முகப்பு
கட்டுரைகள்

எட்டுத்திக்கும் செல்வதெப்படி?

தமிழுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. தருண் விஜய் திருவள்ளுவருக்கும் பாரதியாருக்கும் தேசிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்த காரணத்தினால் கவிஞர் வைரமுத்து, தருண் விஜயை சென்னைக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தி கெளரவித்ததை நாடறியும்.

கட்டுரைகள்

எட்டுத்திக்கும் செல்வதெப்படி?

தமிழுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. தருண் விஜய் திருவள்ளுவருக்கும் பாரதியாருக்கும் தேசிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்த காரணத்தினால் கவிஞர் வைரமுத்து, தருண் விஜயை சென்னைக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தி கெளரவித்ததை நாடறியும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

தமிழுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. தருண் விஜய் திருவள்ளுவருக்கும் பாரதியாருக்கும் தேசிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்த காரணத்தினால் கவிஞர் வைரமுத்து, தருண் விஜயை சென்னைக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தி கெளரவித்ததை நாடறியும்.

தருண் விஜய் முயற்சியால் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாரதியார், திருவள்ளுவர் பிறந்த தினங்கள் தேசிய விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

இவ்வாறு தமிழுக்கு மரியாதை செய்யும் பா.ஜ.க. அரசின் நல்லெண்ணத்திற்கு மாசு கற்பிக்கும் வழியில் திராவிடக் கட்சிகள் பேசுவது இயல்பு. ஆனால், தேசியப் பாரம்பரியத்தில் வளர்ந்த காங்கிரஸ் கட்சியும் அப்படிப் பேசுவது சரியல்ல.

தமிழ்நாட்டில் ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் திணிப்பதற்குத்தான் தமிழ் மரியாதை என்று புதிய அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. திணிப்பு என்று சொல்லாமல் "மறு அறிமுகம்' என்று கூறலாம்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் பேசியபோது, "ஹிந்தி படியுங்கள். ஹிந்தி மட்டுமல்ல; எல்லா மொழிகளையும் படியுங்கள். அரசியலில் ஆதாயம் வேண்டுமென்று ஹிந்தியை எதிர்க்கும் திராவிடக் கட்சியின் வாரிசுகள் ஹிந்தி மொழி கற்றது எப்படி?' என்று கேட்டுள்ளார்.

"படிக்கும் காலத்தில் தான் ஹிந்தி படிக்காமல் விட்ட தவறுக்கு வருந்துவதாகவும், ஹிந்தி அறிவு இருந்திருந்தால் சக அமைச்சர்களுடன் தில்லியில் நல்ல கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவியிருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வேர் முக்கால்வாசி அறுந்துவிட்ட நிலையில், அது கனவு. காமராஜர் ஆட்சி என்று பேசுவோர் காமராஜர் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட கல்விக் கொள்கை புத்துயிர் பெற பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவார்களா?

காமராஜர் ஆட்சியில் பள்ளிகளில் மும்மொழித் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டது. முதல் மொழி தமிழ். முதல் மொழியில் முதல் பாகம் கட்டாயம். முதல் மொழியில் இரண்டாம் பாகமாக சிறப்புத் தமிழ் அல்லது சம்ஸ்கிருதம். விரும்புவோர் மட்டும் சம்ஸ்கிருதம் கற்க வாய்ப்பு இருந்தது. சம்ஸ்கிருதம் கட்டாயம் இல்லை. மூன்றாவது மொழியாக ஹிந்தி. இது விருப்பப் பாடம். ஹிந்தியில் குறைந்த மதிப்பெண் வாங்கினாலும் மேல்வகுப்புக்குச் செல்லத் தடையில்லை.

இந்த மும்மொழித் திட்டத்தால் பயனடைந்த நான் ஹிந்தி - சம்ஸ்கிருத அறிவால் பிற்காலத்தில் விருட்சாயுர் வேதத்தையும் காஷ்யப க்ருஷி சூக்தத்தையும் தமிழில் மொழிபெயர்த்தேன். தமிழறிவும் வளர்ந்தது. ஆகவே, காமராஜர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட மும்மொழித் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்தால், பிறமொழி அறிவால் ஏராளமாகப் புதிய வேலைவாய்ப்புகளும் கிட்டும்.

காமராஜருக்குப் பிறகு பதவிக்கு வந்த தி.மு.க. அரசு தமிழைக் காப்பாற்றுவதாக எண்ணி மும்மொழித் திட்டத்தைக் கைவிட்டு 37 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இதனால், வேலை இழந்த ஆயிரக்கணக்கான ஹிந்தி - சம்ஸ்கிருத ஆசிரியர்களுக்காகக் கண்ணீர் சிந்த அன்று யாரும் முன்வரவில்லை.

