முகப்பு
செய்திகள்

ஃபெப்சி வேலைநிறுத்தம்: ரஜினி - செல்வமணி சந்திப்பு

சம்பள உயர்வு உள்ளிட்ட ஃபெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிராகரித்துள்ளது...

Updated On : 2 ஆகஸ்ட், 2017 at 12:26 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:04 PM

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செல்வமணி உள்ளிட்ட ஃபெப்சி நிர்வாகிகள் ரஜினியை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்கள். 

சம்பள உயர்வு உள்ளிட்ட ஃபெப்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நிராகரித்துள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை முதல் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நடந்து வந்த பெரும்பான்மையான படத்தின் படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் புறக்கணித்தனர். செவ்வாய்க்கிழமை காலை முதலே தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புத் தளத்துக்குச் செல்லாததால், படப்பிடிப்புகளைத் திட்டமிட்டவாறு தொடங்க முடியவில்லை. சென்னை பூந்தமல்லியில் நடந்து வந்த ரஜினியின் காலா, விஜயின் மெர்சல் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. 

Advertisement

இந்நிலையில், ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாகத் தொடர்கிறது. இதனால் ரஜினியின் காலா உள்ளிட்ட 90 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று இந்த விவகாரம் குறித்து செல்வமணி கூறியதாவது: ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இந்த பிரச்னையில் தலையிட்டுச் சமரசம் செய்ய வேண்டும். கமல்ஹாசனுடன் ஏற்கனவே இதுகுறித்து பேசி இருக்கிறேன். அவர் சில ஆலோசனைகளை கூறி இருக்கிறார் என்றார்.

இதையடுத்து, செல்வமணி தலைமையில் ஃபெப்சி நிர்வாகிகள் ரஜினியை இன்று சந்தித்தார்கள். ரஜினி அவர்களிடம் வேலை நிறுத்தம், தொழிலாளர் நிலை குறித்துக் கேட்டறிந்தார். ரஜினி நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பும் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரஜினி நேரடியாக இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இப்பிரச்னையில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படுத்த ரஜினி முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.