தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையைத் தங்கள் அடிப்படை கொள்கையாகக் கொண்டு போராடி வரும் அரசியல் கட்சிகள் முதல் இன்றைய வாக்கு வங்கி அரசியலுக்காக மதுவிலக்குப் பிரச்னையைக் கையிலெடுத்திருக்கும் கட்சிகள் வரையிலான அனைத்து கட்சிகளும் உலகெங்கிலும் மதுவிலக்கு கொள்கை படுதோல்வி அடைந்துவிட்ட ஒன்று என்பதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை.
உலகின் தலைசிறந்த நிர்வாக அமைப்பைக் கொண்ட அமெரிக்காவில் மதுவிலக்கு 1920 முதல் 1933 வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு கூறப்பட்ட காரணங்கள்: மதுவிலக்கால் குற்றங்கள் குறையும், சமூக சீர்கேடுகள் நீங்கும், குற்ற நிகழ்வுகளால் சிறைகளில் நிறைய குற்றவாளிகளை அடைக்க வேண்டியிருக்காது என்பதால் அரசுப் பணம் அதிக அளவில் செலவிடப்படுவது தடுக்கப்படும், பல வீடுகளில் வறுமை நீங்கும், மக்களின் உடல்நலமும் பொது சுகாதாரமும் பெருகும் - இவைதான் அந்தக் காரணங்கள்.
ஆனால் அங்கு இந்த மதுவிலக்கு கொள்கை முழுதோல்வியடைந்தது. அங்கு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டில் மக்கள் மது அருந்தும் அளவு குறைந்தது என்றாலும் சில வருடங்களில் மதுவின் பயன்பாடு மிகவும் அதிகமானது.
அப்போது கிடைத்த பல மது வகைகளை அருந்துவது மக்களின் உடல்நலத்துக்கு தீங்காக ஆனது. குற்றச் செயல்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பல தாதாக்களை உருவாக்கி வளர்ந்தன. அதனால் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கையும், சிறைச்சாலைகளில் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் கணக்கிலடங்காமல் போயின. அரசு அதிகாரிகள் மத்தியிலும், ஊழியர்களின் மத்தியிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடியது.
அரசின் செலவினங்கள் கூடின. ஆனால், அரசுக்குக் கிடைத்து வந்த வரி வருமானம் குறைந்தது. மது கிடைக்காத இடங்களில் வாழ்ந்த, போதை பழக்கத்திற்கு அடிமையான மக்களில் பலர் மிக ஆபத்தான போதைப் பொருள்களான ஓப்பியம், மரிஜுவானா, வேறு சில போலி மருந்துகள் மற்றும் ஜரி பாக்கு வகைகளை உபயோகித்தனர்.
இதனால் கொடிய நோய்களுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற விளைவுகளை ஆராய்ந்த பல ஆய்வாளர்கள் மதுவிலக்கு சரியான நடவடிக்கை அல்ல என்ற முடிவிற்கு வந்தனர். மதுவிலக்கு நடைமுறைக்கு வந்த உடனேயே, மது சம்பந்தப்பட்ட பல மதுபான பொருள்களின் விற்பனை குறைந்து விடும் என்பது பொருளாதார அடிப்படை என கூறலாம்.
அதாவது ஒரு நாட்டில் மோட்டார் வாகனங்களின் விலையை 10 மடங்கு உயர்த்தினால் அவற்றின் விற்பனை உடனடியாக குறையும் என்பது சாதாரண பொருளாதார அம்சம்.
மதுவிலக்கு அமலுக்கு வந்த பின்னர் போலி மதுபானங்களின் உற்பத்தி அமெரிக்காவில் ஆரம்பமானது. இதனால், போலி மதுவை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட மதுவிலக்கு போலீஸாரின் எண்ணிக்கை அதிகமாகி, அதற்காக அரசு செலவு செய்யும் தொகையும் அதிகமானது. 1920-ஆம் ஆண்டில் போலீஸ் துறைக்கு ஆன செலவு 29 கோடியே 40 ஆயிரம். அந்த செலவு 1926 -ஆம் ஆண்டில் 88 கோடியே 40 லட்சமாக உயர்ந்தது.
