உங்கள் பணம் உங்கள் கையில்...
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இளவல் ராகுல் தலைமை ஏற்கப் புடைசூழ்ந்து நிற்கும்
கட்டுரைகள்உங்கள் பணம் உங்கள் கையில்...
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இளவல் ராகுல் தலைமை ஏற்கப் புடைசூழ்ந்து நிற்கும்
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இளவல் ராகுல் தலைமை ஏற்கப் புடைசூழ்ந்து நிற்கும் அமைச்சர்களில் ஒருவர், ""உங்கள் பணம் உங்கள் கையில்'' என்று ஓங்கிய குரல் எழுப்ப, திரட்டப்பட்ட கூட்டத்தில் முன்வரிசையில் சிலர் கைதட்டுவார்கள். நோட்டுகள் வாங்கிப் பழக்கப்பட்ட தமிழர்கள் கையில் "நோட்டு' வந்தால்தான் "ஓட்டு'ப் போடுவார்கள்.
வங்கிக் கணக்கில் "ஆதார்' அட்டை அடிப்படையில் உங்கள் பணம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவார். ""எங்கள் பணம் எங்களுக்குத்தான். உங்கள் பணம் எவ்வளவு தருவீர்கள்?'' என்று கேட்டால் என்ன செய்வது?
தேர்தல் வெற்றிக்குக் கவர்ச்சியான பரிசுகளை அநேகமாக ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் குறிப்பாக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் செலவில் குடை, குடம், வேட்டி, சேலைகள் வழங்குவது உண்டு. ஐந்நூறு ரூபாய் நோட்டுகள், நூறு ரூபாய் நோட்டுகள், ஆட்டு பிரியாணி வழங்கப்பட்டதும் உண்டு. வழங்கப்பட்ட பிரியாணியில் ஆட்டுத்துண்டு விழவில்லை என்ற கோபத்தில், "செல்லாத' ஓட்டுப் போட்டவர்களும் உண்டு!
அடுத்தகட்டமாக அரசு செலவில் இலவச அறிவிப்புகளைச் செய்து ஓட்டு வாங்குதல். இலவச டி.வி. வழங்கலை அரசின் கொள்கையாக மாற்றி ஒரு கருப்பு - சிவப்புக் கட்சி இரண்டாவது முறை வெற்றி பெற்றாலும், மூன்றாவது முறை வழங்கப்பட்ட பிரியாணியில் ஆட்டுத்துண்டு போடாததால் தோல்வியுற்றதா?
அம்முறை மற்றொரு கருப்பு - சிவப்புக்கட்சி "முழு ஆட்டையே' இலவசமாக வழங்கி வெற்றிபெற்றதா? மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்' வழங்கி வெற்றிபெற்றதா? ஆகக் கூடி இலவசக் கொள்கை அறிவிப்பு தேர்தல் வெற்றிக்கு முன்நிபந்தனை. சீரழிந்துவிட்ட இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி இதுவே.
மாநில அரசுகளுக்கு மைய அரசும் சளைத்தது இல்லை என்று சொல்லும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறை வெற்றிக்கு, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்குறுதித்திட்டம்' (குளத்து வேலை 100 நாள் வேலைத்திட்டம்) கை கொடுத்ததுபோல் மூன்றாவது முறை வெற்றிக்கு "ஆதார்' அட்டை முலம் "உங்கள் பணம் உங்களுக்கு' என்ற அறிவிப்பு ஓர் அடித்தளமாக அமையும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நம்புகிறது.
எதிர்க்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கூட்டணி வழங்கும் இலவசம் என்ன?
தங்களை இடதுசாரிகள் என்றும் சமயச்சார்பு இல்லாதவர்கள் என்றும் பிரகடனம் செய்து கொள்ளக்கூடிய மூன்றாவது அணி எதுவும் இலவச அறிவிப்பு செய்யுமா? செய்யாதா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
நூறு நாள் வேலைக்குறுதித்திட்டம்போல் ""உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்'' வேலை செய்யும் என்று தோன்றவில்லை. உணவு மானியத்தை ரத்து செய்து ஆதார அட்டையில் உள்ளபடி குடும்பத் தலைவர் கணக்கில் வங்கியில் வரவு வைக்கும் திட்டம் விளைவிக்கக்கூடிய விபரீதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆங்கிலத்தில் ""யுனீக் ஐடன்டிட்டி'' என்ற சொல்லுக்கு "ஆதாரம்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட அடையாளங்கள்! விழிகளை "ஸ்கேன்' செய்து படம், முழுக்கையும் ரேகைப் பதிவு, முகத்தின் படம், முகவரி, வங்கிக் கணக்கு எண், ரேஷன் கார்டு எண் என்று ஏகப்பட்ட விவரங்கள் மேன்மை பொருந்திய ஆதார அட்டையில் பதிவாகி வழங்கப்படுகின்றன.
