நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்
பாஜக வழக்கறிஞரைத் தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்...
பாஜக வழக்கறிஞரைத் தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
வளசரவாக்கத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் சண்முக சுந்தரத்துடன் இணைந்து குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளைப் பகுதியில் அடுக்கு மாடி கட்ட நடிகர் சந்தானம் திட்டமிருந்தார். இதற்கான முன்பணத்தை சண்முக சுந்தரத்திடம் சந்தானம் அளித்துள்ளார். ஆனால் கட்டடம் கட்டும் திட்டத்தை சந்தானம் கைவிட்டார். இதனால், தான் வழங்கிய தொகையைத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ஒரு பகுதி பணம் மட்டும் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தைக் கொடுக்காமல் இருந்துள்ளார் சண்முக சுந்தரம்.
இந்நிலையில், தனக்குத் தரவேண்டிய பணத்தைக் கேட்பதற்காக சந்தானம் தனது மேலாளருடன் சண்முக சுந்தரத்தின் அலுவலகத்துக்குச் சென்றார். அப்போது சந்தானம் - சண்முக சுந்தரம் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. சண்முக சுந்தரத்தின் நண்பர் பிரேம் ஆனந்தும் இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்தச் சண்டையில் காயம் ஏற்பட்டதாக சந்தானமும் பிரேம் ஆனந்தும் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து சண்முக சுந்தரம், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சந்தானம் மீது புகார் அளித்துள்ளார்.
வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர். இதனால் அவருக்கு ஆதரவாக வளசரவாக்கத்தில் பாஜகவினர் திரண்டார்கள். சந்தானத்தைக் கைது செய்யும்படி அவர்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்தார்கள்.
நடிகர் சந்தானம் மற்றும் அவரது மேலாளர் ரமேஷ் ஆகியோர் மீது அவதூறாகப் பேசுதல், அடிதடி உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அதேபோல நடிகர் சந்தானம் அளித்த புகாரின் பேரில், வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், சண்முக சுந்தரம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.