தெருக்கூத்து கலைஞரான சங்ககிரி ராஜ்குமார் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வெங்காயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ஒன் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ராஜ்குமாரின் குடும்பத்தினர் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் வெங்காயம் திரைப்படம் தெருக்கூத்து கலைஞர்களை மையமாகக் கொண்டு உருவானது.
தற்போது, உலகம் முழுவதும் தெருக்கூத்தைக் கொண்டு செல்லும் முயற்சியில் ராஜ்குமார் இருக்கிறார். ஒவ்வொரு நாடாக சென்று அங்குள்ள தமிழ் மக்களுக்கு தெருக்கூத்தைக் கற்றுத் தருகிறார்.
இந்த நிலையில், விரைவில் அமெரிக்காவில் 4500 பார்வையாளர்கள் மத்தியில் தெருக்கூத்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஓராண்டு அங்கேயே தங்கி 1000 தெருக்கூத்து கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதையும் திட்டமாக வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு நடிகர் நெப்போலியன் தலைமை தாங்குகிறார். இதுகுறித்து, ராஜ்குமார் முகநூலில் பதிவொன்றை வெளியிட்டார்.
அதில், “தெருக்கூத்து குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நான் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தெருக்கூத்து கலையை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது.
கோவில் திருவிழாக்களில் மட்டும் நடத்தப்படுகிற கலையாக இல்லாமல் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் படி, தெருக்கூத்தின் இலக்கணம் சிறிதும் மாறாமல் அதன் வடிவத்தை சீர் செய்து உலகெங்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டேன்.
முதன்முதலாக கம்போடிய அங்கோர்வாட் முன்பாக தொடங்கிய பயணம், இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும் நீண்டிருக்கிறது.
இன்னும் தெருக்கூத்தின் மீது மக்களின் அழுத்தமான பார்வையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்படத் தொடங்கினேன்.
அதன் பலனாக வருகிற மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில், உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரம்மாண்ட தெருக்கூத்தை நடத்த உள்ளேன்.
அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிக்காகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் கடை ஏழு வள்ளல்களில் புகழ் பெற்ற அதியமானின் வரலாற்று கதையை தெருக்கூத்து வடிவில் எழுதி நான் இயக்குகிறேன். நெப்போலியன் தலைமை தாங்குகிறார்.
நிகழ்த்து கலை வரலாற்றில் புதியவர்களுக்கு பயிற்சி அளித்து நிகழ்த்தப்படும் கலைகளில் இதுவே பிரம்மாண்டமான நிகழ்வு என்பதால் இது கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம்பெறுகிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.