மோசமான கணினியில் மோசமாக அச்செடுத்து உங்களுக்கு வழங்கப்படும் ஜெராக்ஸ் காகிதமே ஆதார அட்டை. இது உங்கள் முகந்தானா என்று நீங்களே சந்தேகப்படும் அளவில் எடுக்கப்படும் அந்த போட்டோவை வங்கி நம்புமா, நம்பாதா என்பது வேறு விஷயம்.
ரேஷன் அட்டையையே மதிப்பிழக்க வைக்கும் என்று கூறப்படும் இந்த யுனீக் ஆதார அட்டையை ஏன் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளிக்கிறார்கள்? சிறப்புகள் நிறைந்த இந்த ஆதார அட்டையைச் சிறப்புடன் வழங்காததேகூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைத் தோல்வியுறச் செய்யலாம்.
"உங்கள் பணம் உங்களுக்கே' என்ற திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன், மாணவர் படிப்புக்குரிய பண உதவி, மகப்பேறு மாதர் உதவி ஆகிய உதவித்தொகைகளை வங்கிக் கணக்கில் மாற்றுவதை ஏற்கலாம். அதேசமயம் பொது வினியோகத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி / கோதுமைக்குரிய அரசு நிர்ணயித்துள்ள சில்லறை விலையைப் பணமாக வங்கிக் கணக்கில் மாற்றுவது நல்ல யோசனை இல்லை.
பொது வினியோகம் என்பது கோடிக்கணக்கான மக்களின் வயிற்றுப்பாடு. பசியில்லாமல் வாழ வைக்கும் உணவுத்திட்டம். இந்தத் திட்டத்தைச் செழுமைப்படுத்தி தேசிய உணவுக்குறுதிச் சட்டத்தைக் கொடுத்த வாக்குறுதிப்படி நிறைவேற்ற வேண்டிய கடமையிலிருந்து பின்வாங்கக் கூடாது.
பொது மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள ஓர் அரசு எவ்வாறு குடிநீர், மருத்துவ வசதி, பள்ளிக்கல்வி ஆகியவற்றை வழங்குவதைப் போன்ற வயிற்றுப்பாட்டை கவனிக்க வேண்டுமென்று ஐ.நா. உடன்பாட்டில் இந்தியாவும் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பின்வாங்கலாமா?
யுனீக் அடையாள ஆதார அட்டை வழங்குவதற்குக் கோடிக்கணக்கான மக்களைப் பதிவு செய்யும் இத்திட்டத்திற்கு எதுவும் சட்டப்பாதுகாப்பு இல்லை என்பதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் எதிர்ப்பை மீறி மேற்படி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"உங்கள் பணம் உங்களுக்கே' என்ற திட்டத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளது. சரியான நடைமுறை இல்லாத காரணத்தால், ஆதார அட்டையை வைத்து ஏமாற்றப்பட்டவர்கள் வழக்குத் தொடர முடியுமா?
யுனீக் அடையாள ஆதார அட்டை மூலம் அவ்வளவு சமூகப்பாதுகாப்பு வழங்கல்களையும் - அதாவது முதியோர், விதவை பென்ஷன், மகப்பேறு மற்றும் கல்வி உதவித்தொகை எல்லாவற்றையும் வங்கிக் கணக்குக்கு மாற்றும்போது புதிய சிக்கல்கள் உருவாகும். இதுநாள் வரை அஞ்சலகத்தில் முதியோர் பென்ஷன் வாங்கியவர் பொதுவங்கியில் கணக்குத் தொடங்கி அஞ்சலகத்திலிருந்து வங்கிக்கு மாற்றப்படும் வரை எத்தனை அலைச்சல்கள் ஏற்படுமோ? இப்போதே வங்கிகளில் கூட்டம் தாள முடியவில்லை.
