அரசன் புரோமோ வடசென்னை கதையுடன் தொடர்புடையது ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
இந்திய சினிமாவில் நிறைய கேங்ஸ்டர் கதைகள் உருவானாலும் பல திரைப்படங்கள் கமர்சியல் அம்சங்களுடன் நின்றுவிட்டன. ஆனால், புதுப்பேட்டை, சுப்பிரமணியபுரம், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், கம்மட்டிபாடம் ஆகிய படங்களில் ரௌடிகளின் வாழ்க்கைகளும் எதற்காக ஆயுதங்களை எடுத்தார்கள் என்பதையும் மனிதர்கள் எப்படியெல்லாம் தங்கள் ஆணவங்களுடன் மோதிச் சிதைகிறார்கள் என்பதையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை மையமாக வைத்து கதை எழுதப்பட்டதால் இன்றும் ரசிகர்களிடம் பெரிய கவனத்தைக் கோருகின்றன.
அப்படி, வெற்றி மாறன் இயக்கிய வடசென்னை திரைப்படமும் அதிகப்படியான விமர்சனங்களையும் கொண்டாட்டங்களையும் பெற்றது. முக்கியமாக, கடந்த சில ஆண்டுகளில் அதிகம் டீகோடிங் (decoding) செய்யப்பட்ட படமும் வடசென்னையாகத்தான் இருக்கும். 1990-களில் தலைதூக்கிய ரௌடிகளின் எழுச்சியையும் அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட அதிகார மாற்றங்களுமாக நம்பிக்கை, துரோகம், வன்மம், காமம் என அக உலகையும் அது விரிந்து செல்வதற்கான சூழ்நிலைகளையும் நுணுக்கமாக இப்படம் பதிவு செய்தது.
தற்போது, வடசென்னை கதையுடன் தொடர்புகொண்ட அரசன் திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார். இதில், சிம்பு நாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னையில் இடம்பெற்றவர்களும் நடிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரசன் புரோமோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 நிமிட புரோமோவில் சிம்பு எங்கிருந்து வந்தார், என்ன மாதிரியான ஆள் என்கிற எதுவும் சொல்லப்படவில்லை. மேலும், வடசென்னை கதாபாத்திரங்களும் இதில் இடம்பெறவில்லை. ஆனால், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? புரோமோ காட்சிகளை வைத்தே, ஆளாளுக்கு ஒரு கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி இருக்குமா? இல்லை, இப்படி இருக்குமா? தனுஷ் கொலை செய்வதற்கு முன்பே சிம்பு ரௌடியாகிவிட்டார் என ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள்.
நாமும் சில ஊகங்களைக் கொஞ்சம் லாஜிக்காக முன்வைத்தால் என்ன? (இது ஊகம்தான். இப்படியும் இருக்கலாம். ஒரு சுவாரஸ்யத்திற்காக...)
ஊகம் - 1
அரசன் புரோமோவின் ஆரம்பக் காட்சிகள் நிகழ்காலத்தில் நடக்கிறது. சிம்பு தான் குற்றம் செய்யவில்லை எனும்போது ப்ளாஷ்பேக்காக 1991-க்கு காட்சிகள் நகர்கின்றன. முதல் வசனமாக, கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தைப் பார்க்க நண்பர்களுடன் சென்றதைச் சொல்கிறார். (இப்படம் வெளியானது ஏப்.14, 1991). அதாவது, வடசென்னையின் இளவயது அன்பு (தனுஷ்) அறிமுகமாவது ராஜீவ் காந்தியின் படுகொலை நாளான மே. 21, 1991. ஏன் அந்த நிகழ்வு முக்கியமாகக் காட்டப்படுகிறது? புரோமோவில் சிம்பு நடந்துவரும்போது ஒரு வீட்டின் சுவரில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் போஸ்டரில், உண்மைக் குற்றவாளிகளான சிவராசா மற்றும் தனுவின் புகைப்படம் இருக்கிறது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
