முகப்பு
கட்டுரைகள்

நிழல்தேடும் மனிதர்கள்

கோடைக் காலத்திலேயே முக்கியமான கட்டமான "அக்கினி நட்சத்திரம்' முடிவுக்கு வந்துவிட்டது. இன்னமும் பல ஊர்களில் வெப்பம் குறையவில்லை.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:57 AM
பகிர்:

கோடைக் காலத்திலேயே முக்கியமான கட்டமான "அக்கினி நட்சத்திரம்' முடிவுக்கு வந்துவிட்டது. இன்னமும் பல ஊர்களில் வெப்பம் குறையவில்லை. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெப்பம் அதிகம் என்ற பேச்சுகளும், போகப்போக தண்ணீருக்குப் பற்றாக்குறை வரும்போல இருக்கிறதே என்ற அங்கலாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

புவி வெப்பமடையவும், பருவமழை குறையவும், காலம்தவறிப் பெய்யவும் யார் காரணம், மனிதர்களாகிய நாம்தான். விளைநிலங்களுக்காகக் காடுகளை அழித்தோம். வீடு கட்டுவதற்காக விளைநிலங்களை அழித்துவருகிறோம். நீர் நிலைகளையும் அலையாத்திக் காடுகளையும் அற்ப காசுக்காக காணாமல் போக்கினோம். தண்ணீர்ப் பற்றாக்குறை முதல் சுனாமி தாக்குதல் வரையிலான இயற்கைச் சீற்றங்களை நேரிலேயே அனுபவித்துவருகிறோம்.

மண்ணுக்கடியிலிருந்து கனிமவளத்தைப் பெறுவதற்காக ராட்சத மண் அள்ளும் இயந்திரங்களை இடைவிடாமல் பயன்படுத்துகிறோம். ஆற்று மணலை ஒட்ட எடுத்து கட்டடப் பணிகளுக்காகப் பயன்படுத்துகிறோம். இப்படி எல்லாவிதங்களிலும் இயற்கையைச் சீண்டுகிறோம்.

Advertisement

இன்னும் சில ஆண்டுகளில், மனிதர்கள் வசிப்பதற்கு தகுதியற்ற இடமாக இந்த பூமி மாறிவிடும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் கவலை கொள்கின்றனர். ஆனால் நாம் இதைப் பற்றிய எந்தக் கவலையும், விழிப்புணர்வும் இல்லாமல் சொந்த வீடான பூமியின் சூட்டை தாங்கிக்கொள்ள முடியாமல், நான்கு சுவர்களால் அடைக்கப்பட்ட வீட்டுக்கு குளிர்சாதனப் பெட்டி மூலம் குளிர்ச்சியை ஏற்படுத்த முயல்கிறோம். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியேறும் வெப்ப - நச்சு வாயுக்கள் பூமியை மேலும் வெப்பமயமாக்குகிறது என்று தெரிந்தும் கூடுதலாகத் தவறு செய்கிறோம்.

தொழில்புரட்சியால் ஏற்பட்ட ஆலைவாய் விஷப் புகைகளுடன் 2 சக்கர, 4 சக்கர மோட்டார் வாகனங்கள் வெளியிடும் கந்தகம் கலந்த கரியமிலவாயுவும் சேர்ந்து காற்று மண்டலத்தை விஷக்காற்று மண்டலமாக மாற்றி வருகின்றன.

இப்படி இயற்கையை நாசம் செய்யும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அமைய வேண்டும் என்றால் மரம் வளர்ப்புதான் ஒரே தீர்வு. மரங்களால் மட்டும்தான் கரியமிலவாயு மற்றும் இதர நச்சுக் காற்றை உள்வாங்கிக்கொண்டு, மனிதனுக்குத் தேவையான குளிர்ச்சியையும் நல்ல சுவாசக் காற்றையும் தர இயலும். நாமோ சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள் கட்டுமானம், அடுக்குமாடி குடியிருப்புகள், மேம்பாலங்கள் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து மரங்களை வெட்டிவருகிறோம்.

ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும். ஒரு சின்ன இலை வளர அந்த மரம் எடுக்கும் முயற்சி மிக அசாதாரணமானது.

நம்முடைய வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பயன்பாடு மிகவும் குறையும், மின்கட்டணமும் குறையும். அதிகப்படியான வெப்பம் விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பூமியின் மேற்பரப்பு எங்கும் ஏற்படும் வெப்ப உயர்வால் நீண்ட வறட்சியும், தண்ணீர்ப் பற்றாக்குறையும் அடிக்கடி ஏற்படுகிறது. பாலங்கள், சாலைகள் போன்ற கட்டுமானங்கள் வெப்பத் தாக்குதல்களால் வலுவிழந்து அவற்றின் பராமரிப்புச் செலவு அதிகமாகிறது.

உணவுக்கு நம் எதிர்காலச் சந்ததியினர் வீடுகளின் மொட்டைமாடிகளில் காய்கறிச் செடிகள், தானியங்களைப் பயிரிட வேண்டிய நிலை ஏற்படும்.

ஆம், நாம் மாற வேண்டும்; உடனடியாக, போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்க்க வேண்டும். மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

பெருநகரங்களில் சாலையில் "சிக்னலில்' காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், வெயிலை எதிர்கொள்ள முடியாமல் சாலையோர மரங்களின் கீழ் நிற்க, மரங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அப்படித் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா சாலைகளிலும் இருபுறங்களிலும் பயனுள்ள மரங்களை நடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments