ஆட்டி வைக்கும் ஆடி மாதம்
"ஆடிப் பட்டம் தேடி விதை' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், ஒரு சராசரி விவசாயி ஆடி மாதம் நெருங்கும்போதே ஆடிப் போவார்.
கட்டுரைகள்ஆட்டி வைக்கும் ஆடி மாதம்
"ஆடிப் பட்டம் தேடி விதை' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், ஒரு சராசரி விவசாயி ஆடி மாதம் நெருங்கும்போதே ஆடிப் போவார்.
"ஆடிப் பட்டம் தேடி விதை' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், ஒரு சராசரி விவசாயி ஆடி மாதம் நெருங்கும்போதே ஆடிப் போவார். தரகர்களைத் தேடி ஓடுவார். பணத்தை எங்கே தேடுவேன் என்று கலங்குவார்.
ஆடி மாதம் பிறந்தால் விவசாயச் செலவு ஒரு பக்கம் என்றால், சடங்கு, மரியாதைச் செலவு மற்றொரு பக்கம். கிடா வெட்டுவது, கூழ் ஊற்றுவது நிகழ வேண்டும். மாரியம்மனுக்கும் சடையாண்டிக்கும் படைக்க வேண்டும்.
சேமித்தவை செலவாகிவிடும். ஆடியில் வரவு இருக்காது; வறுமைதான் இருக்கும். ஆகவே, "ஆடி அரை வட்டை' என்று விவசாயிகள் புலம்புவார்கள். வீட்டில் அரை வயிற்றுக் கஞ்சிதான்.
நாம் "ஆடி அரை வட்டை' என்பறு கூறுவதை வங்கதேச (பங்களாதேஷ்) விவசாயிகள் "மொங்கா' என்பர். "மொக்கை' திரிந்து மொங்காவாகியிருக்கலாம். மொக்கை - மொங்கா என்றால் "ஒன்றுமில்லை' - முழுப் பட்டினி. ஐ.நா. சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அறிக்கை, உலகை ஆட்டுவிக்கும் "எல்நினோ' வங்க தேசத்தை மிகவும் பாதிக்கும் என்று நான்காண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்துள்ளது.
வங்க தேசத்தில் செப்டம்பருக்குப் பின் மழை இருக்காது. நல்ல வெயில் இருக்கும். அக்டோபரும் நவம்பரும் மொங்கா மாதங்கள். நவம்பரில் குளிர்காலப் பயிர் உண்டு. வேலையும் கூலியும் உண்டு. பின் ஏப்ரல், மே இரு மாதங்களும் மொங்கா. குறிப்பாக வங்கதேசத்தின் வடக்குப் பிராந்தியத்தில் "ஆடி அரை வட்டை' நான்கு மாதங்களுக்கு நீடிக்குமாம்.
தமிழ்நாட்டில் மழை பெய்யாமல் பிரச்னை. வங்கதேசத்தில் காலம் மாறிப் பெய்யும் மழையால் ஜீவாதாரமே பறிக்கப்படுகிறதாம். மொங்கா மாதங்களில் அவர்கள் கோடை நெல் பயிரிடுவார்கள். காலம் மாறிப் பெய்யும் பேய் மழையால் நெற்பயிர்கள் கொள்ளை போய், வாழ்வுக்கு வழி தேட வனப் பகுதிக்குள் சென்று கிழங்குகளைத் தோண்டி எடுத்துப் புசித்து உயிர் வாழ்வார்கள். சிலர் பெருநகரங்களுக்குச் சென்று வேலை தேடுவார்கள்.
இந்தியாவில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் பஞ்சாயத்துத் தலைவர்கள் பணம் சுருட்டுவதைப்போல், அங்கும் மொங்கா திட்டம் உண்டு. ஆனால், கடந்த 4, 5 ஆண்டுகளாக விவசாயிகள் தாமாகவே மொங்கா காலத்தில் வெள்ளம் பாதிக்காத வகையில் பயிர் திட்டத்தை மாற்றிக் கொண்டனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
வங்க தேச சாகுபடிப் பயிர்களில் சணல், புகையிலை, உருளைக்கிழங்கு போன்றவை குளிர்காலப் பயிர்களாகவும், நெல் கோடைப் பயிராகவும் மொங்காவில் பயிராகிறது.
முன்பு, வெள்ளத்திற்கு பலியாகும் 110-120 நாள் வயதுள்ள ஐ.ஆர். வீரிய ரக நெல் விதைகளைப் பயன்படுத்தி வந்தனர். அண்மையில், வெள்ளத்திலிருந்து பயிரைக் காப்பாற்றும் முயற்சியில் குறுகிய காலப் பாரம்பரிய நெல்லைத் தேடிக் கண்டுபிடித்தனர்.
