தேவையற்ற இடைத்தேர்தல்கள்
மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற பிரதமர் நரேந்திர மோடி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர், தங்களின் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வரானதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், அந்தத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற பிரதமர் நரேந்திர மோடி, சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர், தங்களின் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வரானதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தும், அந்தத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலானாலும், சட்டப்பேரவைத் தேர்தலானாலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள், ஏதாவது ஒரு தொகுதியின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது மத்தியிலும் மாநிலத்திலும் வழக்கமாக இருந்து வருகிறது.
அதோடு, உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருப்போருக்கும், அவர்களது கட்சித் தலைமை எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்து அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் வகித்துவந்த உள்ளாட்சிப் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மக்களவைத் தொகுதிக்கும், உள்ளாட்சிப் பதவிகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தவே கோடிக்கணக்கில் பணம் செலவாகிறது.
அதோடு, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், பதவிக்காலத்தில் இறந்து விட்டால், அதற்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கும், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தொங்கு நிலை போல ஏற்பட்டால், மீண்டும் தேர்தல் நடத்துவதற்கும் செலவு பல மடங்காகிறது.
எப்படிப் பார்த்தாலும் இதில் மக்களின் வரிப்பணம் தேர்தல் செலவு என்ற பெயரில் வீணாகிறது. இதனால், பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஏற்படுவதோடு, பல்வேறு வரிகளை விதிக்கவோ, அதிகரிக்கவோ, அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், மக்களுக்குக் கூடுதல் சுமையே உண்டாகிறது.
தேர்தல் சீர்திருத்தத்தில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற முதிர்ந்த ஜனநாயக நாடுகள் எவ்வாறு வழிமுறைகளை வகுத்துள்ளன என்பதை ஆய்வு செய்து தேர்தல் சீர்திருத்த மசோதாவை கொண்டு வரவேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில், "திட்டக் குழு கலைக்கப்படும். அதற்கு மாற்றாக புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்' என்றும், நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.
அதேபோல தேர்தல் நடத்தும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை விரைவில் கொண்டுவர அவர் ஆர்வம் செலுத்த வேண்டும்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் ஒருவர், இரண்டிலும் வெற்றிபெற்று ஒரு பதவியை ராஜிநாமா செய்ய நேர்ந்தால், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய செலவு முழுவதையும் அந்த வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும். இல்லையெனில், இரண்டாம் இடம் பிடித்தவரை புதிய உறுப்பினராக அறிவிக்கலாம்.
அதேபோன்று, உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்றவரை உறுப்பினராக ஆக்கலாம். தேர்தல் முடிவுகளில் தொங்குநிலை ஏற்பட்டால் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், அதிக விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சி ஆட்சி அமைக்கலாம்.
தனிப்பட்ட ஒரு கட்சியால் ஆட்சிக் கலைக்கப்பட்டு, மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்தத் தேர்தலுக்கான முழுச் செலவையும், ஆட்சிக் கலைப்புக்கு காரணமான அரசியல் கட்சியையே ஏற்கச் செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே, ஆட்சிக் கலைப்புக்கு, உறுப்பினர்கள் கட்சித் தாவல் காரணமாக இருந்தால், அந்த உறுப்பினர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைத்தேர்தலில் செலவை ஏற்கச் செய்யும் நடைமுறையைக்கூட ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதனால், இடைத்தேர்தல் நடத்தப்படுவது தவிர்க்கப்படும். மக்கள் வரிப்பணம் வீணாவதும் தடுக்கப்படும்.
அனைத்துத் துறைகளிலும் முன் மாதிரியான அரசாக விளங்க வேண்டும் என எண்ணும் மத்திய அரசு, இந்த விஷயத்திலும் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும்.