பிக் பாஸ் போட்டியாளர்கள் 
செய்திகள்

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

பிக் பாஸ் சீசன் 9 -ல் பங்கேற்றுள்ள 20 போட்டியாளர்களின் முழு விவரங்கள்...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி பிரமாண்டமாகத் தொடங்கியது. நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். விஜய் சேதுபதி இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

போட்டியின் தொடக்க நாளான இன்று (அக். 5) போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

திவாகர்

பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக மருத்துவர் திவாகர் நுழைந்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், அடிப்படையில் தொழில்முறை (பிசியோதெரபி) மருத்துவர்.

அரோரா சின்கிளேர்

இரண்டாவது போட்டியாளராக அரோரா சின்கிளேர் சென்றுள்ளார். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், சமூக வலைதளப் பக்கங்களில் அதிகப்படியாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தாவரவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். 21 வயதில் மாடலிங் துறையைத் தேர்வு செய்து, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

எஃப்.ஜே.

மூன்றாவது போட்டியாளராக ராப் பாடகர் எஃப் ஜே பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். இவர் ஒரு பீட் பாக்ஸ் கலைஞர். விவசாயிகள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக தனது பாடல்களை எழுதி பாடுவது இவரது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது.

வி.ஜே. பார்வதி

பிக் பாஸ் வீட்டின் நான்காவது போட்டியாளராக வி.ஜே பார்வதி நுழைந்துள்ளார். யூடியுப் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான இவர், தற்போது சின்ன திரை பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

துஷார்

பிக் பாஸ் வீட்டின் 5 ஆவது போட்டியாளர் துஷார் ஜெயபிரகாஷ். தோற்றத்தில் கொரியனைச் சேர்ந்தவரைப் போல இருந்தாலும், தமிழ் கலாசாரத்தைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.

நடிகனாக வேண்டும் என்ற கனவில், சினிமா துறைக்கான வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார். சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனின் மிகப் பெரிய ரசிகர்.

பிஸ்னஸ் மார்கெட்டிங் படித்து வேலை செய்துகொண்டிருந்த இவர், தற்போது பிக் பாஸ் போட்டியாளராகக் களமிறங்கியுள்ளார்.

கனி

6வது போட்டியாளர் கனி. குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளராகப் பங்கேற்று, அந்த சீசனின் வெற்றியாளராகத் தேர்வானவர். இயக்குநர் அகத்தியனின் மகள். சில படங்களில் நடித்துள்ளார். சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் நன்கு அறியப்படுபவர்.

சபரி

7வது போட்டியாளர் சபரி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரின் நாயகனாக நடித்தவர். தற்போது பொன்னி தொடரில் நடித்து பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் செல்லும் லட்சியத்தோடு பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்.

பிரவீன் காந்தி

பிக் பாஸ் வீட்டின் 8வது போட்டியாளராக இயக்குநர் பிரவீன் காந்தி நுழைந்துள்ளார். ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களின் இயக்குநரான பிரவீன் காந்தி, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளால் விமர்சிக்கப்பட்டு வந்தவர்.

நடிகராக வேண்டும் என்கிற கனவோடு சினிமாவிற்குள் நுழைந்த பிரவீன் காந்தி, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாததால் நடிக்கும் வாய்ப்பு அமையாததால், இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தார்.

1997 ஆம் ஆண்டு ரட்சகன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகரான நாகர்ஜூனா , உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் ஆகியோரை நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார். ரட்சகன் படத்தில் இடம்பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் இன்றளவும் மக்களால் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள ஏ.ஆர் முருகதாஸ் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் பிரவீன் காந்தியின் உதவி இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கெமி

9வது போட்டியாளர் நடிகை கெமி. சென்னையில் பிறந்த இவர், கூடைப்பந்தாட்ட வீராங்கனை. இந்தியாவுக்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தவர்.

ஆதிரை

10வது போட்டியாளர் ஆதிரை. திருப்பூரைச் சேர்ந்த இவர் விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்த நிலையில், கரோனாவால் முடங்கிப்போனார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து விலகி மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 ஆவது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

ரம்யா ஜோ

11வது போட்டியாளராக ரம்யா ஜோ களமிறங்கியுள்ளார். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞரான இவர், ஆசிரமத்தில் தனித்து வளர்ந்து, நடிகையாக பலரை சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

இவரின் உண்மையான பெயர் ஸ்டெல்லா. மைசூரைச் சேர்ந்த இவர், படிக்க வைக்க நபர்கள் இல்லாததால் ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். தனது பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்ததால், 2 வயது முதலே தனது சகோதரிகளுடன் ஆசிரமத்தில் வளர்ந்தவர்.

படிக்க போதிய பொருளாதார சூழல் இல்லாததால், பணத்திற்காக ஆடல், பாடல் நடன நிகழ்ச்சிகளுக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த அனுபவத்தால் சினிமா மீது கனவுகளை வளர்த்துக்கொண்டார்.

அதனை நோக்கிய முயற்சியாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். ஆசிரமத்தில் தனியாக வளர்ந்ததால், பிக் பாஸ் வீட்டில் 10 - 15 பேரும் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் வருவதாக அறிமுக நிகழ்ச்சியில் கூறினார்.

