பயிரை மேயும் வேலிகள்
மாதா, பிதா, குரு, தெய்வம்... என்ற முன்னோர்கள் சொல்லி வைத்த வரிசையில் ஆசிரியர்கள் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளனர். ஆனால், அத்தகைய ஆசிரியர்களில், சில ஆசிரியர்களின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுக
மாதா, பிதா, குரு, தெய்வம்... என்ற முன்னோர்கள் சொல்லி வைத்த வரிசையில் ஆசிரியர்கள் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளனர். ஆனால், அத்தகைய ஆசிரியர்களில், சில ஆசிரியர்களின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுகிறதோ என்ற எண்ணத்தை பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.
நம் முன்னோர்கள் சொல்லி விட்டுச் சென்ற இந்த வரிசையில் உள்ள முக்கியத்துவத்தை மற்றவர்கள் புரிந்துள்ளனரோ என்னவோ... ஆனால் இதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது இன்றைய அவசியத் தேவை. இதில் அம்மாவும்(மாதா), அப்பாவும்(பிதா) ரத்தம் சார்ந்த உறவுகள். தெய்வம் என்பது கண்களால் பார்த்து உணரப்படாத சக்தி. அத்தனையும் தாண்டி ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை அதாவது ஆசிரியரை இந்தப் பட்டியலில் முன்னோர்கள் இணைத்திருப்பதிலிருந்தே ஆசிரியரின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
இப்படி சமூகம், ஆசிரியர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்து அழகு பார்த்து வரும் வேளையில் சில ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஆசிரியர் சமூகத்தையே இளக்காரமாகப் பார்க்க வைக்கும் நிலையை ஏற்படுத்தி வருகிறது. பாலியல் ரீதியான தொந்தரவுகளை மாணவிகளுக்குக் கொடுத்து வரும் சில அற்ப எண்ண ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்துக்கே பெரும் அவமானம் ஏற்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 15 வயதான மாணவி ஒருவரை அப்பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் ஆகஸ்ட் 22-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் முன்பே தலைமையாசிரியருக்குத் தெரிந்திருந்த போதும், அதைக் கண்டுகொள்ளாமல் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது என்ற செய்தி ஆக. 23-ம் தேதியிட்ட நாளிதழ்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூங்கும் நேரம், காலை, இரவு சாப்பிடும் நேரம் தவிர்த்து (அதாவது குறைந்தஅளவு நேரம் தவிர்த்து) பெரும் அளவு நேரங்களில் மாணவர்களும், மாணவிகளும் பள்ளிகளிலோ அல்லது ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வரும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலோதான் தங்களது நேரங்களைச் செலவிடுகின்றனர். தங்கள் மகள் அல்லது மகன் நன்கு படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் பெற்றோர்கள் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர். ஆசிரியர்கள் மீதுள்ள உயரிய மரியாதையின் காரணமாகத்தான் இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளில்கூட தங்கள் மகளைப் பெற்றோர்கள் பயமின்றி அனுப்பி வைக்கின்றனர். அதனையும் தாண்டிச் சிறப்பு மாலை நேர வகுப்புகளுக்கும், இரவு நேரப் படிப்புக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
மாணவர்கள் தவறு செய்தால் அதைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும், அதனையும் தாண்டி அந்த மாணவனை அல்லது மாணவியை நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் ஆசிரியருக்கு உண்டு. இந்த நிலையில் இத்தகைய ஆசிரியர்களின் செயல்பாடுகள் ஆசிரியர் சமூகத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன என்றால் அது மிகையில்லை. பாலியல் தொல்லைக்குள்ளான மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ள செய்தியைப் படித்த, ஒவ்வொரு மாணவியினுடைய பெற்றோரின் மனநிலையும் எப்படி இருந்திருக்கும் என்பது பெண் குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோர்களுக்குத்தான் புரியும்.
இதில் வேதனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட மாணவிக்கு, அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் அப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு முன்னரே தெரிந்திருந்தும்கூட அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதுதான். கடமை தவறும் ஆசிரியரைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த தலைமையாசிரியருக்கு உண்டு என்பதை அவர் மறந்தது எப்படி எனப் புரியவில்லை. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலர்தான் இந்த கீழ்த்தர செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றாலும், அது மாணவச் சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதானே உண்மை.
மாணவர்களுக்கு நீதிபோதனையையும், வாழ்க்கைக் கல்வியையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற பாதகச் செயலைச் செய்தால் அதன் தாக்கம் எதிர்கால இளைஞர்களையும் தவறான பாதைக்குக் கொண்டு செல்லுமே என்று நினைக்கும்பொழுது மனம் குமுறுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால். ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகள், தங்கள் நலனைக் கவனத்தில் கொள்வதுடன் மாணவ, மாணவிகளின் நலனையும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான்.
ஏற்கெனவே ஊடகங்களும், திரைப்படங்களும் ஆசிரியர்களை கேலிப்பொருளாகச் சித்திரித்து வரும் நிலையில் தங்களின் மேன்மையை சமூகத்துக்கு உணர்த்துவதற்காக அரும்பாடுபட்டு வரும் நல்லாசிரியர்கள் மத்தியில் நிச்சயமாக இந்த வகையான ஆசிரியர்கள் கருப்பாடுகள்தான். அதைவிட சரியாகச் சொன்னால் இவர்கள் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போலத்தான்.