டோலிவுட்டே பாகுபலி பிரபாஸின் திருமணத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்க... கிணற்றுக்குள் வீசிய கல்லாக நாயகன் திருமணத் தேதியை அறிவிக்காமல் அது குறித்த எண்ணம் கூட இல்லாமல் அடுத்தடுத்த திரைப்படங்களை அறிவித்து எக்ஸைட் ஆகிக் கொண்டிருக்க. நாயகனுக்கு பதிலாக பாகுபலி இயக்குனர் வீட்டில் தான் இப்போது தடபுடலாக கல்யாண மேளச் சத்தம் ஒலிக்கவிருக்கிறதாம். ராஜமெளலிக்கு தான் கல்யாணமாகிப் பல வருஷம் ஆச்சே என்கிறீர்களா? கல்யாணம் ராஜமெளலிக்கு இல்லைங்க. அவரது மகன் எஸ் எஸ் கார்த்திகேயாவுக்காம்.
கார்த்திகேயா பாகுபலி 2 திரைப்படத்தின் இரண்டாவது யூனிட் இயக்குனராக பணிபுரிந்ததோடு, லைன் புரட்யூசராகவும் இயங்கியவர். பாகுபலி ஹிட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்து வேறு திரைப்படங்கள் இயக்க வாய்ப்புக் கிடைத்தும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உள்ளூர் விளையாட்டை ஊக்குவிப்போம் என்று கபடி டீம் தொடங்கி தெலங்கானா பிரீமியர் லீக்கில் இறக்கி விட்டார். கபடியில் இறங்கிய சூட்டோடு எஸ் எஸ் கார்த்திகேயாவுக்கு கல்யாணமும் ஃபிக்ஸ் ஆகியிருக்கிறது.
இது ஒருவகையில் லவ் கம் அரேஞ்டு மேரேஜ் என்று கூறப்படுகிறது. மணப்பெண் பூஜா பிரசாத் கர்நாடக இசைப்பாடகி. பூஜா பிரசாத்தின் சித்தப்பா யார் தெரியுமா? தாண்டவம், பைரவா, புலி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக வந்து மிரட்டினாரே ஜெகபதி பாபு அவரது அண்ணன் மகள் தான் இந்தப் பூஜா. பூஜாவுக்கும், எஸ் எஸ் கார்த்திகேயாவுக்குமான நிச்சயதார்த்தம் கடந்த 5 ஆம் தேதி ராஜமெளலி வீட்டில் வைத்து எளிமையாக நடத்தப்பட்டதாகத் தகவல். விழாவுக்கு பாகுபலி தயாரிப்பாளராக சோபு யர்லகடாவின் குடும்பத்தினர், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி உள்ளிட்டோருடன் குடும்பத்தினருக்கு நெருக்கமான மிகக் குறைந்த நபர்களே அழைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.