இவ்வாறு வேலை இழந்து, ஓய்வூதியம் மறுக்கப்பட்டு உரிய காப்பீடும் வழங்கப்படாததால், தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான ஹிந்தி, சம்ஸ்கிருத ஆசிரியர்களில் 99 சதவீதம் பிராமணர்கள் என்பதால், அவர்களை வறுமையில் வாடவிட்டுச் சிலரைத் தற்கொலைக்குத் தூண்டியதும், அப்போதைய அரசுதான்.

காஷ்மீரிலிருந்து மத வெறியர்களால் காஷ்மீர் பண்டிட்டுகள் துரத்தப்பட்டு, வீடு வாசல் இழந்து, அகதிகளாக தில்லி முகாம்களில் அடைபட்டுக் கிடந்தபோதே மெளனமாயிருந்த காங்கிரஸ், 1967-க்குப் பிறகு வேலையில்லாமல் வீட்டுக்குள் அகதிகளாக வாழ்ந்த ஹிந்தி - சம்ஸ்கிருத ஆசிரியர்களுக்காக கண்ணீர் சிந்துமா?

இப்படி இழந்த வேலைவாய்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் இனி வரவிருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றி நாம் சிந்திப்போம். அண்மையில், அலிகர் பல்கலைக்கழகத்தில் ஹிந்திப் பேராசிரியராகப் பணியாற்றும் இஸ்லாமியத் தமிழர், காந்தி கிராமத்தில் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, தமிழர்கள் ஹிந்தி பயிலாததால் வட இந்திய வேலைவாய்ப்புகளை இழப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வாய்ப்புகளை சக தென்னிந்தியர்களான மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடியர்களும் பெறுவதாகத் தெரிவித்தார். ஹிந்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்களுக்கு வட இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதில் வியப்பான விஷயங்களும் உண்டு. எல்லா மாநிலத்தவர்களுக்கும் பொதுவாக ஹிந்தியில் ஒரு தேர்வு வைக்கும்போது வட இந்தியர்களை விடத் தென்னிந்தியர்கள் அதிகம் மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.

ஏனென்றால், ஹிந்தியில் உள்ள சம்ஸ்கிருதக் கலப்பு தென்னிந்தியர்களின் வாய்ப்பு. இம்மொழியில் இந்தியப் பிராந்தியங்களின் பல்வேறு பேச்சு மொழிகளுடன் சம்ஸ்கிருதம் சம பங்கு உள்ளது.

தமிழ் நீங்கலாக மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, வங்காளி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகள் சம்ஸ்கிருத எழுத்து முறையான தேவநாகரியைக் கடைப்பிடிக்கின்றன.

ஹிந்தி மாநிலங்கள் என்று கூறப்படும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போஜ்பூரி, மாகதி போல் ஏராளமான பேச்சு வழக்குகள் உண்டு.

இந்தியாவில் எழுத்து வடிவம் பெறாத 700-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆகவே, பிரேம்சந்தால் உருப்பெற்ற ஹிந்தி மொழி ஒரு வகையில் ஹிந்தி பேசப்படும் மாநிலங்களில்கூட அன்னியம் என்றாலும், அவர்கள் ஹிந்திக்கு மரியாதை செலுத்துகிறார்களே தவிர, எதிர்க்கவில்லை. தமிழ்நாடு தவிர, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பேசப்படும் பொதுமொழி ஹிந்தியே.

சம்ஸ்கிருதம் பற்றிச் சில வார்த்தைகள். சம்ஸ்கிருத மொழி பாணினிக்கு முன்பு பிராகிருதமாக இருந்தது. நிறைய வட்டார வழக்குகள் கலந்திருந்தன. நான்கு திசைகளிலும் ஒரே மாதிரியாக ஒலிக்கவும் உச்சரிக்கவும் பிராகிருதத்தை சம்ஸ்கிருதமாக ஏறத்தாழ கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் பாணினி செழுமைப்படுத்தினார்.

"சம்ஸ்கிருதம்' என்ற சொல்லின் பொருள் "செழுமைப்படுத்திய மொழி'. "பிராகிருதம்' என்பது "செழுமையற்ற மொழி'. ஆகவேதான், பாணினி எழுதிய "அஷ்டாத்யாயி', இந்திய மொழிகள் அனைத்திற்கும் பொருந்தும் இலக்கண நூலாக மதிக்கப்

படுகிறது.

சம்ஸ்கிருதம் உருவாவதற்கு முன்பே வேதங்கள் தோன்றிவிட்டன. அவை "வைதீக சம்ஸ்கிருதம்'. பாணினியால் எல்லா திசைகளிலும் ஒரே மாதிரியான "சப்தம்' உருவாயிற்று.

பாணினிக்குப் பிறகு சம்ஸ்கிருதம் தென்னாட்டில், குறிப்பாக, கேரளத்தில் குடி கொண்டதாக சம்ஸ்கிருத மொழி ஆய்வு செய்த வரலாற்றுப் பெருந்தகை டி.டி. கோசாம்பி ஆதாரத்துடன் முன்வைத்துள்ளார். பாணினிக்குப் பிறகு சம்ஸ்கிருத மொழியைக் கையாண்ட பதஞ்சலி, பாசர், பாணர் போன்றோர் தென்னாட்டவர்களே.

