இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்: திலீப் குமார் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்
இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும்...
இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் என திலீப் குமார் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.
கடந்த ஜூன் 6-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஐந்து நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னா் அவா் வீடு திரும்பினாா். அவருக்கு மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் ஜூன் 29 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை திலீப் குமார் காலமானார்.
திலீப் குமாரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் கூறியதாவது:
இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி என்று கூறியுள்ளார்.