பனாமா பேப்பர்ஸில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர்கள் வந்தபோது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் என்னைப் போன்று ஒழுங்காக வரிகட்டுபவர்களை ஊடகங்கள் குறி வைக்கின்றன என நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார், குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. புதுச்சேரியில் தனது காரை பதிவு செய்த விவகாரத்தில் அமலாபால் முறைகேடு செய்திருப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. 'அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அவர் கார் வாங்கியது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் புதுவை அரசிடம் சமர்ப்பித்துள்ளார். இதில் துறைரீதியாக எந்தத் தவறும் நடைபெறவில்லை' என மாநில முதல்வர் நாராயணசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
கேரள திரையுலகில் முக்கிய நடிகரான பஹத் ஃபாசில், நடிகை அமலா பால் ஆகியோருக்கு எதிராக வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம்சாட்டி கேரள காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கேரள போக்குவரத்து ஆணைய உதவிச் செயலர் சந்தோஷ் தலைமையிலான அதிகாரிகள், கடந்த 6 -ஆம் தேதி புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவகத்துக்கு வந்து சோதனை
மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, கேரள போலீஸார் புதுச்சேரி வந்துள்ளனர். கார் வாங்கியது தொடர்பாக, அமலாபால் கொடுத்த ஆவணங்களை சாரம் போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் அவர்கள் சரிபார்த்தனர். மேலும் அந்த ஆவணங்களை, அலுவலகக் கணினியில் பதிவாகியுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வீடியோ பேட்டி ஒன்றில் அமலா பால் கூறியதாவது: எனக்குப் புதுச்சேரியில் சொத்து உள்ளது. என்னுடைய காருக்கு வரி கட்டியுள்ளேன். இதில் எங்கே வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது? என்னை ஸ்மார்ட் என அழையுங்கள். ஆனால் ஏமாற்றுக்காரர் என அழைக்கவேண்டாம். நான் ஒரு நடிகை. எனக்கு சென்னை, தில்லி, புதுச்சேரியில் சொத்துக்கள் உள்ளன. இந்த வருடம் மட்டும் நான் ஒரு கோடிக்கும் அதிகமாக வரி கட்டியுள்ளேன். இதுதொடர்பான கேள்விகளால் சோர்வடைந்துள்ளேன். பனாமா பேப்பர்ஸில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர்கள் வந்தபோது அதை
யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் என்னைப் போன்று ஒழுங்காக வரிகட்டுபவர்களை ஊடகங்கள் குறி வைத்துள்ளன எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.