90 நாள் வயதுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் 10-க்கு மேல் இருப்பினும் மூன்று ரகங்களை மட்டுமே - அதாவது, ஷைத்தா, பாரிஜா, ஷூர்ஜமுகி ஆகியவற்றை மட்டுமே விதைச் சிக்கன முறையில் மடகாஸ்கர் ஒற்றை நாற்று நடவு செய்து வெள்ளம் வருமுன் 75 நாளில் அறுவடையும் செய்து விடுகிறார்கள்.
மடகாஸ்கர் ஒற்றை நாற்று நடவை 2003-இல் குற்றாலம் அருகில் உள்ள முருகமங்கலம் கிராமத்தில் எஸ். ராமவேல் என்ற விவசாயி, நம்மாழ்வார், சுந்தரராமன் போன்றோர் வழங்கிய ஊக்கத்தை முதலாகப் போட்டு, இயற்கை வழியில் வெற்றி பெற்று ஏக்கருக்கு 4 முதல் 5 டன் நெல் அறுவடை செய்ததாக தெரிகிறது.
ராமுவேலைத் தொடர்ந்து ரசாயன விவசாயிகளும் ரசாயன உரத்துடன் இயற்கை உரங்களையும் கலந்து அதே மகசூலைப் பெற்றவுடன், தாமதமாகக் களத்திற்கு வந்த தமிழ்நாடு வேளாண்மைத் துறையினர், மடகாஸ்கர் என்ற பெயரையும், ஒற்றை நாற்று என்ற பெயரையும் மறைத்து "திருந்திய நெல் சாகுபடி' என்று புதிய நாமகரணம் சூட்டினர்.
இந்த முறை, தமிழ்நாட்டில் பரவலாகியது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து ஒடிசா, அஸ்ஸாம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் பரவி, இன்று அவர்கள் நெல் உற்பத்தியில் தமிழ்நாட்டை முந்தி விட்டனர். 2008 - 2009 காலகட்டத்தில் மடகாஸ்கர் என்கிற திருந்திய நெல் சாகுபடி வங்கதேசத்திற்கும் பரவி, அவர்களின் "ஆடி அரை வட்டை' - அதாவது மொங்கா பஞ்சத்தையே தீர்த்து வைத்துள்ளது.
மடகாஸ்கர் முறையில் ஒரு நாற்று நடப்படும். திருந்திய நெல் சாகுபடியில் 2, 3 நாற்றுகள் நடப்படுகின்றன. இதுதான் வித்தியாசம். சாதாரணமாக, 1 ஏக்கர் நெல் சாகுபடிக்கு 30 முதல் 40 கிலோ விதை நெல்லை ஊறப் போடுவார்கள்.
மடகாஸ்கர் முறையில் 2 அல்லது 3 கிலோ நெல் போதும். திருந்திய நெல் சாகுபடியில் 10 கிலோ நெல் செலவாகலாம். ஒரிஜனல் மடகாஸ்கர் ஒற்றை நாற்று நடவு பற்றிய குறிப்பு என்ன?
மடகாஸ்கர் தீவுகள் ஆப்பிரிக்காவை ஒட்டியுள்ளன. கருப்பு விவசாயிகளுடன் வாழ்ந்த ஒரு வெள்ளைப் பிரெஞ்சுப் பாதிரியார் 30 ஆண்டுகால ஆய்வுக்குப் பின் கண்டுபிடித்த உழவியல் தொழில்நுட்பத்தில் ஏக்கருக்கு 6 டன் நெல் விளைவித்தார்கள்.
மடகாஸ்கர் நடவு முறையில், துண்டுத் துண்டாகச் சிறிய வரப்புகள் அமைத்துச் சேற்று உழவில் நடவு செய்யும்போது, 10 நாள் வயதுள்ள சிறு நாற்றை ஒரு அடி இடைவெளிவிட்டு ஒன்று ஒன்றாக நட வேண்டும்.
மடகாஸ்கர் நடவில் காயக்காய தண்ணீர் விட வேண்டும். ஒரு இழை அளவுக்கு வெடிப்பு வந்ததும், பேப்பர் கனத்தில் நீர்விட வேண்டும். இப்படி நடப்பட்ட ஒரு நாற்றுக்கு அதிர்ச்சி தரும்போது, கனமாகத் தூர் கட்டி ஏராளமாகக் கிளை வெடிக்கும்.
மேற்படி உழவியல் நுட்பப்படி, கோடைச் சாகுபடியில் குறுகிய காலப் பாரம்பரிய நெல்லைப் பயன்படுத்தி, வங்க தேச விவசாயிகள் மொங்கா அரை வட்டையை முழு வட்டையாக மாற்றிக் கொண்டார்கள். ஆனால் நாம்...?
தமிழ்நாடு வறட்சியால் தள்ளாடுகிறது. திண்டுக்கல் மாவட்டம் வறட்சியின் உச்சத்தில் உள்ளது. ஆத்தூர் காமராஜர் அணை வறண்டுவிட்டது. மூன்று போகம் நெல் விளைந்த ஆத்தூரில் மூன்றாவது ஆண்டாக வறட்சி தொடர்கிறது.
இங்கு பசுமைக் காட்சியைக் கண்டு மூன்றாண்டுகளாகிறது. மாட்டுக்கு வைக்கோல் தஞ்சை மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பட்டுவிட்டன. சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கடும் வறட்சி.
வானிலை நிபுணர்களால் "எல்நினோ' தோன்றும் காலம், களம் பற்றி உறுதியாகக் கூற முடியவில்லை. அதே சமயம், 2014-15-இல் இந்தியாவில் பருவமழை சராசரியை விடக் குறைவாக இருக்கும் என்று உறுதியுடன் கூறிவிட்டனர்.
பருவமழை பற்றியப் புள்ளிவிவரங்களைக் கவனித்தால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மழை குறைவதையும், முன்னும் பின்னுமாகச் சில ஆண்டுகளில் மழை கூடுதலாகப் பெய்துள்ளதையும் கவனிக்கலாம். கூடுதலாக மழை பெய்யும்போது, ஆறுகளில் வெள்ளம் பெருகும். இப்படி வெள்ளமாக ஓடும் நீரை மண்ணில் தக்க வைக்காமல் கடலில் வடித்து விடுகிறோம்.
மழை கனமாகப் பெய்யும்போது வெள்ளம் வடிந்தால் போதும் என்ற கவலை. மழை பெய்யாமல் வறட்சி ஏற்படும்போது மழை சேமிப்பைப் பற்றிய ஞானோதயம் ஏற்படுகிறது. வறட்சியின் போதும், மழை பெய்யாத போதும் மழைநீர் சேமிப்பைப் பற்றி யோசித்து என்ன பயன்?
அவரவர் வீட்டு மாடியில் பெய்யும் மழையைத் தரைப் பகுதியில் கட்டப்படும் சம்ப்பில் சேமிக்க வேண்டும். விவசாயத்திற்கு உதவும் வகையில் மண்ணில் சேமிப்பது அதைவிட முக்கியம்.
வறட்சிக்குத் தீர்வாக நமது முன்னோர்கள் ஏரி, குளங்களை வெட்டினார்கள். புவியியல் அமைப்பில் உள்ள இயல்பான பள்ளத்தை மேலும் செப்பனிட்டு ஏறிய நீரை இறக்கும் வழியில் மதகுகளை அமைத்துப் பாசனத்திற்கு வாய்மடை அமைக்கப்பட்டது.
1997-98 ஆண்டுகளின் புள்ளிவிவர அடிப்படையில் தமிழ்நாட்டில் 7,402 சிறு ஏரிகள் - 100 ஏக்கர் ஆயக்கட்டுள்ளவையும், 30,895 பெரிய ஏரிகள் - 100 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டுள்ளவையும் என ஒட்டுமொத்தமாக 38,297 ஏரிகள் இருந்தன. இது பழைய கணக்கு.
2014-15-இல் புதிய கணக்கு எடுக்கும்போது, உண்மையில் ஏரி இருந்த இடங்களை அடையாளம் காணும் முயற்சி இருந்தால் அவ்வளவு ஏரிகள் எங்கே போயின என்று தெரிய வரலாம். பல நூற்றாண்டுகளாகத் தூர்வாரப் படாமல் ஏரிப் படுகை சமநிலமாகிப் பின்னர் புறம்போக்காகி ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருவாய்த் துறையிலிருந்து பட்டாகூட பெறப்பட்டிருக்கலாம்.
ஏரி, குளங்களைக் குப்பைக் கிடங்குகளாகவும் அடுக்கு மாடிகளாகவும் மாற்றிவிட்டால், மழைநீரை எங்கு சேமிப்பது?
மழைநீர் சேமிக்க ஏரிகள் இல்லாததால் பொங்கி வரும் மழை வெள்ளத்தை வங்காள விரிகுடாவுக்குக் கொடுத்துவிட்டு, கங்கை வருமா, கோதாவரி வருமா என்று நதிநீர் இணைப்பு பற்றிய கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது சரியா?
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.