தமிழ்ப் படங்களில் இதுவே மகத்தான சாதனை: 2.0 படம் ரூ. 400 கோடி வசூலித்துள்ளதாக லைகா அறிவிப்பு!
இது பிளாக்பஸ்டர் மட்டுமல்ல, மெகா பிளாக்பஸ்டர் என்று பெருமிதமாக ட்வீட் வெளியிட்டுள்ளது...
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது பிளாக்பஸ்டர் மட்டுமல்ல, மெகா பிளாக்பஸ்டர் என்று பெருமிதமாக ட்வீட் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமை 2.0 படத்துக்குக் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரை இந்த நான்கு நாள்களில் உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமை 2.0 படத்துக்குக் கிடைத்துள்ளது.
Advertisement
ஃபெண்டாஸ்டிக் பீட்ஸ் படத்தை விடவும் அதிகமாக வசூலித்து முதலிடம் பெற்றுள்ளது 2.0. மேலும் அமெரிக்காவில் 2018-ல் அதிகமாக வசூலித்த தென்னிந்திய படம் என்கிற பெருமையையும் அடைந்துள்ளது. தெலுங்குப் படமான ரங்கஸ்தலம் படம் 3.51 மில்லியன் டாலர் வசூலித்த நிலையில் 2.0 படம் இதுவரை 3.58 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 2.0 படத்தின் மூன்று மொழிகள் வசூலை வைத்து இந்தச் சாதனை மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 2.0 படத்தின் ஹிந்திப் பதிப்பு முதல் நான்கு நாள்களில் ரூ. 97.25 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூலை அடையவுள்ளதாக ஹிந்தியில் தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியிட்ட இயக்குநர் கரண் ஜோஹர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.