முகப்பு
செய்திகள்

அனுமதி வாங்கிக் கொண்டு செல்ஃபி எடுக்கத் தெரியாதா?: நடிகர் கார்த்தி கேள்வி!

ஒருவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுக்க அனுமதி வாங்கிக்கொண்டுதான் எடுக்கவேண்டும் என்கிற மரியாதையே...

Updated On : 4 மார்ச், 2019 at 5:49 PM
பகிர்:

கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜூலை காற்றில். இசை - ஜோஸ்வா ஸ்ரீதர். 

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தியிடம் வேடிக்கையாக செல்ஃபி எடுக்க முயன்றார் நடிகை கஸ்தூரி... அதைத் தவிர்த்துவிட்டு மேடையில் கார்த்தி பேசியதாவது:

ஒருவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுக்க அனுமதி வாங்கிக்கொண்டுதான் எடுக்கவேண்டும் என்கிற மரியாதையே இல்லாமல் போய்விட்டது. செல்போனில் பின்னாடி ஒரு பிளாஷ், முன்னாடி ஒரு பிளாஷ் உள்ளது, மைக்ரேன் தலைவலி உள்ளவன் என்ன ஆவான்? ஒரு செல்ஃபி எடுக்க, அனுமதி கேட்டுவிட்டுத்தான் எடுக்கவேண்டும் என்றுகூடத் தெரியாமல் உள்ளோம் என்று பேசினார். 

Advertisement

கடந்த நவம்பர் மாதம், தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டபோது அவருடன் இணைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.  இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவகுமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்தார்கள். பிறகு, அந்த இளைஞருக்கு ரூ. 21,000 மதிப்புள்ள செல்போனை வழங்கினார் சிவகுமார். இதன்பிறகு, அவர் மீண்டும் அதேபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கினார். கடந்த மாதம், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது, திருமண மண்டபத்தினுள் அவர் நுழைந்தபோது ரசிகர் ஒருவர் சிவகுமார் முகத்தின் முன்பு செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயன்றார். முகத்துக்கு நேராக செல்போனை நீட்டியதால் அதிருப்தியடைந்த சிவகுமார் செல்போனைத் தட்டிவிட்டு முன்னே சென்றார். இதையடுத்து இந்த விடியோவும் சமூகவலைத்தளத்தில் பரவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.