அனைவரும் இரக்கத்துடன் இருக்க வேண்டும் என்று பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புது தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அஜித் அளித்துள்ள பேட்டியில், பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அஜித் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ‘அரசு தங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்படுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர்களுடன் நான் துணை நிற்கிறேன். இதுபோன்ற செயல்கள் இனிமேல் நிகழாது என்று நம்புகிறேன். ஒரு நாள் நாம் ஒருவருக்கொருவரை புரிந்துகொண்டு இரக்கத்துடன் நடந்து கொள்வோம் என்பதற்காக பிரார்த்திப்போம். நம்மிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையான, ஒரே சமூகமாக வாழ்வோம்” என்று பேசியுள்ளார்.
”ராணுவத்தைச் சேர்ந்த பலரை இன்று(ஏப். 28) சந்தித்தேன். நாம் அவர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் இங்கே நிம்மதியாக உறங்கி ஓய்வெடுக்க, அவர்கள் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் அழகானதொரு வாழ்க்கை அமைய பிரார்த்திக்கிறேன், வாழ்த்துகிறேன்.
எல்லைகளில் ஓய்வின்றி அவர்கள் சேவையாற்றுகிறார்கள். இதற்காகவே, அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக, நாம் நமது தேசத்துக்குள், இங்கே ஒருவருக்கொருவரை மதித்து நடந்து கொள்வதும், ஒவ்வொரு மதத்தையும் மதிப்பதும், அதேபோல ஒவ்வொரு சாதிக்கும் மதிப்பளிப்பதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், அமைதியானதொரு சமூகமாக திகழ வேண்டும்” என்று பேசியுள்ளார்.
முன்னதாக, புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருதை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.