மாட்டிறைச்சி காட்சி.. தணிக்கை விவகாரம்! ஷேன் நிகாமின் படத்தை பார்க்க நீதிமன்றம் முடிவு!
நடிகர் ஷேன் நிகாமின் ‘ஹால்’ திரைப்படத்தை பார்க்க கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது குறித்து...
தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தின் விசாரணைக்காக, மலையாள நடிகர் ஷேன் நிகாமின் “ஹால்” திரைப்படத்தை பார்க்க கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மலையாள நடிகர் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ள, ‘ஹால்’ திரைப்படத்தில் மாட்டிறைச்சி பிரியாணி உண்ணும் காட்சி மற்றும் சில வசனங்களை நீக்க, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. அதற்கு, படக்குழு மறுப்பு தெரிவித்ததால் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து, ஹால் படக்குழுவினர் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்த விசாரணையில், ஹால் திரைப்படத்தை நீதிமன்றமோ அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதியோ பார்க்க வேண்டும் என்று படக்குழுவின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீதிபதி வி.ஜி. அருண் ஹால் திரைப்படத்தை விரைவில் பார்க்கபோவதாகக் கூறியதுடன், திரையிடலில் தணிக்கை வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, அறிமுக இயக்குநர் வீர் இயக்கத்தில், நடிகர்கள் ஷேன் நிகாம், சாக்ஷி வைதியா ஆகியோரின் நடிப்பில் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘ஹால்’ திரைப்படம், கடந்த செப்.12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு; பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க: தேசிய விருது பார்சல்... பாராட்டுகளைப் பெறும் பசுபதி!