கடந்த ஜூலை 27-ஆம் தேதி பண்டைய கோயில் நகரமான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அரசனும், அவனின் ஆட்சியும் சட்டத்துக்கு மேலானது அல்ல என்று கடந்த 1215-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "மேக்னா கார்ட்டா' என்கிற பிரிட்டன் சாசனத்துக்கு முன்பே, அத்தகைய நடைமுறை இந்திய மக்களாட்சியில் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார். இதன்மூலம், மறந்துபோன வரலாற்று உண்மையை அவர் நினைவுபடுத்தினார்.
தனது பேச்சின்போது அவர் பெருமிதம் தெரிவித்த பண்டைய வாக்குப் பதிவு முறை என்பது என்ன? அது 1,000 ஆண்டுகளுக்கு முன்னர், சோழர்கள் ஆட்சியில், குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வியக்கத்தக்க பாணியை விவரிக்கிறது. அதேவேளையில் பூர்விகமாகவும், தொன்மையாகவும், கடுமையான விதிமுறைகளையும் கொண்டிருந்த மக்களாட்சி மரபின் பெருமையை மீட்டெடுப்பதே அதில் உள்ள ஆழமான செய்தியாகும்.
இதுகுறித்து 10 ஆண்டுகளுக்கு முன்னர், "அன் அன்டாக்குமென்டன்ட் வண்டர்-தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இண்டியன் எலெக்ஷன் (2014)' என்ற எனது நூலில் நான் எழுதியிருந்தேன். மக்களாட்சி கோட்பாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் புதிதல்ல; கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அது இந்தியாவில் பல்வேறு வடிவங்களில் இருந்தது. சிறிய சமுதாயங்கள், கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் விவாதங்கள் மூலம், முடிவு எடுப்பதில் பங்குகொள்வது இயல்பான வழக்கமாக இருந்தது.
கிராம சபைகளின் பங்கு குறித்தும், இந்தக் கட்டமைப்புகள் மூலம் எவ்வாறு நாட்டை மேலும் திறம்பட ஆட்சி செய்வது என்பதையும் கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் விவரித்துள்ளார். அந்தக் காலத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு சொத்து மற்றும் கல்வி முக்கியத் தகுதிகளாக கருதப்பட்டன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஒருவர் ஊழலில் ஈடுபட்டதாகவோ, கறைபடிந்தவர்களாகவோ, ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதாகவோ கருதப்பட்டால், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
உத்தரமேரூர் வைகுண்டபெருமாள் கோயிலில் கி.பி. 920-இல் பராந்தக சோழன் ஆட்சிக்கால கல்வெட்டில் வார்டுகளின் அமைப்பு, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதி, தகுதிநீக்க விதிமுறைகள், தேர்தலை நடத்தும் முறை, தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்தல், அந்தக் குழுக்களின் செயல்பாடுகள், தவறிழைக்கும் உறுப்பினர்களை பொறுப்பில் இருந்து நீக்கும் அதிகாரம் உள்ளிட்ட வியக்கத்தக்க விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடமை தவறினால், அவர்களைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு கோரும் உரிமையும் கிராம மக்களுக்கு இருந்தது. இவை மூத்த குடிமக்கள் அல்லது நிலப்பிரபுத்துவ சபைகளின் ஆலோசனைகளாக மட்டும் இல்லாமல், உண்மையான சுயாட்சி கிராம குடியரசுகளாக இருந்தன. அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, நவீன மக்களாட்சிக் கொள்கைகளைப்போல் இருந்தது வியப்பளிக்கும் செயல்பாடு.
உத்தரமேரூரில் பின்பற்றப்பட்ட தேர்தல் நடைமுறை "குடவோலை முறை' என்றழைக்கப்படுகிறது. இந்த முறையின் கீழ், கிராம சபைக்கு உறுப்பினராகும் தகுதியுடைவர்களின் பெயர்கள் பனை ஓலைகளில் எழுதப்பட்டு மண் பானையில் போடப்படும். அந்த ஓலைகளில் ஒன்றை பானையில் இருந்து ஏதும் அறியாத சிறுவன் ஒருவன் பொதுமக்கள் முன்னிலையில் எடுப்பான்.
