அடிப்படைத் தேவை
புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், இறந்த வாக்காளர்கள் நீக்கம், வாக்காளர்களின் இடப் பெயர்ச்சி ஆகிய மாறுபடும் காரணிகளால் வாக்காளர் பட்டியல் 100% சரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதோடு, தேர்தலன்று வாக்களிப்போரின் மனப்பாங்கு, அன்றைய களச்சூழல் ஆகியவையே தேர்தல் முடிவை நிர்ணயிக்கின்றன. எனினும், வாக்காளர் பட்டியல் தவறில்லாமல் இருக்க வேண்டியது தேர்தலின் அடிப்படைத் தேவை. அதற்கான முயற்சியே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி.
கே.ராமநாதன், மதுரை.
சேர்க்கவும் நீக்கவும்...
தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது, இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் வாக்குரிமை வைத்துள்ளவர்களை நீக்குவது போன்றவையே பிரதான நோக்கம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது என்பதால் நீக்கல், சேர்த்தல் எனப் பல வகைகளில் இருக்கும் என்பதை எந்தக் கட்சியும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியில்கூட சிலர் இது கூடாது எனக் கூறவில்லை. தள்ளிவைப்பது நல்லது என்றும், கூடாது என்றும் கூறுவது ஏற்புடையது அல்ல.
க. அருச்சுனன், செங்கல்பட்டு.
வேறு வழியில்லை
ஜனநாயக நாட்டில் வாக்குரிமை சில காரணங்களுக்காக மறுக்கப்படும் சூழல் ஏற்படும்போது உரியவர்களிடம் முறையிட்டும் பலனில்லை என்ற சூழலில் நீதிமன்றத்தை அணுகுவதுதான் சாலச் சிறந்தது. தேர்தல் ஆணையம் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்; அவ்வாறு பதிலளிக்காமல் உள்நோக்கத்துடன் செயல்படும்போது ஜனநாயக நாட்டில் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
அவசியமானது
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் மிக மிக முக்கியமானது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நிச்சயம் தேவை. இந்த உண்மை புரியாமல் திமுக வழக்கு தொடுத்திருப்பது வியப்பளிக்கிறது. இப்படி சிறப்பு தீவிர திருத்தம் செய்வதால் கள்ள வாக்குகள் தவிர்க்கப்படும். நீதிமன்றத்தை நாடி இருப்பது திமுகவினருக்கு எதிர்மறையான நிகழ்வுகளே நடக்கும் என்பது உண்மை.
நந்தினி கிருஷ்ணன், மும்பை.
ஜனநாயக முரண்
சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருக்கும்போது அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் அனைத்தையும் சரிபார்த்து வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் என்பது நடைமுறை சாத்தியமன்று. ஜனநாயக நாட்டில் உயிரோடு இருக்கும் வாக்காளர்கள் பெயர்ப் பட்டியலில் விடுபட்டு இருப்பது ஜனநாயக முரண். குறுகிய கால இடைவெளியில் சரிபார்ப்புப் பணியை முழுமையாக நிறைவு செய்ய இயலாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
முதல்வர் கருத்து சரியே...
பிகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த போது பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். குறிப்பாக, காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இந்தக் கருத்து சட்ட ரீதியாக தவறு என மக்கள் நம்பும்படியாக எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இந்த நிலையில், தேர்தல் ஆணைய நடவடிக்கையை தமிழக முதல்வர் எதிர்ப்பதில், அவரது கருத்தை ஏற்கலாம்.
கா.ராமசாமி, கீழப்பனையூர்.
உள்நோக்கம் உடையது
நீதிமன்றங்களில் தீர்வு காண முடியாமல் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போதும், நீதிமன்றத்தை அரசியல் மோதல் களமாக்க வேண்டாமென்று கடிந்து கொண்ட பிறகும், கலந்துரையாடல் மூலம் முடிவு எட்டத்தக்க பிரச்னைகளுக்கும் நீதிமன்றங்களை நாடுவது ஏற்புடையதல்ல. தடை கேட்பது உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படும். தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கருத்து கேட்கிறது. கண்காணிக்க கட்சிகளின் வாக்குச்சாவடி குழுவினரும் அனுமதிக்கப்படுகிறார்கள். வேறென்ன செய்து கொடுக்க முடியும்.
ஜ அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
அரசியல் விரோதப் போக்கு
ஜனநாயக நாட்டில் வாக்காளர் பட்டியல் மிகுந்த நம்பகத்தன்மை உடையதாக துல்லியமாக இருத்தல் வேண்டும். மரணமடைந்தோர் பெயர்களை நீக்குவதும், ஒரே பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பதைத் தடுப்பதும், உண்மையை நிலைநிறுத்துவதும் கட்டாயத் தேவை. அதற்காக இதுவரை 12 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது மட்டும் திமுக எதிர்ப்பது அரசியல் விரோதப் போக்கு என்பதை மறுக்க முடியாது. ஜனநாயகத்தின் மீது உண்மையான விசுவாசத்துடன் இருந்து குறைகளைக் களைந்து தீவிர திருத்தம் நடைபெற துணை நிற்பதே சரியானது.
வீ.வேணுகுமார், கன்னியாகுமரி.
எதிர்ப்பும், வரவேற்பும்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது தேர்தல் ஆணைய நடைமுறையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலை திருத்துவது ஜனநாயகத்துக்கு அவசியமானது என்றாலும், அதன் நேரமும் நோக்கமும் முக்கியம். தேர்தல் ஆணையம் தார்மீகமற்ற முறையில் செயல்
படுவதாக திமுக குற்றம்சாட்டுகிறது. இது நல்ல முயற்சி என்று சிலர் வரவேற்கின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்கால தேர்தல் நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சா. முகம்மது ஹுசைன், அறந்தாங்கி.
ஜனநாயகம் வலுப்பெறும்
வாக்காளர் பட்டியல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அடையாளமாகும். ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமை பாதுகாக்கப்படுவது நாட்டின் நேர்மையான தேர்தல் நடத்தைக்கு முக்கியமானது. இதன் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த வழக்கு என்பது ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால், நேர்மையான வாக்காளர் பட்டியல் உருவாகும். இதன் மூலம் ஜனநாயகத்தின் வேர்கள் மேலும் வலுப்பெறும்.
ரமேஷ்.ஆர்., சேலம்.
நாடியது சரியே...
சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்படவுள்ள 12 மாநிலங்களில் நிலையான முகவரியில் உள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் தேடி அதே மாநிலத்தில் புலம்பெயர்தல் அல்லது
இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் தற்காலிகமாக சென்று திரும்பும் நடைமுறைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். இவ்வாறு இருக்கும்போது சொந்த ஊரில் முகவரி வைத்துள்ள குடும்பங்கள் எப்படி வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவத்தை நிறைவு செய்து கொடுக்க முடியும். இதுகுறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது சரியே.
கே.ஆர். ராஜேந்திரன்,திருப்பரங்குன்றம்.
மாற்றாந்தாய் மனப்பான்மை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேற்கு வங்கம், தமிழகத்தில் அடுத்தாண்டு பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவசர கதியில் மேற்கொள்ளப்பட வேண்டாம் என விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. எனவேதான், வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதால் மாநிலக் கட்சிகள் நீதிமன்றத்தை அணுகியது சரியே.
எஸ்.வேணுகோபால், சென்னை.
சட்டம் புறக்கணிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பிகார் மாநிலத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு திருத்தப் பணிகளை தொடங்கியிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இந்த நிலையில், திமுக வழக்குத் தொடுத்துள்ளது மிகச் சரியே.
சீனி.மணி, திருவாரூர்.
மக்கள் விரும்பவில்லை
பிகாரில் நடைபெற்ற இந்தப் பணிக்கு எதிரான மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நிறுத்தப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. எதிர்க்கட்சித் தலைவரும் வாக்காளர் கணக்கெடுப்பை தீவிரமாகக் கண்காணிக்கும்படி அதிமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். வாக்காளர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் படிவத்தை மக்கள் விரும்பவில்லை.
ஆ.லியோன், மறைமலைநகர்.
வழக்கு வரவேற்கத்தக்கது
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தற்போதைய சூழலில் கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. பருவ மழை தொடங்கியுள்ள காலகட்டத்தில் இந்தப் பணி முறையாக நடைபெறுவது சிரமம். அதே நேரத்தில் பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியில் ஏற்பட்ட குளறுபடிகள்போல், தமிழ்நாட்டிலும் நடந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மா. பழனி, கூத்தப்பாடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.