செய்திகள்

‘Gulf ’ திரைப்படம் - வளைகுடாத் துயரங்கள் வடிவேலு காமெடி அல்ல!

சரோஜினி

இந்தியாவில் ஆண்டு தோறும் பல ஜேனர்களில் திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கல்வி, காதல், குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌ஷன் த்ரில்லர், அமானுஷ்ய த்ரில்லர், சரித்திரம், நாட்டார் வழக்கியல், பீரியட் திரைப்படங்கள், போர்ச் சூழல், குழந்தைகளுக்கான திரைப்படங்கள், என பல ஜேனர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் பணி நிமித்தம், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை ஈடுசெய்ய வருடக் கணக்காக வளைகுடாக்களில் தங்களது வாழ்வின் அயனான வருடங்களை இழந்து வாடும் இந்தியர்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தத் திரைப்படங்களும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. 

துபாய்க்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிய ஏஜண்டுகளின் முகத்திரையைக் கிழிப்பதாக இருந்தது சேரனின் ‘வெற்றிக் கொடி கட்டு திரைப்படம்’ ஆனால் அந்தத் திரைப்படத்தில் நாயகர்கள் இருவரையும் ஏஜண்ட் ஏமாற்றியதால், அவர்கள் துபாய் செல்ல முடியாமல் இந்தியாவில் எப்படிக் கஷ்டப் பட்டு முன்னேறுகிறார்கள் என்பதாகவே கதை செல்லும். ஒரு வேளை அந்த நாயகர்கள் துபாய் சென்றிருந்தால், அங்கே அவர்களது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? என்பதைப் பற்றி இங்கு யாருக்கும் யோசனைகள் இல்லை. ஏனெனில் சொந்தச் சகோதரனோ, கணவனோ, தகப்பனாரோ பணி நிமித்தம் துபாயில் சில வருடங்களைக் கழித்து விட்டு விடுமுறைக்கு இந்தியா வந்தாலும், சீராடிய ஓரிரு மாதங்களில் மறுபடியும் அதே அந்நிய தேசத்திற்கு தன் உறவைத் துரத்த நினைக்கும் உலகம் தானே இது. அதனால் அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்தெல்லாம் யோசிக்கத் தோன்றுவதில்லை. 

தமிழில் பாலகுமாரன் தனது நாவல்கள் சிலவற்றில் வேலைக்காக அரபு தேசங்களுக்குச் செல்வோர் படும் புறத் துயரங்களையும், அகத் துயரங்களையும் விவரித்திருப்பார். மலையாளத்தில் காவ்யா மாதவன் நடிப்பில் “பாலைவன ரோஜா’ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படமொன்றில் வீட்டு வேலைக்காக சவுதிக்கு அழைத்துச் செல்லப் படும் பெண் படும் இன்னல்கள் விவரிக்கப் பட்டிருக்கும். அதைத் தவிர வளைகுடாக்களில் துயருற்றுக் கொண்டிருக்கும் இந்தியர்களைப் பற்றிய பெரிய பதிவுகள் எதுவும் இதுவரை நமது தென்னிந்திய திரைப்படங்களில் இல்லை. அதைப் போக்க வந்திருக்கும் திரைப்படமே ‘கல்ஃப்’  வளைகுடாக்களில் வாடிக் கொண்டிருக்கும் பெயர் தெரியாத லட்சக் கணக்கான நாயகர்களின் இது வரை சொல்லப் படாத கதையைச் சொல்லும்படியாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படமே 'Gulf- Emotional stories of unsung Heroes'.

நம் மக்களுக்கு வளைகுடாத் துயரங்களையும் வடிவேலு காமெடியாக்கி ரசிப்பதில் இருக்கும் ஆர்வம், நிஜமாகவே அவர்களது கஷ்ட, நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்குமாயின், இந்தியாவில் வாழ வழியின்றி, சொற்ப சம்பளங்களுக்காக ஆண்டு தோறும் வளைகுடாக்களுக்குப் படையெடுக்கும் சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை குறையக் கூடும்.

சுமார் 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கலந்துரையாடி, அவர்களது கஷ்ட, நஷ்டங்களை நன்குணர்ந்து அதனடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கிறதாம். இந்த திரைப்படத்திற்கான ஸ்க்ரிப்ட். தற்போது துபாய், குவைத், ரஸ் அல் ஹைமா உள்ளிட்ட வளைகுடாப் பிரதேசங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி படம் வெளியீடுக்குத் தயாராக இருக்கிறதாம். மஸ்கட்டிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெளியாகியுள்ள இப்படத்தின் ஆடியோ டீஸருக்கு கிடைத்த வரவேற்பு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜூலை 2 ஆம் வாரத்தில் தெலுங்கில் வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம், அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்து தமிழ் காணவிருக்கலாம். எந்த மொழியில் வெளிவந்தாலும் இந்தியர்களின் பொதுப் பிரச்னைகளில் ஒன்றான வளைகுடாத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் படமெனில் சப் டைட்டில் மூலமாகவாவது நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது!

Gulf திரைப்படத்தின் Motion Poster...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT