முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

1943-இல் ஒருநாள் திரு.வி.க.வின் வீட்டுக்கு வந்த மூதறிஞர் ராஜாஜி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆண்டு விழாவில் பேசுமாறு அழைத்தார்.

Updated On : 15 மார்ச் 2026, 3:28 pm IST
அ.ச. ஞானசம்பந்தம் | நிஜாம் | அசோகமித்திரன்
பகிர்:

'1943-இல் ஒருநாள் திரு.வி.க.வின் வீட்டுக்கு வந்த மூதறிஞர் ராஜாஜி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆண்டு விழாவில் பேசுமாறு அழைத்தார். 'அன்று தனக்கு வேறு பணி இருப்பதால், வர இயலாது' என்று திரு.வி.க. மறுத்தார். பக்கத்தில் இருந்த என்னைச் சுட்டிக்காட்டி, 'இவனை அழைத்துச் செல்லுங்க' என்றார்.

எனது முதலெழுத்துகளில் 'அ.ச.' என்பதைப் போடாமல் 'ஞானசம்பந்தம் ஆஃப் பச்சையப்பன்' என்று போட்டு, தமிழில் பேசுவார் என்றும் அழைப்பிதழை அச்சடித்து விநியோகம் செய்துவிட்டனர். விழா தொடங்கியது. ராஜாஜியின் ஒரு பக்கத்தில் நானும், மறுபக்கத்தில் டி.எம்.பி.மகாதேவனும் உட்கார்ந்திருந்தோம்.

நான் பேசுகையில், 'விவேகானந்தர் குரு ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருமுறை சொன்னார். இந்த அறிவெல்லாம் ஒரு பைசாவுக்கும் பயன்படாது. அறிவைவிட உயர்ந்தது உணர்வு. அதையும்விட உயர்ந்தது இறை உணர்வு. அந்த நிலையை அடைந்துவிட்டவர் திருவடிகளில் அறிவுக் களஞ்சியமான விவேகானந்தர் போய் விழுவதில் புதுமை ஒன்றும் இல்லை.

Advertisement

Advertisement

இப்படித் தொடங்கி எனக்கு அளித்த 20 நிமிடங்களும் இதே கருத்தைப் பேசினேன். இன்னும் பேசுமாறு ராஜாஜி அறிவுறுத்தினார். கூட்டத்தினரும் ஆமோதித்தனர். மறுபடியும் விட்ட இடத்தில் தொடங்கி முழுப் பேச்சிலும் அறிவு, உணர்வு, போராட்டத்தையே வளர்த்திக் காட்டி ஆன்ம முன்னேற்றம் அடைய வேண்டுமானால் அறிவு துணை செய்யாது. உணர்வுதான் தேவை' என்று கூறி முடித்தேன்.

எனது சாதுர்யத்தை அறிந்த ராஜாஜி முடிவுரையில், 'அறிவு என்றால் என்ன? உணர்வு என்றால் என்ன?' என ஆரம்பித்து முக்கால் மணி நேரம் பேசினார்' என்று பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் தனது 'நான் கண்ட பெரியவர்கள்' எனும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டில் நிஜாம் சமஸ்தானத்தில் விதர்பா ஏழை முஸ்லிம் அகதிகள் வந்து சேர்ந்தனர். நிஜாம் சமஸ்தானத்தில் இருந்த ஹிந்துக்களில் பலர் சமஸ்தானத்தைவிட்டு வெளியேறினர். சில குடும்பங்கள் நிரந்தரமாகவே வெளியேறின. அதைப் பார்த்து நிஜாம் அரசு உடனே ஓர் உத்தரவு பிறப்பித்தது. யாரும் உரிய காரணம் இல்லாமல், சமஸ்தானத்தைவிட்டு வெளியேற முடியாது. யார் ரயிலில் போக வேண்டுமானாலும் பயணச் சீட்டு வாங்கும் பணத்துடன் 'போலீஸ் பர்மிட்'டும் வைத்திருக்க வேண்டும். அதாவது இந்தியாவுக்கு உள்ளேயே போக 'பாஸ்போர்ட்' வேண்டும்.

ரஜாக்கர்கள் தலைவர் ரஜ்வி, நிஜாமின் பிரதமர் வெயிக் அலி போன்றோர் காவலில் வைக்கப்பட்டனர். வெயிக் அலியை நிஜாம் தனது அமைச்சராக அமர்த்திக் கொள்ளாமல் இருந்திருந்தால், எப்போதோ சுமுகமாகச் சிக்கல் தீர்ந்துவிட்டிருக்கும். ஆதலால் வெயிக் அலியைத் தான் குற்றவாளிகளுள் மிகவும் கடுமையாகக் காவல் காத்திருக்க வேண்டும். ஆனால் நிஜாம் அரசு இந்திய ராணுவ ஆட்சியில் இருக்கும்போதே வெயிக் அலி தன் குடும்பத்தாரோடு ஏராளமான பொக்கிஷங்களோடு பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டார்.

சூஃபியோகியின் சாபம் பலித்துவிட்டது. சமஸ்தானம் என்ற ஒன்று இருக்காது என்று சொன்னது போலவே 1956- இல் இருந்து ஹைதராபாத் மாநிலம் அல்லது சமஸ்தானம் என்று ஏதும் மிச்சம் இருக்கவில்லை. நிஜாமின் ஆட்சிக்கு உள்பட்டிருந்த நாடு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. பின்னர், அவை மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டுவிட்டன.

'என் எழுத்துகளை இரண்டாம் முறை படிப்பது அவசியமாகிவருகிறது. முதல் வாசிப்பில் பல தகவல்கள் கவனத்தில் இருந்து பிறழ்ந்துவிடுகின்றன. பலவற்றுக்குச் சம்பந்தமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கதையைத் தெரிந்துகொண்டு இரண்டாம் முறை வாசிக்கும்போது நிறைய விவரங்கள் தெளிவாகின்றன. ஆனால், நான் யாரையும் இரண்டு முறை வாசியுங்கள் என்று வற்புறுத்த முடியாது. முடிந்தால் வாசியுங்கள் என்றுதான் கூற முடியும்' என்று 'என் பயணம்' எனும் நூலில் இவ்வாறு அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

குடிமக்கள் 400 பேர், அவர்களுக்காக தனி அமைச்சரவை, தனி கரன்சி எனப் புதிய நாட்டை 2019-இல் உருவாக்கி, அதன் அதிபராகியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் டேனியல் ஜாக்ஸன். குரோஷியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையே 'டானுப்' நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் 'வெர்டிஸ் குடியரசு' எனும் நாடு உருவாகியுள்ளது. உலகிலேயே கடைசியாக உருவான நாடு தெற்கு சூடான். அதற்கு அடுத்து உருவான நாடாக 'வெர்டிஸ் குடியரசு' அறியப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments