இயக்குநர் அமீர் இயக்கிய, நடிகர் கார்த்தியின் அறிமுக படமான பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 300 நாள்கள் வரை திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றுவரை கார்த்தி நடித்த படங்களிலேயே முக்கியமான படமாக இதுவே கருதப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தை தொழில்நுட்ப மெருகேற்றல் செய்து மறுவெளியீடு செய்ய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன், பருத்திவீரன் படத்தில் தன் பணத்தைப் பொய்கணக்குக் கூறி இயக்குநர் அமீர் திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக, இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதி ராஜா உள்பட பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
இதையும் படிக்க: அமீர் நன்றாக திருடுவார்..! சர்ச்சையாகும் ஞானவேல் ராஜா பேட்டி!
இதனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தொடர்ந்து, இப்பிரச்னை அமைதியானது. காரணம், நடிகர் சூர்யா குடும்பத்தினர் பருத்திவீரனுக்காக இயக்குநர் அமீர் செலவு செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, பருத்திவீரன் மறுவெளியீடு செய்யப்படம் தகவல் வெளியாகியுள்ளதால் இந்த வெளியீட்டின் மூலம் கிடைக்கும் தொகையை அமீருக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.