முகப்பு
கட்டுரைகள்

எங்கே செல்கிறோம்?

அண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன். அந்தச் செய்தி, அதிர்ச்சியையும், வேதனையையும், வியப்பையும் தருவதாக அமைந்திருந்தது. குடியிருப்புப் பகுதிகள், கோயில்கள், கல்வி நிறுவனங்களின் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:13 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 10:32 PM

அண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன். அந்தச் செய்தி, அதிர்ச்சியையும், வேதனையையும், வியப்பையும் தருவதாக அமைந்திருந்தது.

குடியிருப்புப் பகுதிகள், கோயில்கள், கல்வி நிறுவனங்களின் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்றே மக்களும், பெண்களும் போராடுவார்கள்.

கடந்த சில நாள்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கொண்டமாநல்லூர் கிராமத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையைத் திறக்கக்கோரி, அந்தக் கிராமப் பெண்களே போராட்டத்தை நடத்தியதுதான் வித்தியாசமாக இருந்தது.

Advertisement

இப்போராட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், முழு விவரம் தெரிந்த பிறகு வியப்பை ஏற்படுத்துகிறது.

அந்தக் கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடைக்கு வருவோரால் தொல்லை ஏற்படுவதாகக் கூறி, அக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக அக்கடை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

"டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டதால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 5 கி.மீ. தூரமுள்ள ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஆரூர் கிராமத்துக்குச் சென்று மது அருந்திவிட்டு வாகனங்களில் வருகின்றனர். வரும்போது அவர்கள் விபத்துகளில் சிக்கி ஆபத்து நேரிட வாய்ப்புகள் உள்ளன.

அதனால், கிராமத்திலேயே மதுக்கடையைத் திறக்கலாம்' எனப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் கோரிக்கையும் உடனே ஏற்கப்பட்டும் உள்ளது. பழைய இடத்திலேயே டாஸ்மாக் மதுக்கடை தொடங்கப்பட்டும் விட்டது.

இது சமூக ஆர்வலர்களிடையே மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்ற பழமொழிக்கு ஏற்ப பெண்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்போது "கள் ஆனாலும் கணவன், ஃபுல் ஆனாலும் புருஷன்' என்று புதிய கொள்கையைப் பெண்கள் ஏற்றுவிட்டனரோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

5 கி.மீ. தொலைவு சென்று மது அருந்திவிட்டு வரும்பொழுது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்குப் பதிலாக சொந்த ஊரில் மது அருந்திவிட்டு வீட்டருகே விழுந்து கிடப்பதன் மூலம் உடல் நலத்துக்குக் கேடு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்றே அக்கிராமத்துப் பெண்கள் நினைத்துள்ளனர்.

இவர்களின் சுயநலப்போக்கு ஒருபுறம் நியாயமாகத் தோன்றினாலும், தங்கள் வீட்டு ஆண்களின் மதுப்பழக்கத்தை மறக்கச் செய்வதற்கான அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பது வேதனையாக உள்ளது. இதனால், மதுப் பழக்கத்தை பெண்களும் ஊக்குவிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

டாஸ்மாக் கடையைத் திறக்கக்கோரி போராட்டம் நடத்திய பெண்களின் மனநிலை மாற வேண்டும். இனி இதுபோன்ற போராட்டங்கள் தொடரக் கூடாது.

தொண்டு அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அப்பெண்களின் மனநிலையை மாற்றுவதற்கான உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

"மது அருந்துவது உடல் நலத்துக்குக் கேடு' என்ற அறிவிப்பு வாசகத்துடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வருவாய்க்காகக் கூடுதலாக விற்பனையை அதிகரிக்கவும் அரசு இலக்கு நிர்ணயிக்கிறது.

இதுமாதிரியான சில அதிர்ச்சியான, வியக்கத்தக்க நிகழ்வுகளால் இந்தியா ஆரோக்கியமான இலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறதா? என்ற ஐயம் சமூக ஆர்வலர்களின் மனதில் எழுந்துள்ளது.

2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் நாட்டு மக்கள் இருக்க வேண்டும். இச்சூழ்நிலையில், இதுபோன்ற செயல்களால் அப்துல் கலாமின் கனவு நிறைவேறுமா? என்பது தெரியவில்லை.

"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பாடலுக்கு ஏற்ப மது அருந்துபவர்களே திருந்தினால் ஒழிய மது அருந்தும் பழக்கத்தை விட்டொழிக்க முடியாது.

எனவே, பெண்கள் தங்கள் வீட்டு ஆண்கள் மது அருந்துவதைத் தவிர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். அவர்களின் மனநிலையை மாற்றி, திருத்தி நாட்டை வல்லரசாக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அரசை நம்பாமல், தொண்டு நிறுவனங்களும், பெண்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.