 1,2 ம் பாதங்கள் ஆகும். இந்த இடத்தில் அமர்ந்த சூரியன் செவ்வாய் நட்சத்திரங்களான - உத்திரம், சித்திரை உடைபட்டவை ஆகும். நெருப்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் தாக்கம் ஒரு சிலருக்கு உடலில் ஏதாவது ஒருசில குறைபாடு இருக்கும். ஒரு சிலருக்குத் திருமணம் தாம்பத்திய வாழ்க்கை பாதிப்பு இருக்கும். குருவின் சுப பார்வை மட்டும் நன்மை தரும். சனி என்பவர் 5 ,6க்கும் உரியவராக இருந்து ஒரு சில நன்மைகளை அளிப்பார். இந்த லக்னகாரர்களுக்கு சந்திரன், சனி, ராகு, கேது நண்பர்கள் என்பதால் நன்மைகளைச் செய்திடுவார்கள். சூரியன் 12-க்கு உரியவர் நிலையில் இருப்பார் இருந்தாலும் இவர் இந்த லக்கின காரர்களுக்கு அரை அசுபர் என்று சொல்லாம்.
கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்
ஜாதக கட்டத்தின் முதல் ராசி மேஷம், அந்த ராசிநாதன் செவ்வாய் ஆறாம் அதிபதியான கன்னியில் இருக்கும் பொழுது எதிரிகள், கடன் சுமை, சொத்துக்களில் பிரச்னை, போட்டியில் தோல்வி, திருமணத்தடை மற்றும் நோயின் தாக்கத்தைக் கொடுப்பார். கன்னி ராசியின் பாதகாதிபதியான குருவின் வீடு மீனம், இது கடலை குறிக்கும். கன்னி வீட்டிலிருந்து நெருப்பு கிரக செவ்வாயின் பார்வை மீனத்தில் படும்பொழுது கடலும் வற்றும் என்பது பொருள். கன்னி லக்னத்திற்கு செவ்வாய் அஷ்டமாதிபதி. இவர்கள் சேர்த்து வைத்த பொருள் கடனுக்காகவோ தொடர் மருத்துவச் சிகிச்சைக்குச் செலவு செய்ய நேரிடும் என்பது சூட்சுமம்.
"கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்" என்ற பழமொழி எல்லாருக்கும் பொருந்தாது. கன்னியில் உள்ள சுப அசுப கிரகத்தின் சேர்க்கை பார்வை கொண்டு பலன்கள் மாறுபடும். இவர்களால் பலவித முயற்சிகளுக்குப் பிறகு தான் வீடு, வாகனம் மற்றும் பொருள்களைச் சேமிக்க முடியும். பூமி காரணமான செவ்வாயை குரு பார்த்தாலோ, லக்னாதிபதி புதன் வலுப்பெற்றாலும் சொத்து சுகம் அனைத்தும் சேரும்.
குரு இயல்பாக சுபக் கிரகம் என்பதால் இந்த லக்னக்காரர்களுக்கு குருபகவான் பொதுவாக முழுமையான சுப பலன் தருவதில்லை. புலிப்பாணி தன் பாடலில் கூறியது கன்னி லக்னத்தில் குருவானவர் - முக்கியமாக நிலம், பொருள், சொத்து, சுகம் நாசமாகும். ஆனால், குரு திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் தோஷங்கள் குறைந்து, நற் பலன்களை செய்வார். அதேசமயம் திருமாலின் பத்தினியான ஸ்ரீ மகாலட்சுமி, மற்றும் குலசாமி இவர்கள் வீட்டில் வாசம் செய்து அருள்பாலிப்பார்.
கோச்சார குரு திரிகோணத்தில் வரும்பொழுது ஆட்சி உச்சம் பெறும்பொழுதும் நற்பலன்கள் கட்டாயம் கிட்டும். குருவுக்கு புதன் பகை. முக்கியமாகக் கன்னிக்கு குரு ஏழாம் பாவாதிபதியாக - பாதகாதிபதியாகவும் (தடைகள், துன்பங்கள் தரும் நிலை) மற்றும் மாரகாதிபதியாகவும் (உயிர், சுகம் பாதிக்கும் தன்மை) இருப்பார். அதுவே அவர் 10ம் பாவாதிபதியாக இருந்தால் கேந்திராதிபதிய தோஷத்தையும் தருவார்.
