கட்டுரைகள்

கணக்குப் பிள்ளையல்ல; தமிழ்ப் பிள்ளை!

பழந்தமிழ் இலக்கிய, காப்பிய ஓலைச்சுவடிகளெல்லாம் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பத்தொன்பதாம் நாள் பூரித்தன.

பெ.மணியரசன்

பழந்தமிழ் இலக்கிய, காப்பிய ஓலைச்சுவடிகளெல்லாம் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பத்தொன்பதாம் நாள் பூரித்தன. "இன்றைக்கு உத்தமதானபுரத்துக்குரிய ஓர் உத்தமக்குழந்தை சூரிய மூலையில் உதித்திருக்கிறதே, அந்தக் குழந்தை வளர்ந்து நம்மையெல்லாம் அச்சு வாகனத்தில் ஏற்றி, உலகெங்கும் உலா வரச் செய்யப் போகிறது' என்று பழந்தமிழ்ப் பத்துப் பாட்டுகளும், பரிபாடலும், பதிற்றுப் பத்தும், பாடிக் களித்தன; ஐங்குறுநூறு ஆனந்தக் கண்ணீர் வடித்தது; சிந்தாமணி சிலிர்த்துக் கொண்டது; பெருங்கதை பெருமிதப்பட்டது; மணிமேகலை "இனி, நான் அமுதசுரபியிலிருந்து அன்னம் கொடுக்கப் போவதில்லை; தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் அமுதமே வழங்கப் போகிறேன்' என்று அறிவிப்புச் செய்தது.

சிலப்பதிகாரமும் குறுந்தொகையும், "முன்னமே நாங்கள் அந்த அச்சு வாகனத்தில் அரைகுறையாக ஏறி அடிபட்ட கீறல்கள் இனி ஆறப் போகின்றன' என்பதான அளவற்ற மகிழ்ச்சியால் ஆசுவாசப்படுத்திக் கொண்டன. "திருப்பெருந்துறைப் புராணம்' தொடக்கமாக "தமிழ் நெறி' இலக்கண நூற்சுவடி ஈறாக நூற்று இருபத்தாறு சுவடிகள் குதூகலித்து ஆர்ப்பரித்தன.

ஒருபுறம், அகிலம் அறிந்திராத அரும்பெரும் தமிழ்நூல்களைப் படியெடுத்து ஆராய்ந்து செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டதால் ஏற்பட்ட கண்கூசும் புகழ் வெளிச்சத்தில் செம்மாந்து நின்றவர் செந்தமிழ்த் தாத்தா உ.வே.சா. மறுபுறம், அச்சக பண பாக்கிகளுக்காக இல்லத்தில் இருந்த பல பண்டங்களை விற்று, வறுமை இருட்டை விலைக்கு வாங்கிக் கொண்டவரும் உ.வே.சா. அவர்களே. அந்தக் கும்மிருட்டுக் குடைசல்கள் பற்றிய செய்திகளெல்லாம், அவரின் மொத்த வாழ்க்கையைத் தெரிந்தவர்கள் மட்டுமே அறிந்தவை.

அவர்களில் ஒருவர் இரா. இராகவையங்கார் (1870-1946). அவர் அரும்பெரும் புலவர். அவர் கற்ற நூல்களும் வெளியிட்ட ஆராய்ச்சி நூல்களும் அனேகம். அவர் கற்ற நூல்களில் ஒரு முக்கியமான மனித நூல், உ.வே.சா. என்னும் புனித நூல். 27.4.1942 பிற்பகல் 3.45க்கு உ.வே.சா. என்னும் தமிழ்ப் புத்தகத்தை மூடி முடிச்சுப் போட்டு இறைவர் எடுத்துக் கொண்டுவிட்டார். அச்செய்தி கேட்டு அறிஞர் இரா. இராகவையங்கார் கையறு நிலை பாடி, அழுதார்.

"ஏடு தேடி அலைந்த ஊர் எத்தனை!

எழுதிஆய்ந்த குறிப்புகள் எத்தனை?

பாடுபட்ட பதப்பொருள் எத்தனை?

பல்நெறிக்கண் பொருள்துணிபு எத் தனை!

நாடும்அச்சில் பதிப்பித்த கூலிக்கு

நாளும்விற்றபல் பண்டங்கள் எத் தனை?

கூடி வந்தவர்க்கு ஆற்றின எத்தனை?

கோதிலாச் சாமி நாதன் தமிழ்க்கென்றே!

கோதுஇலாச் சாமிநாதன் - குற்றமில்லாத உ.வே.சா. அவர்கள் தமிழ் நூல்களை அச்சிட்ட அச்சகக் கூலிக்காக இல்லத்திலிருந்த பண்டம் பாத்திரங்களை விற்ற தியாகம் மட்டுமா செய்தார்?

இராமநாதபுரம் சேதுபதி மன்னர் அழைப்பின் பேரில், அவருடைய அரண்மனைக்கு ஒருமுறை சென்றார் உ.வே.சா. அவர்கள். வழக்கம்போல அன்பான உபசரிப்புகள் நடந்தன.