தமிழ்நாட்டிலும், தெலுங்கு நாட்டிலும் மன்னராட்சிக் காலத்தில் தஞ்சை சரபோஜி, திருச்சி நாயக்கர்கள் காலம் வரை - சம்ஸ்கிருதம், தமிழ் கிரந்தமாக ஒலித்தது. சம்ஸ்கிருதம் வேறு, தமிழ் கிரந்தம் வேறு.

தமிழ்நாட்டில் கோயில்களைப் பாதுகாத்து வந்த பல்வேறு ஆதீனங்களின் பொறுப்பில் வேத பாடசாலைகள் இருந்தன. அங்கு வேதங்கள் தமிழ் கிரந்தங்கள் மூலம் கற்றுத் தரப்பட்டன. சப்தம் ஒன்றுதான். லிபி வேறு. தமிழ் கிரந்தத்தின் எழுத்துமுறை தேவநாகரி இல்லை. ஒருவகையான வட்டெழுத்து.

தமிழ்மொழியில் சம்ஸ்கிருதத்திற்கு நிகராக ஒலி பெறுவதற்காகவே "ஸ' "ஹ' "ஷ' "க்ஷ' ஆகிய அட்சரங்கள் சேர்க்கப்பட்டன. உண்மையில் அவை வடமொழி எழுத்துகள் அல்ல. அவை தமிழ் கிரந்தங்களே.

வேத பாடசாலைகள் மட்டுமல்ல, கோயில் கல்வெட்டுகளும் கிரந்த மொழியில் செதுக்கப்பட்டன. தமிழ் எழுத்து முறை தேவநாகரியைக் கொள்ளாமல் வட்டெழுத்தைக் கொண்டுள்ளது. பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ஏ.எல். பாஷாம் தமிழ் எழுத்து முறை கிரந்த லிபியைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் இலக்கிய சம்ஸ்கிருதம் அழிந்தது போல், கிரந்த லிபியும் அழிந்து வருகிறது. அதேசமயம், முன்பைவிட இப்போது தமிழ்நாட்டில் வேத பாடசாலைகள் கூடிவிட்டன. "பக்தி இயக்கம்' இன்று இந்தியா முழுவதும் உச்சகட்டத்தில் உள்ளது. மன்னர் காலத்துத் தமிழ் ஆதீனங்கள் பொலிவிழந்துவிட்டன.

நாகரிகமான ஆதீனங்கள் வளர்ந்துவிட்டன. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாரதா பீடம், பாபா ராம்தேவ், அமிர்தானந்தமயி மற்றும் பல ஆன்மிக குருமார்களின் கைங்கர்யத்தாலும், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, புவனேஸ்வரி ஆசிரமம் போன்ற ஸ்தாபனங்களாலும் வைதீக சம்ஸ்கிருத பாடசாலைகள் தமிழ்நாட்டில் வேர் ஊன்றிவிட்டன.

வேத பாடசாலைகளில் வேதங்களுடன், புரோகிதமும், சம்பிரதாயமான கர்மாக்களும் கற்பிக்கப்படுகின்றன. இப்படிப் பயின்றவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் உண்டு.

உலகம் முழுவதும் இந்துக் கோயில்கள் உள்ளன. அமெரிக்காவில் நிறையவே உண்டு. இப்படிப்பட்ட உலகத் தேவையை புதிய வேத பாடசாலைகள் நிறைவேற்றுகின்றன.

அதேசமயம், எல்லா வேத பாடசாலைகளிலும் தமிழ் கிரந்தம் கற்பிக்கப்படுவதில்லை. காரணம், கிரந்தத்தில் எழுதப்பட்ட அச்சு நூல்கள் இல்லை. மென் தகடுகளும் இல்லை.

கோயில் கல்வெட்டுகளைப் படிக்க உதவும் தமிழ் கிரந்த லிபியையும், இலக்கிய சம்ஸ்கிருதத்தையும் வளர்க்க மாநில அரசு முயல்வது நலம். குறைந்தபட்சம், தமிழ்நாடு அரசு காமராஜர் காலத்தில் நிலவி வந்த மும்மொழிக் கல்வித் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, விருப்பமுள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம், ஹிந்தி பயில வழி ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்திய அரசியல் சட்ட ஷரத்துகளின்படி, கல்வி மாநில அதிகாரத்திற்கு உள்பட்டது. மாநில அரசு நடத்தும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எல்லா மொழிகளையும் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்' - என்று மட்டும் பாடவில்லை பாரதி,

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்' - என்றும்

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்

செல்வங்கள் யாவும்

கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...' என்றும் பாடியுள்ளான்.

பாரதியின் கனவை நனவாக்கும் முயற்சிக்குப் பிற மொழி அறிவு காலத்தின்

கட்டாயம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

வாழ்க தமிழ். வாழ்க பிற மொழிகள்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

முழு கட்டுரையைப் படிக்க →