அரசு உதவி பள்ளி ஆசிரியருக்கும் தகுதித் தேர்வு தேவை
மாதா, பிதா, குரு, தெய்வம்... என்று முன்னோர்கள் சொல்லிவைத்த வரிசையில் ஆசிரியர்கள் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளனர். ஆனால், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் பெரும்பாலான ஆசிரியர்களுக்
மாதா, பிதா, குரு, தெய்வம்... என்று முன்னோர்கள் சொல்லிவைத்த வரிசையில் ஆசிரியர்கள் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளனர். ஆனால், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கான அடிப்படைத் தகுதியே பணம்தான் என்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் காரணமாக எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியான மாணவர்களுக்குச் சரியான கல்வி கிடைக்காத நிலை நிலவி வருவதாக, பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இந்த டாப்-4 வரிசையில் உள்ள ஆழ்ந்த முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துள்ளனரா என்பது தெரியாத ஒன்று. ஆனால், இதன் முக்கியத்துவத்தைத் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது இன்றைய மிக முக்கியத் தேவை. இந்த வரிசைப்படுத்துதலில் இடம்பெற்றுள்ள அம்மாவும் (மாதா), அப்பாவும் (பிதா) ரத்தம்சார்ந்த உறவுகள்.
தெய்வம் என்பது கண்களால் உணரப்படாத ஒருவித சக்தி. அத்தனையும் தாண்டி ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை, அதாவது ஆசிரியரை இந்தப் பட்டியலில் முன்னோர்கள் சேர்த்திருப்பதிலிருந்தே ஆசிரியரின் உன்னதத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
இப்படி மனித சமுதாயம், ஆசிரியர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்த்து வந்தது. முன்பெல்லாம் ஆசிரியர்கள் குறைந்த ஊதியம் பெற்று வந்த நிலையில், ஆசிரியர் வேலைக்குச் செல்வதற்கு பலர் தயங்கிய காலம் உண்டு.
இருப்பினும், ஆசிரியப் பணி அறப்பணி என்ற எண்ணத்துடன் அன்றைய காலகட்டத்தில் பலர் பணியாற்றினர். இவர்களின் மாணவர்கள் இத்தகைய ஆசிரியர்களை என்றும் நினைவில் வைத்திருந்த காலமும் இருந்து வந்தது.
ஆனால், இப்போது ஆசிரியப் பணி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பணியாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள், தங்கள் கல்வி நிறுவனத்தில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏலம் விடும் அளவுக்குச் சென்று விட்டன என்கின்றனர் பெற்றோர்கள்.
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அதுவும் இப்போது மாநில அளவிலான தேர்வு நடத்தப்பட்டு அதில் சிறப்பு மதிப்பெண்கள் பெறுபவர்களே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தரமான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிக்குக் கிடைத்து வருகின்றனர். ஆனால், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலோ, பெயரளவுக்குத் தேர்வு நடத்தப்படுவதாகவும், மற்றபடி லகரங்களை யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களைத்தான் பள்ளி நிர்வாகங்கள் பணிக்குத் தேர்வு செய்வதாகவும், இதில் பள்ளியின் செயலர் முடிவுதான் இறுதி என்பதால், அவரை சரிக்கட்டுபவருக்குதான் பணி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஆசிரியரின் தகுதியைப் பணம் நிர்ணயிக்கும் நிலையில் அவரிடம் பயிலும் மாணவர்கள் நிலை கேள்விக்குறியாக இருப்பதாகப் பெற்றோர்களும், கல்வியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் நியமனங்களை முறையான தேர்வு மூலம் அரசு நியமித்து வரும் நிலையில்,அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் தேர்வு எதுவும் இல்லாமல் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வருவது கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் அரசின் மூலமே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே,அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களை அந்தந்தப் பள்ளிகளின் நிர்வாகங்களே வழக்கம்போல் மேற்கொள்ளட்டும். ஆனால், அதற்கான தகுதி உடையவரை மட்டுமே பணிநியமனம் செய்ய நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.
அதையும் தாண்டி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஒரு குறிப்பிட்ட தேர்வை அரசே நடத்தி, அதில் சிறப்பு மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு (கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வுபோல்) மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பணி நியமனம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகள், தங்கள் நலனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மாணவ, மாணவிகளின் நலனையும் கவனத்தில்கொண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான்.
ஏற்கெனவே ஊடகங்களும், திரைப்படங்களும் ஆசிரியர்களைக் கேலிப்பொருளாகச் சித்திரித்து வரும் நிலையில் தங்களின் மேன்மையை சமூகத்துக்கு உணர்த்துவதற்காக அரும்பாடுபட்டு வந்த எத்தனையோ நல்லாசிரியர்கள் வாழ்ந்த இந்த மண்ணில், நமது பள்ளியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியரும் நல்லாசிரியராக ஜொலித்தால் அது நிர்வாகத்துக்குக் கிடைத்த வெற்றிதானே. இதை அரசும், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகங்களும் உணர்ந்தால், ஒவ்வொரு நாளும் இனிய நாளே...