வங்கிகளில் செல்வாக்கில்லா வாடிக்கையாளர்களுக்கு எப்படி "மரியாதைகள்' வழங்கப்படுகின்றன என்பனவெல்லாம் நாடறிந்த உண்மை. முதியோர் பென்ஷனை அலைந்து திரிந்து வாங்க, தன்னை வங்கியில் ருசுப்படுத்துவதற்குள் அவர் பரலோகத்திற்கேப் போய்விடலாம்.
நூறு நாள் குளத்து வேலைத்திட்டம்போல் இதைச் செயல்படுத்த முடியாது. நூறு நாள் வேலைத்திட்டமும் சமூகப் பாதுகாப்பின் அம்சமாகத் தோன்றினாலும் விவசாய வேலைகள் பாதிப்புற்றுப் புஞ்செய் விவசாயம் - குறிப்பாக எண்ணெய் வித்துப் பயிர்கள், பருப்பு வகைப் பயிர் விவசாயம் குறைந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஊழல் மறுபக்கம் என்றாலும் சில மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டும் உருப்படியான பணி நிகழ்ந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மறு வெற்றிக்கு நூறு நாள் வேலைத்திட்டம் கை கொடுத்ததுபோல் யூனிக் அடையாள ஆதார அட்டை மூன்றாம் முறை ஆட்சியைக் கைப்பற்ற, முன்னோடி (பைலட்) திட்டமாகச் சில இடங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆறப்போட்டு விடலாம். ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் திட்டத்தின் தோல்விக்குரிய காரணங்களைக் கூறி சமாளித்துவிடலாம். பைலட் திட்டத்திற்குப் பணம் ஆறாக ஓடவிடப்படலாம்.
கடந்த பல ஆண்டுகளாகவே உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, உலக நிதியம் போன்ற அமெரிக்கக் கைப்பாவைகள் உணவு மானியம், உர மானியம் ஆகியவற்றை ரத்து செய்யும்படி ஆலோசனை கூறி வருகிறது.
அமெரிக்காவும் இதை வலியுறுத்தி வந்துள்ளது. உணவு மானியத்தையும் நிறுத்த வேண்டும். அமெரிக்காவையும் திருப்திப்படுத்த வேண்டும். அதேசமயம் மூன்றாவது தேர்தல் வெற்றிக்கும் திட்டமிட வேண்டும் என்ற இலக்கில் "உங்கள் பணம் உங்களுக்கே' என்ற கோஷம் எழுந்துள்ளது.
துரிதகதியில் யுனீக் அடையாள ஆதார காகிதங்கள் "பிட் நோட்டீஸ்'போல் வழங்கப்படுகின்றன. அப்படியே உணவு மானியம் ரத்தாகி அந்த மானியத் தொகை வங்கிக்கணக்கில் பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படுவதைச் செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் இலவச அரிசித்திட்டம் செயல்படுமா?
ஏனெனில் மாநிலங்களுக்குப் பொது வினியோக அரிசி மத்தியத் தொகுப்பிலிருந்துதான் வழங்கப்படுகிறது. உணவு மானியத்தைப் பணமாக வழங்கும்போது யுனீக் அடையாள ஆதார அட்டைப்படி குடும்பத் தலைவர் கணக்கில் வரவாகும். அப்பணத்தைக் கொண்டு அவர் வெளி அங்காடியில் விலை உயர்ந்த அரிசி வாங்குவாரா? விலை மலிந்த "டாஸ்மாக்' சரக்கு வாங்குவாரா? வறுமைக்கோட்டில் வாழக்கூடிய ஆண்களில் சுமார் 60 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்; உணவு மானியம் ரத்தானால் மது விற்பனை உயரலாம். இதைப் பெண்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் பணம் உங்கள் கையில்தான் என்ற நிலை மாறி ""எங்கள் பணம் ஆண்கள் கையில் போய்விட்டதே'' என்று பெண்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவார்களா என்பதை ராகுல் - சோனியா - மன்மோகன் கூட்டணி யோசிப்பது நன்று. வாழ்க பாரதம்.