கானா வினோத்

12வது போட்டியாளர் கானா வினோத். சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா இசை கலைஞரான இவர், தனியிசை கானா பாடல்களைப் பாடி வெளியிட்டுள்ளார். சமூக கருத்துகளைக் கொண்ட கானா பாடல்களைப் பாடுவது இவரின் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. கானா என்றாலே பெண்களை இழிவுபடுத்திப் பாடுவது என்ற பிம்பத்தை உடைப்பதை குறிக்கோளாகக் கொண்டவர். அதனால், சினிமாவிலும் சில வாய்ப்புகளைத் தவிர்த்துள்ளார். தற்போது பின்தங்கியுள்ள குடும்ப சூழலை மாற்றுவதற்காக காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

வியானா

13வது போட்டியாளர் வியானா. விமானப் பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்த வியானா, பிறகு மாடலிங் துறைக்குள் நுழைந்தார். சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிரவீன்

14வது போட்டியாளர் பிரவீன். நடிகர் , பாடகர் , என பல்வேறு திறமைகளை கொண்ட இவர், 7 மொழிகள் பேசக்கூடியவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் அதற்கு தயாராகி வரும் பிரவீன், சின்ன மருமகள் , சிந்து பைரவி ஆகிய தொடர்களில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

சுபிக்‌ஷா

பிக் பாஸ் சீசன் 9 -ல் 15வது போட்டியாளர் சுபிக்‌ஷா. தூத்துக்குடியைச் சேர்ந்த சுபிக்‌ஷா பட்டதாரி பெண்மணி. குடும்ப சூழல் காரணமாகவும், மீனவ சமுதாய பிரச்னைகளை வெளி உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் யூடியூபரானார். அதில் மீன்பிடிக்கச் சென்று அதில் சந்திக்கும் சவால்களை பதிவிட்டு வந்தார். கடலுணவு சார்ந்த விடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

அப்சரா

16வது போட்டியாளர் அப்சரா. கன்னியாகுமரியைச் சேர்ந்த திருநங்கையான அப்சரா, 2013 ஆம் ஆண்டு தாய்லாந்தில் இந்தியா சார்பாக மிஸ் இன்டர்நேஷ்னல் குயின் பட்டம் வென்றவர். மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாடலிங் துறையிலும் தற்போது அசத்தி வருகிறார். தன்னைப் போன்ற மாற்றுப் பாலினத்தவர்கள் சமூகத்தின் தடைகளை உடைத்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பிக் பாஸ் சென்றுள்ளார்.

நந்தினி

17வது போட்டியாளர் நந்தினி. கோவையைச் சேர்ந்தவர். அப்பாவை இழந்து தனியொருவராக குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், தொடர்ந்து அம்மாவையும் இழந்துள்ளார். தற்போது தனியொருவராக இருந்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

உடற்பயிற்சியையும் யோகாவையும் வாழ்வில் மிக முக்கியமாகக் கருதுபவர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர். பெற்றோர் இல்லாத நிலையில், தனது தம்பி மற்றும் தனது எதிர்காலத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.

விக்கல்ஸ் விக்ரம்

18வது போட்டியாளர் விக்ரம். கார்ப்பரேட்டுகளில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். விக்கல்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பல காமெடி விடியோக்களைப் பதிவிட்டு வருபவர். ஏ.ஆர். ரகுமானை கேலிசெய்யும் வகையில் இவர்கள் பதிவிட்டிருந்த விடியோவை, ஏ.ஆர். ரகுமானே பாரட்டி பகிர்ந்திருந்தார்.

கம்ருதின்

19 வது போட்டியாளர் கம்ருதின். சென்னையைச் சேர்ந்த இவர் மகாநதி தொடரின் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர். ஐடி துறையில் நல்ல ஊதியத்தில் இருந்த பணியை விட்டு, நடிப்புத் துறையைத் தேர்வு செய்துள்ளார். படங்களில் நாயகனாக வேண்டும் என்ற கனவுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

கலையரசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசிப் போட்டியாளர் கலையரசன். தேனியைச் சேர்ந்த இவர், இளம் வயதிலேயே குடும்ப வாழ்வின் கடினமான சூழலால் காசிக்குச் சென்று அகோரியானார். திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதால், மீண்டும் தேனிக்கு திரும்பி குடும்ப வாழ்வை ஏற்று வாழ்ந்து வருகிறார்.

அகோரி என்ற தனது கசப்பான பழமை மறைந்து பிக் பாஸ் கலையரசன் என்ற புதிய மனிதனாக வெளியே தெரிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிக் பாஸ் சென்றுள்ளார்.

இதையும் படிக்க | எளிய பின்னணியில் இருந்து பிக் பாஸ் சென்ற ரம்யா ஜோ! யார் இவர்?

Bigg boss season 9 contest full list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் தீ: பயணிகள் கீழே இறங்கியதால் பரபரப்பு

யார் புரிய வைப்பது?

‘முதியோா் தரிசனம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்’

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: இரு வடமாநில இளைஞா்கள் கைது

பருவ மழை: பள்ளிகள், மாணவா்கள் பாதுகாப்பு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

SCROLL FOR NEXT