காந்தியடிகளின் ஆன்மா மன்னிக்காது
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்துகளுக்குப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்துகளுக்குப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி ஜே.எம். லிங்டோ, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதிகள் அட்மிரல் விஷ்ணு பகத், அட்மிரல் ராம்தாஸ் உள்பட நாடறிந்த பிரமுகர்கள் பதினெழுவர் பிரதமருக்கு எழுதிய கண்டனக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
""அணு உலை எதிர்ப்பாளர் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அரசின் அனைத்துக் கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள், நல்லவர்கள் என்றும் நியாயமான காரணங்களுக்காக எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு விரோதமானவர்கள் என்றும் விமர்சிக்கப்படுகின்றனர். நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்களை எதிர்ப்பாளர்களாகச் சித்திரிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது'' என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement
மேலே கண்டவாறு பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிரமுகர்கள் பல்வேறு துறைகளில் உயர்நிலைப் பதவிகள் வகித்து தங்களது நேர்மையான நடவடிக்கைகளின் மூலம் நாட்டு மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். சுயநல நோக்குடன் இவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதவில்லை.
பிரதமர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் தகுதிபெற்றவர்கள். எனவே, இவர்களின் கடிதத்தை அவ்வளவு சுலபமாகப் புறக்கணித்துவிட முடியாது.
நாட்டின் பிரதமரே இவ்வாறு பொறுப்பற்ற வகையில் குற்றம்சாட்டும்போது, அவர் கீழுள்ள அமைச்சர்கள் இன்னும் மோசமான வகையில் நடந்துகொண்டுள்ளனர். கோவையில் மாவட்ட சிறுதொழில்கள் சங்கச் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, ""கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமாரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். போராட்டக் குழுவுக்கு நிதியுதவி செய்த ஜெர்மன் நாட்டுக்காரர் நாடு கடத்தப்பட்டுள்ளார்'' எனப் பேசியுள்ளார். ஆனால், எவ்விதக் காரணமும் கூறாமல் தன்னை அதிகாரிகள் வெளியேற்றினார்கள் என ஹெர்மன் ரெயினர் சாண்டாக் என்ற ஜெர்மானியப் பயணி குற்றம் சாட்டியுள்ளார்.
தனது நாட்டுக்குத் திரும்பிய பிறகு இங்கு வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார்: ""அணு உலை எதிர்ப்பு அமைப்புகளுக்கு நான் எத்தகைய பணஉதவியும் செய்யவில்லை அல்லது வேறு யாரிடமிருந்தும் பணம் பெற்று அவர்களுக்குக் கொடுக்கவில்லை. எனக்கு அணு உலையைப் பற்றி எதுவும் தெரியாது. நான் கடந்த 20 ஆண்டுகாலத்துக்கு மேலாக இந்தியாவுக்கு அடிக்கடி வந்து போகிறேன். எனக்கு இங்கு மனசாந்தி கிடைக்கிறது. மற்றபடி எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. நான் வசதி படைத்தவன் அல்ல. ஒரு நாள் இரவு 10 மணிக்கு திடீரென நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு காவல்துறை அதிகாரிகள் வந்தார்கள். என்னை உடனடியாக வெளியேற்றுவதற்கான ஆணையின் நகலைக் கொடுத்தார்கள். என்ன காரணத்துக்காக என்னை வெளியேற்றுகிறார்கள் என்பதை அவர்கள் கூறவில்லை. நான் ஜெர்மனிக்குத் திரும்பிச் செல்வதற்குரிய விமானக் கட்டணத்தையும் என்னிடமிருந்தே பெற்று பயணச்சீட்டு வாங்கி என்னை இரவோடு இரவாக சென்னைக்குக் கொண்டுவந்து விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டார்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மத்திய - மாநில உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாக சில பத்திரிகைகளில் பின்வரும் செய்தி வெளிவந்துள்ளது. ""ஜெர்மன் தொழிலதிபரான ஹெர்மன் தொண்டு செய்வதற்காக இந்தியா வந்திருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் வெளிநாட்டுப் பணத்தை பல்வேறு வழிகளில் இந்தியாவுக்குள் கொண்டுவரும் ஹவாலா ஏஜென்ட் என்பது தெரியவந்துள்ளது. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் ஹெர்மனுக்கும் பல மாதங்களாக தொடர்பு இருந்துள்ளதை அவரது வாக்குமூலத்தில் இருந்தே பெற்றுவிட்டோம். ஹெர்மன் மூலமாக பணம் பெற்றவர்கள் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கையைத் தொடங்குவோம்''.
ஹெர்மன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமலும் எந்தக் காரணமும் கூறாமலும் அவரை அவசர அவசரமாகவும் இரவோடு இரவாகவும் வெளியேற்றியது ஏன்? அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் முரண்பாடுள்ளதாகத் திகழ்கிறது. மேலும் பத்திரிகையாளர் உள்பட யாரும் அவரைச் சந்திக்க காவல்துறை அனுமதிக்கவில்லை.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது அவதூறு பிரசாரம் செய்வதன் மூலம் போராட்டத்தை முறியடித்து விடலாம் என மத்திய அரசு கருதுகிறது. அதனால்தான் பிரதமரிலிருந்து அமைச்சர்கள் வரை அவதூறு சேற்றை வாரி இறைக்கிறார்கள். உண்மையில் மத்திய அரசின் மாண்பையே இவர்கள் சீர்குலைக்கிறார்கள்.
