செய்திகள்

நடிகையர் திலகம் திரைப்படத்தில் டோலிவுட் அளவுக்கு சாவித்ரியின் கோலிவுட் பங்களிப்பு விவரிக்கப்படவில்லையே ஏன்!

சரோஜினி

நடிகையர் திலகம் சினிமா விமர்சனங்களில் முன் வைக்கப்படும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு, இயக்குனர் அஷ்வின் நாக், சாவித்ரியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து விட்டு அதில் தமிழில் சாவித்ரியின் நடிப்பில் உன்னதமெனக் கருதப்படும் திரைப்படங்களான நவராத்திரி, பாவமன்னிப்பு, மகாதேவி, திருவிளையாடல், களத்தூர் கண்ணம்மா, குறித்தோ அல்லது சந்திரபாபு உடனான சினேகம் குறித்தோ ஏன் சில காட்சிகளைக் கூட சேர்க்கவில்லை. இதனால் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு முழுமையான திருப்தி கிடைக்கவில்லை, பிறகெப்படி இதை ஒரு பயோ பிக் என்று ஒப்புக் கொள்ளமுடியும் எனச் சிலர் விமர்சித்திருந்தனர். 

அதற்கு நடிகை சாவித்ரி, ஜெமினி கணேசனின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியின் பதில்;

இது முற்றிலும் தெலுங்குப் படம். படத்தை தமிழில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்காக தமிழிலும் வெளியிட்டிருக்கிறார்களே தவிர... அம்மாவின் தமிழ் திரைப்படப் பங்களிப்பையும் முழுதாகச் சேர்க்க வேண்டுமெனில் இன்னும் 3 மணி நேரம் அதிகம் தேவைப்படலாம். அதை இன்னொரு தனி திரைப்படமாகத்தான் எடுத்திருக்க முடியும். அம்மா, தெலுங்கு அளவுக்கு தமிழிலும் நிறையத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அம்மாவின் திரை வாழ்வில் அவர் அப்பாவுடன் நடித்த படங்கள், சிவாஜி மாமாவுடன் நடித்தவை, எம்ஜிஆர் சாருடன் நடித்தவை, ஏவிஎம் தயாரிப்பில் நடித்தவை, ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடித்தவை, ஆரூர்தாஸ் மாமா வசனத்தில் நடித்த திரைப்படங்கள் என ஏராளமானவை இருக்கின்றன அதோடு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஏவிஎம்முடன் இருந்த நட்பு, ஆருர்தாஸ் மாமாவுடன் இருந்த நட்பு என்று கதையை விரித்து மேலும் பல கதாபாத்திரங்களை படத்தில் விரித்திருந்தால் 3 மணி நேரம் போதாது. இந்தப் படத்தைப் பொருத்தவரை அம்மாவின் நினைவுகளைப் பொக்கிஷமாகக் கருதும் ரசிகர்களுக்கு அவரது வாழ்க்கையை முடிந்தவரை படமாக்கி ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது.

அம்மாவின் இழப்புக்கு அப்பாவை வில்லனாகக் கருதியவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அது அப்படியல்ல, சூழல்கள் அப்படி அமைந்ததால் அவர்களது வாழ்க்கை அப்படியானது என்ற புரிதலை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்க கூடும். நான் அவரது மகள் என்பதால் இதைக் கூறவில்லை. அப்பா, அம்மா இடையேயான மனவேறுபாடுகளுக்கு சூழல் தான் காரணம் என்பது படம் பார்த்த அனைவருக்குமே புரிந்திருக்கும். அதில் காட்டப்பட்டவை அத்தனையும் நிஜம், நிஜம் தவிர வேறெந்தக் கற்பனையும் இல்லை. அம்மாவின் வாழ்க்கை கொண்டாடப் பட வேண்டிய ஒன்று. இந்தப் படம் மூலமாக அது ஈடேறி இருக்கிறது. இதற்காக நான் இயக்குனர் அஷ்வின் நாக் அவர்களுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் என்றென்றும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

என்று மேற்கூறிய விமர்சனங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் நடிகை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி.

தவிர டோலிவுட் பங்களிப்பிலும் கூட என் டி ஆர் தொடர்பான காட்சிகளுக்கு மோஷன் பிக்சர் கேப்ச்சரிங் முறையையே படக்குழுவினர் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர அவருடனான காட்சிகளும் இதில் குறைவே. இதில் அக்கட பூமியின் எண்டி ஆர் ரசிகர்களுக்கும் சிறிது மனக்குறை என்று கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT