மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்லும் ஒருவர், இருட்டு நேரத்தில் இணைந்திருக்கும் ஒரு ஜோடியைப் பார்த்துவிடுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் 'அவிஹிதம்' படத்தின் ஒன்லைன்.
அம்பரீஷ் கலத்தேரா உடன் இணைந்து சென்னா ஹெக்டே, எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் 'அவிஹிதம்'.
அடுத்தவர்களின் அந்தரங்கத்தை சமூக ஒழுக்கமாக மாற்ற முயற்சிப்பதால் ஏற்படும் தவறுகளை நகைச்சுவையாக சித்தரிக்கும் பிளாக் காமெடி திரைப்படம் இது. இருள்கவிந்த நேரத்தில் இணையும் ஒரு ஜோடியின் கதையை ஒரு குடும்பத்தின் விசாரணையாக மாறுவதை நகைச்சுவையுடன் படைத்திருக்கிறார் இயக்குநர்.
ஹை பட்ஜெட், சூப்பர் ஹீரோஸ், பான் இந்தியா என முயற்சித்து தங்களுக்கு தாங்களே சூடுபோட்டுக் கொள்ளும் இக்காலத்தில், ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் மிக சாதாரணமான கதையை தனது பாத்திரங்களின் மூலம் பிரமாண்டமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
அடுத்தவர்களின் அந்தரங்க ரகசியம், அதிலுள்ள பதற்றம், அதுகுறித்த தெளிவின்மையை அறிந்துகொள்ள துடிக்கும் பலரது விருப்பத்தை பிளாக் காமெடி மூலம் பேசியிருக்கிறார் இயக்குநர்.
பிறரின் இதுபோன்ற அந்தரங்க ரகசியங்களை அறிந்து கொள்வதன் மூலம் தங்களது பாலியல் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ளும் மனிதர்களின் மனோபாவத்தை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த திரைப்படம். இதுபோன்ற மனிதர்களுக்கு உண்மையில் அந்த குடும்பம், பெண், சமூகம் சார்ந்த எந்த அக்கறையும் இருக்காது என்பதைத்தான் இப்படம் பேசுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் வசிக்கும் சாதாரண மக்கள், பிறரின் ரகசியங்களை எப்படி தங்களது அந்த நாளுக்கான பொழுதுபோக்காக மாற்றுகிறார்கள் என்பதை மிக நுட்பமாக திரைக்கதையில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் சென்னா ஹெக்டே.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் பேசுவதாக வரும் வசனங்கள் அனைத்தும் நடைமுறை யதார்த்தம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற நபர்கள் இருப்பதை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சியில் வருகின்ற வசனங்களை படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் பேசிக்கொண்டாலும், அது சமூகத்தின் அசலான பிரதிபலிப்பு.
குறிப்பாக முகுந்தனுக்கு விழும் அந்த 'அறை' உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பெண்களை சந்தேகிக்கும் அனைவருக்குமானதே. வெற்றிக்காக சாத்தியமற்றதை சிந்திக்காமல் சராசரி மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை இயக்குநர் நையாண்டி செய்த விதம் அருமை.
காசர்கோடு மாவட்டத்தின் கஞ்சங்காட்டில், தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஒருநாள் இரவு வீடு திரும்புகிறான் அந்த ஊரைச் சேர்ந்த பிரகாஷன் (ரஞ்சி கன்கோல்). அப்போது இருட்டில் ஒரு ஜோடி நெருக்கமாக இருப்பதை அவர்களுக்குத் தெரியாமல் பார்த்து விடுகிறேன். இதில், அப்பெண்ணுடன் இருக்கும் ஆண், அந்த ஊரின் மாவுமில்லில் வேலை செய்யும் வினோத் (வினீத் சக்யார்) என்பது தெரியவருகிறது. ஆனால், அந்த பெண் யார்? என பிரகாஷனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த விஷயத்தை அந்த ஊரில் டெய்லர் கடை வைத்திருக்கும் வேணுவிடம் (உன்னி ராஜ்) பிரகாஷிடம் சொல்லி விடுகிறான். இருவரும் அடுத்தநாள் இரவு அந்த இடத்துக்குச் சென்று அந்த ஜோடி தனிமையில் இருப்பதைப் பார்த்துவிட்டு, வினோத்துடன் இருக்கும் அந்த பெண் கார்பென்டர் முகுந்தனின் (ராகேஷ் அஷர்) மனைவி நிர்மலா (விருந்தா மேனன்) என்று அனுமானித்துக் கொள்கின்றனர். பின்னர், இந்த தகவலை முகுந்தனின் தம்பி முரளிக்கு (தனேஷ் கோலியாட்) சொல்ல, முரளி மூலம் அவரது தந்தைக்கு இந்த தகவல் சொல்லப்படுகிறது.
இப்படியாக இந்தத் தகவல், முகுந்தன் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவருக்கும் பரப்பப்படுகிறது. அந்த சமயத்தில், தனது குழந்தை மற்றும் மாமியாருடன் (முகுந்தனின் அம்மா) வசித்து வரும் வழக்கமான நிர்மலாவின், பேச்சு மற்றும் நடைமுறைகள் அவளது கணவன் உள்பட அனைவரது சந்தேகத்தையும் டெய்லர் வேணும் சொன்ன விஷயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைகிறது.
முகுந்தன், அவனது அப்பா, தம்பி முரளி, முரளியின் நண்பன், பெரியப்பா, பெரியப்பா மகன், டெய்லர் வேணு, பிரகாஷன் மற்றும் பெரியப்பா வீட்டார் என அனைவரும் சேர்ந்து வினோத்-நிர்மலா ஜோடியை கையும் களவுமாக பிடிக்கத் திட்டமிடுகின்றனர். அந்த திட்டம் பலித்ததா? ஜோடி பிடிபட்டதா? இல்லையா? என்பதுதான் 'அவிஹிதம்' படத்தின் திரைக்கதை.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை அதன் யதார்த்தத்தில் இருந்து திரைக்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீராக் ஷாஜியின் இசை, ரமேஷ் மேத்யூஸ் மற்றும் ஸ்ரீராஜ் ரவீந்திரனின் ஒளிப்பதிவு, சனத் சிவராஜின் எடிட்டிங் கட்ஸ் படத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
படத்தில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களும் தங்களது பணியைச் சிறப்பாக செய்துள்ளனர். ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் இந்தப்படம் தமிழ் டப்பிங்குடன் காணக்கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.