‘சஞ்சு’ படத்தின் வசூல் சாதனையை ரஜினியின் ‘2.0' படம் முறியடிக்கும்: ராஜூ மகாலிங்கம் உறுதி!
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது...
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, திரைப்படமாக வெளிவந்துள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த வெள்ளியன்று இந்தப் படம் வெளியானது.
இந்தியாவில் 4000 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 1300 திரையரங்குகளிலும் வெளியாகியுள்ள சஞ்சு படம், சமீபத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையான இந்தப் படம் இந்தியா முழுக்க ரூ. 46.71 கோடி வசூலித்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு ரூ. 46.50 கோடி வசூலித்ததே இந்தியாவில் ஒருநாளின் அதிகபட்சத் திரைப்பட வசூலாக இருந்தது. அந்தச் சாதனையை சஞ்சு படம் முறியடித்துள்ளது.
Advertisement
இதுகுறித்த செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ள 2.0 பட முன்னாள் தலைமை நிர்வாகி, ராஜூ மகாலிங்கம், 2.0 படம் வரட்டும் என்று ட்வீட் செய்துள்ளார். அதாவது, சஞ்சு பட வசூல் சாதனையை 2.0 படத்தின் வசூல் முறியடிக்கும் என்கிற அர்த்தத்தில் அவ்வாறு பதிவு செய்துள்ளார்.
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.
லைகா திரைப்பட நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றியவர், ராஜூ மகாலிங்கம். லைகா தயாரித்து வரும் 2.0 படத்தின் உருவாக்கத்தின்போது ரஜினியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. ரஜினி அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்தபோது லைகா நிறுவனத்திலிருந்து விலகினார். தற்போது, ரஜினி மக்கள் மன்ற செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.