கூடங்குளத்தில் நடைபெறுவது உண்மையான மக்கள் எழுச்சிப் போராட்டமாகும். பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் அப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும்.
வானம் பார்த்த அந்தப் பூமியில் இயற்கையோடு போராடும் விவசாயிகளும் மீனவர்களும் தங்களின் எதிர்கால வாழ்வு நாசமாகிவிடுமே என்ற அச்சத்தினால் போராடுகிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்க பதவி நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் மறுக்கிறார்கள். உதயகுமாரால் அல்லது வேறு ஒருவரால் இந்தப் போராட்டம் தூண்டிவிடப்படவில்லை. அவ்வாறு தூண்டிவிடவும் முடியாது. மக்கள் தங்கள் எதிர்கால வாழ்வுக்காகப் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட 8 மாதங்களாக இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.
ஆயிரக்கணக்கான விவசாயிகளும் மீனவர்களும் குடும்பம் குடும்பமாக இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு ஆத்திரம் மூட்டப்பட்டபோதிலும் அந்த மக்கள் நிதானம் இழக்கவில்லை.
அமைதியாக அறவழியில் தொடர்ந்து போராடுகிறார்கள். பல மாதங்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் எந்த ஒரு சிறு அசம்பாவிதமோ வன்முறையோ நடக்கவில்லை என்பது வியப்பூட்டும் உண்மையாகும்.
இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாடறிந்த தலைவர்கள் அல்லர். அந்த மக்களின் நம்பிக்கைக்குரிய செயற்பாட்டாளர்கள். கொதித்துப்போராடும் அந்த மக்களுக்கு உசுப்பேற்றி விட்டு வன்முறைக் கலவரங்களுக்கு வழிவகுக்க அவர்கள் ஒருபோதும் முயலவில்லை. காந்தியடிகள் கற்றுக்கொடுத்த அறவழியில் அந்த மக்களின் போராட்டத்தை அவர்கள் நெறிப்படுத்துகிறார்கள்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்திலேயே வன்முறை வெடித்த நிகழ்ச்சி உண்டு. 5-2-1922 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரிசௌரா என்ற ஊரில் தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்றார்கள்.
தப்பியோடியவர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார்கள். ஆனால், கோபம் அடங்காத மக்கள் அந்தக் காவல் நிலையத்துக்கே தீ வைத்துவிட்டார்கள். இதன் விளைவாக, 22 காவலர்கள் தீயில் சிக்கி மாண்டனர்.
இச்செய்தியறிந்த மகாத்மா காந்தி சொல்லொண்ணா துயரம் அடைந்தார். போராட்டம் தடம்மாறிச் செல்வதால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மக்கள் இழைத்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தான் ஐந்து நாள்கள் உண்ணாநோன்பு இருக்கப் போவதாகக் கூறி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இளைய தலைவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என மகாத்மா காந்தியிடம் மன்றாடினார்கள். ஆனால், ""மக்கள் இன்னமும் அகிம்சை வழிப் போராட்டத்துக்குப் பக்குவப்படவில்லை. அவர்களைப் பக்குவப்படுத்த நாம் தவறிவிட்டோம். எனவே, போராட்டத்தைத் தொடர்வது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்'' என்றார் காந்தியடிகள்.
மகாத்மா காந்தி நடத்திய அறப்போராட்டத்திலேயே வன்முறை வெடித்தது. ஆனால், உதயகுமார் தலைமையில் நடைபெறும் கூடங்குளம் அறப்போராட்டம் ஒருசிறு வன்முறைக்குக்கூட இடமளிக்காமல் எட்டுமாத காலத்துக்கு மேலாகத் தொடர்வது எவ்வாறு? ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
மகாத்மா காந்தியடிகளை உண்மையாகப் பின்பற்றி, அவர் வழியில் வன்முறையில்லாத அறப்போராட்டத்தை நடத்தும் உதயகுமாருக்கு மகாத்மா காந்தி தேசிய விருதை வழங்கவேண்டிய மத்திய அரசு அவர்மீது அவதூறுகளை அள்ளிப் பொழிவதை மகாத்மாவின் ஆன்மா நிச்சயமாக மன்னிக்காது.
குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக உதயகுமாரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என புதிய தேசபக்தர்கள் கூப்பாடு போடுகிறார்கள்.
தேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பல்வேறு ஊழல்களைப் புரிந்து மக்கள் பணத்தைச் சூறையாடியவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டியிருக்க, மக்களுக்காகப் போராடுபவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறுவது அப்பட்டமான பாசிசப் போக்காகும்.
அன்னியப் பணத்தைப் பெற்றுக்கொண்டு போராட்டம் நடத்துபவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட உதயகுமார், தனது குடும்பத்தின் சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார். அவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் அதைப்போல தங்கள் சொத்துக் கணக்குகளைப் பகிரங்கமாக வெளியிடத் தயாரா என மக்கள் மனதில் எழும் கேள்விக்குப் பதில் என்ன?