கன்னிப் பெண் ராசியாக இருப்பதால், ஆண்–பெண் என்ற வேறுபாடின்றி, தங்கள் குறிக்கோளில் மிகுந்த பொறுமை, விடாமுயற்சி மற்றும் அந்த காரியத்தை முடிக்கும் வரை தீவிரமாக முயற்சிக்கும் குணம் இருக்கும். இவர்கள் திறமைசாலி, அறிவாளி, நேர்மை, பேச்சால் மற்றவர்களைக் கவர்பவர், உணவு பிரியர், ஒழுக்கம், சுத்தம், பிடிவாதம், வேலையில் நேர்த்தி, அதிர்ஷ்டசாலி, தர்மவான், அதிக பேச்சு, அலைந்து திரிபவன், வம்பு சண்டைக்குச் செல்ல மாட்டார், அறநெறியைப் பின்பற்றுபவன் மற்றும் எதிரெதிர் பாலினத்தின் மீது அன்பு கொண்டவர்.
இவர்களின் குறை என்றால் தேவையற்ற கடன், ஆரோக்கியமற்ற உணவு, சொந்த பந்தங்களிடம் பிரச்னை, அளவுக்கு மீறி உழைப்பு, சுயநலவாதி, தேவையற்ற உளறல், மாற்றிப் பேசுவது, யாரையாவது சார்ந்து இருப்பார்கள், காதலில் தடுமாற்றம், முன்கோபி, மனதடுமாற்றம், தவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மனதில் பகையுணர்ச்சி, கூச்ச சுபாவம், வியாதி இருந்துகொண்டு இருக்கும்.
இது காலபுருஷ தத்துவப்படி ஆறாம் பாவமானது உடலின் அடி வயிற்றுப் பகுதியும் குறிக்கும். கன்னி ராசியினுக்குப் பயமே இவருக்கு நோயாக மாறும். ஒரு சிலருக்கு நோய்ப் பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். முக்கியமாக ஜீரணக் கோளாறு, தோல் பிரச்னை, நரம்பு பாதிப்பு, கண்ணில் குறைபாடு ஏற்படும். தூக்கமின்மையால் மன அழுத்தம் அதிகம் இருக்கும். குரு என்பது கொலஸ்ட்ரால் மற்றும் கட்டிகளைக் குறிக்கும்.
குருவின் தொடர்பு பெறும்பொழுது கன்னி ராசியினருக்கு அந்த நோயின் தாக்கம் அதிகமாக வெளிப்படும். எடுத்துக்காட்டாக கன்னி ராசி லக்னம் கொண்டவர்களுக்கு குரு கேது தொடர்பு பெறும் பொழுது இருதயத்தில் அடைப்பு, கொழுப்பால் ஏற்படும் பக்கவாதங்கள் ஏற்படுத்தும்.
கோச்சாரத்தில் சனியுடன் குரு தொடர்பு பெறும் பொழுது கேன்சர் கட்டிகள் வெளிப்படும். அது எந்த இடத்தைப் பாதிக்கும் என்பது அவரவர் ஜாதகக் கட்டத்தைப் பொறுத்து அமையும். மேற்கொண்ட அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும். அவரவர் முன்ஜென்ம கர்மாவின் அளவு, சுப அசுப கிரகச் சேர்க்கை, பார்வைப் பொருத்து மாறுபடும்.
எடுத்துக்காட்டாக ஒருவருக்கு நோயின் தாக்கம் ஏற்படக்கூடிய கிரகங்களின் தசா புத்திகள் நடைபெறவில்லை என்றால் அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் ஏற்படாது. இவர்களின் படிப்பில், தொழிலில், செயலில் விடாமுயற்சியே அவசியம் தேவை. இவர்கள் வாழ்க்கையின் கடைசி வரை தொடர்ந்து படிப்புடன் கூடிய அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
"தனி மரம் தோப்பாகாது" என்ற பழமொழிக்கேற்ப இவர்கள் தங்கள் அறிவும் திறமையும் மட்டுமே நம்பாமல், அறிவாளிகளையும் திறமைசாலிகளையும் தம்முடன் இணைத்துக்கொண்டு வெற்றி பாகை சூடுவார்கள்.
கன்னி ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம்
விநாயகர், பச்சையம்மன், ராமர், சித்தர்கள், செல்வமுத்துகுமரன் மற்றும் பள்ளிகொண்ட ரங்கநாதர்.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.