உ.வே.சா. அவர்களின் தமிழ்நூற்பதிப்புப் பணி, பணத் தட்டுப்பாட்டால் முட்டுப்படக் கூடாது எனக் கருதிய வள்ளலாகிய சேது மன்னர், ஒரு கிராமத்தையே அவருக்களித்துச் சாசனப்படுத்தி வைத்திருந்தார். அந்த "புலவர் முற்றூட்டு ஆவண'த்தை உ.வே.சா. அவர்களிடம் வழங்க முற்பட்ட மன்னர், "ஒரு கிராமத்தை உங்களுக்கு வழங்குகிறேன். அதில் தாங்கள் நிரந்தரமாகக் குடிபுகுந்து, நிலபுல தோட்டங்களின் வருமானங்களைக் கொண்டு, செல்வச் செழிப்புடன் செந்தமிழ்ப் பணிகளை நிறையச் செய்யுங்கள்' என்று சொல்லிக் கொண்டே அறக்கொடை ஆவணத்தை நீட்டினார்.

உ.வே.சா. அவர்கள் கைகளைக் கட்டிக் கொண்டார். அந்த ஆவணத்தை வாங்கிக் கொள்ளவில்லை.

"இப்பொழுது நான் தமிழ்ப் பிள்ளையாக இருக்கிறேன்; என்னைக் கணக்குப் பிள்ளை ஆக்கி விடாதீர்கள்' என்றார் உ.வே.சா. அவர்கள். மன்னர் திகைத்தார். "ஆமாம். கிராமம் நிலம் புலம் தோட்டம் என்பவையெல்லாம் வந்தால் அவை தொடர்பான கணக்கு வழக்குகளைப் பார்ப்பதிலேயே என் காலம் கழிந்து விடுமே! என் தமிழ்ப் பணிகளின் கதி என்னவாகும்?' என்று மறுப்புக்கான விளக்கத்தை மன்னருக்குச் சொன்னார்.

உ.வே.சா. அவர்களின், பெருந்தன்மை மன்னரை அதிசயத்தில் ஆழ்த்தியது. பொன்னாடையொன்றைத் தருவித்து, "இதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று உ.வே.சா. அவர்களுக்கு வழங்கினார் சேதுபதி மன்னர். அந்தக் காலங்களிலெல்லாம் பொன்னிழைகளால் நெய்யப்பட்ட ஆடைக்கு மட்டுமே பொன்னாடை என்று பெயர்; அதை உருக்கினால் பொன், கால் வீசையாவது தேறும்.

சென்னைக்கு வந்த உ.வே.சா. அவர்கள், "தியாகராஜ விலாசம்' என்ற நன்றிப் பெயர் கொண்ட தம் இல்லத்தில் நுழைந்தார். சற்றே இளைப்பாறினார். மன்னர் பரிசாக அளித்த பொன்னாடையை மனைவியார் மதுராம்பிகைக்கு காண்பித்தார். மதுராம்பிகை மதுர மொழிகளால் பாராட்டினார். கணவனார் பெயருக்கு வந்த கடிதங்களை ஒப்படைத்தார்.

அவற்றில் ஒரு கடிதம் அச்சகத்தாரிடமிருந்து வந்திருந்தது. அதில் "நாளது தேதிவரை தாங்கள் எங்களுக்குத் தர வேண்டிய அச்சுக் கூலிப் பாக்கித் தொகை... இத்தொகை முழுவதையும்... தேதிக்குள் செலுத்தாவிட்டால்...' உ.வே.சா. அவர்கள் கடிதத்தை மேற்கொண்டு படிக்கவில்லை.

மன்னர் கொடுத்த பொன்னாடையை தாளில் மடித்தெடுத்துக் கொண்டு வீட்டை விட்டு விருட்டென்று புறப்பட்டார்.

அச்சக பாக்கிக்கு எவ்வளவு தொகை தேவையோ அந்தத் தொகைக்குப் பொன் வணிகரிடம் பொன்னாடையை விற்றார். அச்சகத்திற்குச் சென்று பாக்கியைத் தீர்த்தார். "தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்றார். அச்சகத்தாரின் மறுமொழிக் கூடக் காத்திராமல் அவசரமாக ஏறுநடைபோட்டு இல்லத்திற்கு மீண்டார்.

சிந்தாமணிப் பதிப்புக்கு பணம் போதாமையால் கையொப்பத் தொகை (முன்பதிவுத் தொகை) வாங்கியபோது, அந்த நாலணா, எட்டணாவையும், "கொடுக்காதீர்கள். சிந்தாமணி வராது. உங்கள் மணி சிந்தும் மணி ஆகிவிடும். இவர் மாற்றல் பெற்றுக் கொண்டு ஓடிவிடுவார்' என்று உ.வே.சா. அவர்கட்குக் கேட்கும்படியாகவே பிரசாரம் செய்தார்களே! அப்போதும் துவளாத தியாகச் சுடர், உ.வே.சா. அவர்கள்.

அயராது உழைத்து "பெருங்கதை'யை அச்சிட இருந்த நிலையில் "பெருங்கதை வெளிவரப் போகிறது; ஏடுகளைக் கொடுங்கள்' என்று காசு செலவழித்துப் போலிப் பெயரில் விளம்பரம் செய்து, பெருங்கதை வெளியீட்டைத் தடுக்கப் பார்த்தார்களே, அப்போதும் அலுத்துப் போய்த் தமிழ்ப் பணியை நிறுத்தாமல், வென்றேறிய தியாக வீரர் உ.வே.சா. அவர்கள்!

இவ்வளவு மனத்திட்பம் அவருக்கு எப்படி வந்தது? பாலனாம் பருவத்திலேயே இயல்பாகவே முளைத்தெழுந்த பசுந்தமிழ்க் காதலால் விளைந்து வந்தது!

தந்தையார் வேங்கட சுப்பிரமணிய ஐயர், தன் மகனாருக்கு இசை கற்றுக் கொடுத்தார். வடமொழியின் ருசி காட்டினார். தெலுங்கு கற்றுக் கொடுத்தார். அரிச்சுவடிக் கல்வியோடு ஆங்கிலம் ஆரம்பிக்கப்பட்டது.

எல்லாக் கல்வியும் தொடங்கியாயிற்று. இந்த நிலையில் தந்தையார், வேங்கடராமன் எனப் பெயரிடப்பட்ட தன் மகனிடம் (உ.வே.சா. அவர்களிடம்) பேச்சுவாக்கில், "ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் இது. ஆங்கிலம் படித்தால் நல்ல உத்தியோகத்திற்குப் போகலாம்; நிறையச் சம்பாதிக்கலாம். சமஸ்கிருதம் உயர்ந்த மொழி. அதில் ஆன்மிக நூல்கள் கொட்டிக் கிடக்கிறது. அதைப் படித்தால் மனிதப் பிறவி எடுத்ததின் பயனாகிய மோட்சத்தை அடையலாம். எதையாவது முழுமையாகப் படிக்க வேண்டும். நீ எதைப் படிக்கப் போகிறாய்?' என்று கேட்டார்.

சிறுவர் (உ.வே.சா.) சற்றும் தயங்காமல் "நல்ல பதவியும் கிடைக்கும். ஞான நூல்கள் நிறைய இருப்பதால் பிறவிப் பயனையும் அடையலாம். எல்லாம் கொடுக்கும் ஒரே மொழி தமிழ் மொழி.

ஒவ்வொரு பயனுக்குமாக ஒவ்வொரு மொழி தேவையில்லையே. நான் தமிழ் படிக்கவே விரும்புகிறேன்' பளிச்சென்று பதிலுரை பகர்ந்தார்.

இப்படி பால பருவத்தில் தந்தைக்கே உண்மையை உரைத்ததால் "சாமிநாதன்' என்ற பெயர்தான் இவருக்குப் பொருந்தும் எனக் கருதித்தான் போலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள், சாமிநாதன் என முழுப் பெயரிட்டு, அப்பெயரே காலமெல்லாம் நிலைக்கும்படியாக அருள் செய்தார்.

உ.வே.சா. அவர்களின் நினைவைப் போற்றுவோம். அதற்கு ஒரே ஒரு பணிதான் பொருத்தமானது.

தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில், 16,480 முகவரிகளில், 5,84,134 ஓலைச்சுவடிக் கட்டுகள் உள்ளன என்று 2007, 2008 ஆண்டுகளில் அரசு நடத்திய களப் பணிக் கணக்கொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

அவற்றில் முப்பத்தைந்து முதல் நாற்பது விழுக்காடு நூல்கள் வரை அச்சில் வெளிவராதவைகளாக இருக்கலாம். தமிழில் இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நூல்களை மறைந்து போன தமிழ் நூல்கள் என்று பட்டியலிட்டபடி உட்கார்ந்திருக்கிறோம்.

சுவடிக் கலை பற்றிய நூல்கள் பல வெளிவந்துவிட்டன. அந்தச் சுரைக்காய் பருத்தது போதும். இனி இளைஞர்களுக்கு, இத்துறைக்கான பணியிடங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்கள் தொடக்கத்தில் அவர்களின் உடனிருந்து படியெடுத்துச் செப்பனிட்டுப் பதிப்பிக்கப் பழக்க வேண்டும்.

இளைஞர்களை இப்புனிதத் தமிழ்ப் பணிக்கு ஆர்வப்படுத்தி ஈடுபடுத்த அவர்களுக்கு நிறைந்த மாத ஊதியம் வழங்கி, உடனிருந்து கண்காணித்து, தொலைந்தனவாகக் கருதப்படும் தமிழ் நூல்கள் யாவற்றையும் மீட்டெடுத்தாக வேண்டும்.

இன்று "தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே.சாமிநாதைய்யரின் 160ஆவது பிறந்தநாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT