தேர்தல் நேரத்தில் தலைவர்களின் பேச்சில் அடிக்கடி ஒலித்த வார்த்தைகளில் ஒன்றுதான் ஊழல். இதைத் தடுக்க ஆட்சி மாற்றம் வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் ஊர்தோறும் முழங்கினர். ஆட்சி மாற்றம் வந்தால் ஊழலைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
ஆனால், மீண்டும் அவர்களது ஆட்சியில் செய்த ஊழலை அடுத்த தேர்தலில் மற்றொரு கட்சித் தலைவர் பட்டியலிட்டு முழங்குவார்.
இப்படி, ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி, அவர்கள் அதில் (ரூ. .... லட்சம் கோடி) இவ்வளவு ஊழல் செய்தார்கள் என்று வசைபாடுவது தொடர்கதையாக உள்ளது.
நாடு முழுவதும் ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், பிரதமர் உள்ளிட்ட உயரிய பதவிகளில் உள்ளவர்கள் மீது விசாரணை செய்யும் அதிக அதிகாரம் கொண்ட தன்னிச்சையான அமைப்பை உருவாக்குவதற்கான லோக்பால் மசோதாவை நிறைவேற வேண்டும் எனக் கோரி, தனது அஹிம்சை போராட்டத்தை தில்லியில் கடந்த 5-ம் தேதி அமைதியாகத் தொடங்கினார் அண்ணா ஹஸôரே.
நாடு முழுவதும் அவருக்கு அளித்த ஆதரவால் தனது போராட்டத்தை 98 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்தபோது, லோக்பால் மசோதா கொண்டுவர வரைவுக்குழு அமைக்க ஒப்புதல் அளித்து மத்திய அரசு பணிந்தது.
அந்த வரைவுக்குழுவில் அரசுத் தரப்பில் 5 பேரும், சமூக ஆர்வலர்கள் 5 பேரும் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
அப்பொழுதும் ஹஸôரே தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்து, தான் உறுப்பினராகவே இருப்பதாகத் தெரிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தில்லியில் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற லோக்பால் மசோதா கூட்டு வரைவுக்குழுவின் முதல் கூட்டத்தில் பிரதமர், தலைமை நீதிபதி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரையும் லோக்பால் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே தயாரித்த ஊழலை ஒழிக்க கடுமையான விதிகள் அடங்கிய "ஜன் லோக்பால்' மசோதாவை அடிப்படையாகக் கொண்டு புதிய மசோதா தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில், இந்த மசோதா ஜூன் 30-ம் தேதிக்குள் தயார் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மசோதா நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தனது போராட்டத்தைத் தொடங்கினார் ஹஸôரே. ஆனால், போராட்டத்தின் முடிவில் கிடைத்த வெற்றியை அடுத்து உருவாக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் உள்ள சமூக ஆர்வலர்களில் முன்னாள் சட்ட அமைச்சரும், வரைவுக்குழுவின் இணைத் தலைவருமான சாந்தி பூஷண் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகார் (நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்ற ஆடியோ சிடி) நம்மைச் சற்று கலங்கடிக்கச் செய்கிறது.
இதில் உண்மை இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட ஒரு குழுவிலும் இந்தப் பிரச்னையா என்று கேட்கத் தோன்றுகிறது.
எது, எப்படியோ இப்போது மகாத்மாகாந்தி போன்று (நான் மதிக்கும் மிகப்பெரிய தலைவர் ஹஸôரே என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்) சமூகத்தின் பார்வையில் காணப்படும் ஹஸôரேவின் முயற்சிக்குப் பலன் கிடைத்ததா என்ற கேள்விக்கு, அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு, அதன்மூலம் முதலில் சிக்கும் ஊழல்வாதிக்கு பல்வேறு அரசியல் குறுக்கீடுகளையும் தாண்டி கிடைக்கப்போகும் தண்டனைதான் நமக்குக் கிடைக்கப் போகும் பதில்.
நாடாளுமன்றத்தில் 1962 முதல் 42 ஆண்டுகளில் இதுவரை 8 முறை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவை நிறைவேற்ற யாரும் ஆதரவு தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் என்ற ஒரு தீய சக்தியை அழிக்கவல்ல லோக்பால் மசோதா ஒரு கருவிதான். "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதுபோன்று ஊழல்வாதிகள் தாங்களாகவே திருந்தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.
தேர்தல் பிரசாரத்தின்போது "ஊழலை' கையில் எடுக்கும் அரசியல்வாதிகள் அதை ஒழிக்கும் முயற்சியில் கட்சி பாகுபாடின்றி இந்த மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஹஸôரேவின் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். ஒத்துழைப்பு அளிப்பார்களா? எதிர்பார்த்துக் காத்திருப்போம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்வரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.