புஷ்பா வெற்றியை முந்துமா வலிமை? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் அஜித்குமாரின் வலிமை படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்பபடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இத்திரைப்படம் வட மாநிலங்களில் பெரும் வெற்றிபெற்றது.
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படமும் அனைத்து மொழிகளிலும் வெளியாவதால், புஷ்பா வெற்றியை முந்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரி்ப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவிருக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, தபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.