தரவுகளின் படி, மே. 29, 1991 அன்றே இப்படுகொலையில் தொடர்புடையவர்களைக் காவல்துறை அடையாளம் காண்கிறது. இதில், தனு குண்டை வெடிக்கச் செய்து உயிரிழக்க, சிவராசா தப்பிச் செல்கிறார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூருவில் தற்கொலை செய்கிறார். (கேப்டன் பிரபாகரன் 300 நாள்கள் திரையரங்குகளில் ஓடியது. சிவராசாவும் சம்பவம் நடந்து 3 மாதம் வரை உயிருடனே இருக்கிறார். ஆக, சிம்பு செய்த கொலைகள் இடைப்பட்ட காலங்களில் நடந்திருப்பது நேரடியாகவே வடசென்னை கதையுடன் தொடர்பாகிறது. காரணம், ஏப்.14, 1991-ல் கேப்டன் பிரபாகரன் மட்டுமல்ல அதற்கு ஒருநாள் முன்பாக அதாவது ஏப். 13 அன்று என் ராசாவின் மனசிலே படமும் ஏப். 12 ஆம் தேதி சின்னத்தம்பி திரைப்படமும் வெளியாகின. இப்படங்களின் சுவர் ஓவியங்கள் வடசென்னை படத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஊகம் - 2
அரசன் வடசென்னை கதாபாத்திரங்களுடன் தொடர்புடையது என்பதால் சிம்பு இதில் யாருடைய ஆளாக இருப்பார்? புரோமோவிலேயே சிம்பு கொலை செய்து நடந்துவரும்போது ரத்தக்கறை படிந்த தன் கையைப் பார்க்கிறார். நாம் இதில் மாட்டிக்கொண்டோமே என்கிற பரிதவிப்புக்கான பின்னணி இசை இடம்பெறுவதால் தனுஷைப் போல சந்தர்ப்ப சூழ்நிலையே சிம்புவையும் கொலையாளியாக மாற்றுகிறது. ஆனால், சுவாரஸ்யமாக இதில் ஒரு டீகோடீங் இருக்கிறது. குணா (சமுத்திரக்கனி), வேலு (பவன்) இருவரும் கூட்டு. மறுபுறம் செந்தில் (கிஷோர்), ஜாவா பழனி (தீனா) ஓர் அணி.
வடசென்னை கதை ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை இடங்களையே மையமாக வைத்து உருவானாலும் இருசக்கர வாகனங்கள் இடம்பெறும்போது குணா, வேலு ஆள்கள் TN 04 பதிவெண்ணையும் செந்தில், பழனி வாகனங்கள் TN 01-யையும் பயன்படுத்துகின்றனர். இதனடிப்படையில் பார்த்தால், புரோமோவில் சிம்பு நடந்துவரும்போது TN 01 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் இடம்பெற்றதுடன், கொலை நடந்தபோது நான் ஊரில் இல்லை என்றும் சொல்கிறார். இதனால், சிம்பு, ஜாவா பழனி மற்றும் பத்மா (ஐஸ்வர்யா ராஜேஷ்) வசிக்கும் ஏரியாவில் இருந்திருக்கலாம்!
ஊகம் - 3
கொஞ்சம் சிக்கலான ஊகம்தான். ஆனால், யோசித்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது. வடசென்னையில் இளம்வயது கதாபாத்திரங்களில் அன்புவும், தம்பியும் (டேனியல் பாலாஜி) மிக ஸ்டைலாக பெல்ட் அணிந்திருந்தார்கள். ராஜன் அறிமுகக்காட்சியில் வெற்றி மாறன் சொல்வாரே, கடலுக்குச் சென்று ஊக்கடித்து செண்ட் பாட்டில், ஜீன்ஸ், ஷூக்கள் என எல்லாத்தையும் ராஜன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு விற்பார் என. ஒருவேளை, அதில் பெல்ட்களும் அடங்கியிருக்கலாம். தம்பி நல்ல கேரம்போர்ட் வீரர் என்பதாலேயே அன்புவை அதில் கவனம் செலுத்தச் சொல்வார். அதற்கான ரிஸ்க்குகளையும் எடுப்பார்.
ஒருவேளை தம்பியே நல்ல பெல்ட்டுகளை தனுஷுக்கு கொடுத்திருக்கலாம். அதேபோல், சிம்புவும் தனித்துவமான பக்குள் (buckle) ஒன்றை அணிந்துள்ளார். சிம்புவும் நல்ல கேரம் வீரராக இருந்து அதற்காக தம்பி வித்தியாசமான பெல்ட்டை கொடுத்திருக்கலாம். 1987-ல் ராஜன் கொல்லப்படுகிறார். அதன்பின், தம்பி ஊக்கடிக்க போவதில்லை. லாஜிக்காக 4 ஆண்டுகள் வரை பக்குள் துருப்பிடிக்காமலா இருக்கப்போகிறது எனக் கேட்கக்கூடாது. அப்படிக் கேட்டால், ஊகங்களுக்கு என்ன மரியாதை? :)
இதையும் படிக்க: அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் இந்தியப் பிரபலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.