ஒரு நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வந்துவிட்டால் சமூக சீர்கேடுகள் குறைந்து சமூக முன்னேற்றம் உருவாகும் என்ற நம்பப்பட்ட தத்துவம் தவறானது என்பது அமெரிக்காவில் நிரூபணம் ஆனது. அதாவது, மதுவிலக்கு வந்த பின்பு, மனிதர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் அரசு அனுமதியுடன் மது அருந்துவார்கள்.
எனவே மதுவின் உற்பத்தியும் விற்பனையும் குறையும் என்ற எதிர்பார்ப்பு நடந்தேறியது. ஆனால், கள்ளச்சாராயமும், பிற போதைப் பொருள்களும் உற்பத்தியாகி ரகசியமாக விற்பனையாவது, 'அவை மதுவிலக்கினால் உருவானதாக கருதப்பட்ட சமூக நன்மைகளை மிகக் கொடிய சமூக தீமைகளாக ஆக்கின' என்கிறார் ரிச்சர்ட் கோவான் எனும் ஆய்வாளர்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மிதமான மதுத் தன்மையுடைய ஒயின் மற்றும் பீர் பானங்கள் எல்லா குடும்பங்களிலும் உபயோகிக்கப்படும் பழக்கம் நீண்ட நெடுங்காலங்கலாக உண்டு. கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் ஆரம்பித்து வைக்கும் மத விழாக்களில் தொடங்கி திருமணம் மற்றும் பிறந்தநாள் விழாக்களில்கூட ஷாம்பெய்ன், ஒயின் போன்ற மிகவும் குறைந்த வீரியமுள்ள மதுபானங்கள் பறிமாறப்படும்.
ஆனால், 'ஸ்பிரிட்' என வகைப்படுத்தப்பட்ட சாராயப் பொருட்களான விஸ்கி, பிராந்தி, ஓட்கா போன்ற மது வகைகள் அதிகமான மதுப் பழக்கம் உள்ளவர்களால் அருந்தப்படும் மது பானங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
குறைந்த போதையுள்ள ஒயின், பீர் போன்ற மதுபானங்களை ஆண், பெண், இளைஞர், முதியவர்கள் எல்லோருமே குடும்பத்துடன் குறைவான அளவில் அருந்தும் பழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு.
மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, அதை விட்டு விலக முடியாதவர்கள் அதிக போதையை தரும் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளுக்கு அடிமை. இதன் காரணமாக, மதுவிலக்கு அமலுக்கு வந்த பின்னர், அமெரிக்காவில் பீர், ஒயின் போன்ற மதுபானங்களை தயாரிப்பது மிகவும் குறைந்தது. காரணம், அவை அதிக அளவில் தயாரிக்க வேண்டும். ஆனால் குறைந்த எண்ணிக்கை மக்களால்தான் அவை அருந்தப்படும்.
எனவே, மதுவை கடத்திக் கொண்டு வருபவர்களுக்கும், அதிக போதையை தரும் விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா போன்றவற்றை விற்பனை செய்வது எளிதாகிப் போனது. மேலும் இதுபோன்ற அதிக போதை தரும் மதுபானங்களில் கிடைக்கும் லாபம் மிக அதிகமாக இருக்கும்.
எனவே, இதுபோன்ற போதை பொருட்கள் மதுவிலக்கு காலங்களில் அதிகமாக விற்பனையாகி, குறைந்த போதை தரும் மது வகைகள் கிடைக்காமையால் அதை அருந்தி பழக்கப்பட்டவர்களும் அதிக போதை பொருட்களை உண்ண ஆரம்பித்தார்களாம்.
எல்லா நாடுகளிலுமுள்ள மது தயாரிப்பு ஆலைகளில், மது எப்படி தயாரிக்கப்படுகிறது, எந்த மாதிரியான ரசாயனங்கள் எந்த அளவு சேர்க்கப்படுகின்றன என்ற விவரமான பட்டியல்களை அரசின் முன் அனுமதி பெற்று தயாரிப்பார்கள். இந்தியாவில் இன்றும் அதே நடைமுறைதான்.
