ஹவுஸ்புல்..! மஞ்சுமெல் பாய்ஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.
பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்.
இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், கேரளத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் மஞ்சுமேல் பாய்ஸ் திரைக்காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்படம் வெளியான நான்கு நாள்களில் உலகளவில் ரூ.36.11 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேரளத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் மஞ்சுமெல் பாய்ஸ் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் இப்படம் ரூ.100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.