முகப்பு
கட்டுரைகள்

புலிகளைக் காப்போம்

புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. அதனால்தான் அந்த வீரமிக்க விலங்கினத்தை தேசிய விலங்காக்கி அழகு பார்த்தோம். ஆனால் இன்று முதுமலைக்கு சுற்றுலா செல்லும் நம் தலைமுறையினர் புலியை வனாந்தரத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. அதனால்தான் அந்த வீரமிக்க விலங்கினத்தை தேசிய விலங்காக்கி அழகு பார்த்தோம். ஆனால் இன்று முதுமலைக்கு சுற்றுலா செல்லும் நம் தலைமுறையினர் புலியை வனாந்தரத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போதைய நிலவரப்படி இந்தியக் காடுகளில் சுமார் 1600 புலிகளே எஞ்சியுள்ளன. 2010-ஆம் ஆண்டில் 1411 புலிகளே இருந்தன. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவது வேதனையை தருகிறது. காடுகள் பாதுகாக்கப்பட்டால்தான் புலிகளையும் பாதுகாக்க முடியும். காடுகளை அழித்துவிட்டு புலிகள் எண்ணிக்கையை பெருக்குவது என்பது சாத்தியமற்ற விஷயம்.

அடர்ந்து வளர்ந்த மரங்களும், புல்லும், புதரும் நிறைந்த காட்டில் அவற்றை உணவாக உண்ணும் முயல், மான், மாடு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலியின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராக தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கிறது. இதனால் பருவமழை சரியான காலத்தில் பொழிந்து ஆறுகள் பெருகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றன. இவை எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

Advertisement

தமிழகத்தின் ஏதோ ஒரு நகரத்தில் இருக்கும் ஒரு மனிதன் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஏதோ ஒரு சரணாலயத்தில் வாழும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டால் என்ன என கேள்வி கேட்கக் கூடாது.

நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசும் தன்னார்வலர்களும் முழுமூச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். ஆண்டுதோறும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்போது தமிழகத்தின் முதுமலை, ஆனமலை, களக்காடு முண்டந்துறை, தேனி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் டிசம்பர் 21-ஆம் தேதி வரை 3ஆவது தேசிய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

தமிழக காடுகளின் முக்கிய அம்சமான புலிகளைப் பற்றிய கணக்கெடுப்பு, முதன்முறையாக டி.என்.ஏ. அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ச்சி காரணமாக டி.என்.ஏ. எனப்படும் உயிரியல் கூறு அடிப்படையில் புலிகளின் எண்ணிக்கையை கண்டறியலாம். டி.என்.ஏ. மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்வதால் துல்லியமாக இருக்கும். புலி ஆணா, பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும்.

கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படுவதால், பிற்காலத்தில் வனத்தில் சட்டவிரோதமாக புலிகளை யாரேனும் வேட்டையாடி கொண்டு சென்றாலும், அவை கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அந்தப் புலி எந்த வனத்தைச் சேர்ந்தது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இந்தியாவில் புலிகள் நீண்ட நாள் வாழத் தகுதியான இடங்களில் ஒன்று சத்தியமங்கலம். அதேபோல தமிழகம், கர்நாடகம், கேரள மாநில காடுகளில்தான் கடந்த சில ஆண்டுகளாக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.

புலிகள் கணக்கெடுப்பு என்று பெயர் இருந்தாலும் காட்டில் இருக்கும் மரம், செடி, விலங்குகள், பறவைகள் என அத்தனையையும் கணக்கெடுக்க வேண்டும். இதுதான் செயல்முறை. இதை வைத்துதான் புலிகளின் எண்ணிக்கையும் வாழ்வாதாரமும் கணிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கணக்கெடுப்பு நடத்துவது வரவேற்கக்கூடிய விஷயமாக இருந்தாலும், வனங்களை காப்பதிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு புலிகள் சரணாலயப் பகுதிக்கு பொது மக்கள் சுற்றுலா செல்வதற்கு முழுமையான தடை அல்லது ஆண்டின் சில நாள்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கடுமையான நடைமுறையை கொண்டு வரவேண்டும்.

மனிதர்கள் எங்குபோனாலும், குறிப்பாக காட்டுக்குச் சென்றுவிட்டால் அவர்களுடைய அட்டகாசம் அதிகமாகிவிடும். மரங்களை வெட்டுவது, புகை பிடிப்பது, மிருகங்களுக்கு தொந்தரவு கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள். அப்படி வேட்டையாடி வேட்டையாடியே வன உயிர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டார்கள். எனவே, மனிதர்களை காட்டுக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது.

புலியை பாதுகாப்பது அரசின் கடமை, ஏற்கெனவே கொல்லப்பட்ட புலிகளை நாம் உயிர்ப்பிக்க முடியாது, ஆனால் இனியேனும் அவற்றைக் கொல்லாமலிருந்து புதிய புலிகளை உருவாக்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments