முகப்பு
செய்திகள்

எங்களுக்குக் கட்டளையிட விஷால் யார்?: அபிராமி ராமநாதன் கண்டனம்

எங்களை நேரில் அழைத்து தயாரிப்பாளர் சங்கத்தினர் பேசியிருக்கலாம். இங்கு யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

திரையரங்குக் கட்டணம் குறித்த விஷாலின் கருத்துக்கு அபிராமி ராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திரையரங்க நுழைவுச் சீட்டு மீதான கேளிக்கை வரி 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் சந்திப்பு: கேளிக்கை வரியைக் குறைப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் தொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ள விலைக்கே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். திரையரங்குகளில் அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களை தண்ணீர் பாட்டில்களை கொண்டுவர திரையரங்குகள் அனுமதி அளிக்க வேண்டும். பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இனி ஆன்லைன் கட்டணம் வசூலிப்பதையும் தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை முதல் தமிழக அரசு நிர்ணயித்து, அறிவித்துள்ள கட்டணத்தை மட்டுமே திரையரங்குகளில் வசூலிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் திரையரங்குகள் மீது தமிழக அரசிடம் உடனடியாகப் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய டிக்கெட் விலை தொடர்பாகவும் விஷாலின் கட்டளைகள் குறித்தும் விவாதிக்க சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

பிறகு, செய்தியாளர்களிடம் அபிராமி ராமநாதன் கூறியதாவது:

திரையரங்குக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி.

திரையரங்குக் கட்டணம் தொடர்பாக விஷால் கட்டளையிட்டது வருத்தம் அளிக்கிறது. திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கட்டளையிட விஷால் யார்? எங்களை நேரில் அழைத்து தயாரிப்பாளர் சங்கத்தினர் பேசியிருக்கலாம். இங்கு யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது. திரையரங்க உரிமையாளர்களுடன் விஷால் கலந்தாலோசிக்க வேண்டும்.

டிக்கெட் விலை உயர்ந்ததால் தண்ணீர் பாட்டில் மற்றும் இதர உணவுப் பொருள்கள் எம்.ஆர்.பி. விலைக்கே விற்கப்படும். அம்மா தண்ணீர் பாட்டிலை அரசு வழங்கினால் திரையரங்குகளில் விற்கத் தயார். பஃப் விலை குறித்துக் கேட்கிறீர்கள். தேநீர் எல்லா இடங்களிலும் ஒரே விலை இருக்காது. அதேபோலத்தான் பஃப் விலையும். எனினும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் விலை இருக்கும்.

நியாயமற்ற வகையில் திரையரங்குக் கட்டணத்தை உயர்த்த மாட்டோம். இணையத் தளத்தில் முன்பதிவுக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.