இந்த பட்டியலின்படி மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து ஆய்வு செய்ய, துணை ஆட்சியர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி அரசால் நியமிக்கப்படுவார். அவர், அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொண்டு தயாரிப்பு விவரங்களை ஆய்வு செய்து கையொப்பமிட்ட பின்னர்தான் மது பாட்டில்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு ஆலைக்கு வெளியே அனுப்பப்படும்.
மதுவிலக்கு காலங்களில் தயார் செய்யப்படும் கள்ளத்தனமான மதுவில், விலை குறைந்த ரசாயனங்கள், தடை செய்யப்பட்ட மருந்துப் பொருள்கள் ஆகியவற்றை கலந்து அதிக வீரியத்துடன் போதை ஏற்றும் மது பானங்கள் தயார் செய்யப்படும். இதை அருந்தும் மதுபான பிரியர்களுக்கு, 'கிக்' எனப்படும் போதை, சற்று அதிக அளவில், மிக குறுகிய காலத்தில் உருவாகும்.
ஆனால், இதனால் உடல்நிலை மிக அதிக அளவில் மிக குறுகிய காலத்தில் பாதிக்கப்படும். அமெரிக்காவில், மதுவிலக்கு அமலுக்கு வந்த 1920-ஆம் ஆண்டில் மதுவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 1,064 பேர். ஆனால், 1925-ஆம் ஆண்டிலேயே அது 4,154 ஆக உயர்ந்தது.
மருத்துவமனைகளில், ஸ்பிரிட் எனப்படும் ஆல்கஹால் கலந்த மருந்துகள் மிக அதிக அளவில் விற்கப்பட்டன. பல மருத்துவர்கள் இதுபோன்ற மருந்துகளை மதுப் பிரியர்களுக்கு அளித்து அவர்களை குணப்படுத்துவதாக சொல்லும் பழக்கம் உருவானது.
இது மாதிரியான போதை பொருட்கள் அமெரிக்காவின் எல்லா பகுதிகளிலும் விற்கப்பட்டன. இந்த விற்பனை 1923-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 1931-ஆம் ஆண்டு இரண்டு மடங்கு அதிகமானது.
'மதுவிலக்கினால் உருவான ஊழல் மிகவும் அதிகம்' என அமெரிக்காவின் அப்போதைய அரசு துணைச் செயலாளர் லிங்கன் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். அரசியல்வாதிகள், போலீஸார் ஆகியோர் மது கடத்துவோரிடமும், கள்ள மது தயாரிப்பாளர்களிடமும், குற்றம் புரியும் தாதாக்களிடமும், கள்ள மதுவை விற்பனை செய்வோரிடமும் மாமூல் வாங்கும் பழக்கம் அமெரிக்காவில் உருவானது.
ஆனால் மது ஒழிப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1920 - இல் இருந்ததைவிட 1930 - இல் 45 சதவீதம் அதிகரித்தது. இதனால் பட்ஜெட் செலவு 123 சதவீதம் அதிகரித்தது. மது கடத்தலை தடுப்பதற்கான கடலோர பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 1920-இல் 188 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் அரசின் நிதிச் செலவு 500 சதவீதம் அதிகமாகியது.
மேலே கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உலகின் தலைசிறந்த நாடான அமெரிக்காவில் மதுவிலக்கு தோல்வியில் முடிந்தது என்பது தெரிகிறது. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடத்தை போதித்துள்ளது. சமூகத்தை அரசின் செயற்கையான கட்டுப்பாடுகளினால் திருத்த முடியாது என்பதை மதுவிலக்கின் தோல்வி உணர்த்தியுள்ளது.
'ஒரு மனிதனின் சுய நடத்தையை கட்டுப்படுத்த அரசு முயலும்போது, அந்தக் கட்டுப்பாடு அவனை கெட்ட செயலைச் செய்யும் மனிதனாக ஆக்கலாம் என்ற தத்துவத்தை மதுவிலக்கு நமக்கு உணர்த்தியது' எனக் கூறினார் லட்விக்வான் மைசஸ் எனும் பொருளாதார மேதை.
இந்த அனுபவபூர்வமான உண்மைகள் நம் மாநில கிராமங்களில் தடிக் கட்டைகளாலும், கடப்பாறைகளாலும் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் கிராமப்புற பெண்களையும் விட, பல படித்த இளைஞர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் புரிய வேண்டும்!
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.