இது தேர்தலில் வெளிப்படைத்தன்மையையும், நடுநிலையையும் உறுதி செய்தன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஓராண்டுக்கு பொறுப்பு வகிப்பர். ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் இந்த முறை மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எனினும், உண்மையான சிறப்பு என்பது வாக்குப் பதிவு முறையில் மட்டும் இல்லை. தேர்தலில் யார் போட்டியிடலாம்?, பொறுப்பில் இருந்து அவர்களை எப்படி நீக்கலாம்? உள்ளிட்டவற்றை நிர்வகித்த விரிவான தேர்தல் நடத்தை விதிமுறைகளிலும் தனித்துவம் இருந்தது என்பதுதான் சிறப்பு.
அப்போது, தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளரின் வயது 35 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்; அவருக்கு வரி செலுத்தக் கூடிய சொந்த நிலம் இருக்க வேண்டும்; அந்த நிலத்தில் கட்டப்பட்ட வீட்டில் அவர் குடியிருக்க வேண்டும்; புனித நூல்களை, அதாவது தர்ம சாஸ்திரங்களையும் இதிகாச, புராணங்களையும் பகவத் கீதை, திருக்குறள் போன்ற அறநூல்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டும்; நிர்வாக நடைமுறைகளில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள், மது அருந்துவோர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், முன்பு வகித்த பொறுப்புகளில் முறையாகக் கணக்கு காட்டாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்களின் நெருங்கிய உறவினர்களும் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பொது வாழ்வில் அப்பழுக்கற்றவராக இருக்க வேண்டும்; அதிகாரத்தில் இருப்பவர்கள் பழிகளைச் சுமக்காது இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த ஏற்பாட்டின் பின்னணியில் இருந்த நோக்கமாகும். இப்போதைய தேர்தல் ஜனநாயகத்தில் வேட்பாளர்களுக்கு அதுபோன்ற எந்தத் தகுதி நிர்ணயமும் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பொறுப்பில் இருந்து நீக்கவும் கடுமையான விதிமுறைகள் செய்யப்பட்டிருந்தன. ஒருவர் கையாடல் செய்ததாகவோ அல்லது கடமை தவறியதாகவோ உறுதி செய்யப்பட்டால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். இந்தத் தடை சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நபரின் ஏழு தலைமுறைகளுக்கும் விதிக்கப்படும். ஆனால், இப்போதோ நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவர்கள் சுதந்திரமாக மீண்டும் தேர்தல் களத்துக்கு வரும் முரண்பாட்டை நாம் வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது சகித்துக் கொள்கிறோம். சில நேரங்களில் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறவும் உதவுகிறோம்.
தேர்தலில் வாக்களிப்பது மட்டுமின்றி, தங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொதுக் கொள்கைகள் குறித்து முடிவு எடுக்கும் நடைமுறையில் பங்குகொள்ளும் மக்களாட்சியின் நவீன வடிவத்தை இந்தப் பண்டைய கிராம குடியரசுகள் பிரதிபலித்தன. அங்கு தேர்தல்கள் என்பது வெறும் சடங்குகளாக மட்டுமில்லை; குடிமக்களின் பொறுப்புணர்வுக்கு விதிமுறைகளால் ஆதரிக்கப்பட்ட வழிமுறைகளாக இருந்தன. இது இந்தியாவின் மக்களாட்சி உணர்வு இந்திய அரசியல் சட்டத்தால் மட்டுமின்றி, நாகரிகமடைந்த சமூகத்தின் மரபணுவாலும் வடிவமைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதை பிரிட்டன் நாடாளுமன்ற பாரம்பரியம் அல்லது அமெரிக்க உரிமைகள் மசோதாவின் பங்களிப்புகளை மறுப்பதற்காக கூறவில்லை. ஆனால், இந்தியாவின் மக்களாட்சி உணர்வு 1919, 1935-ஆம் ஆண்டிலோ அல்லது விடுதலை பெற்ற 1947-ஆம் ஆண்டிலோகூட உருவாகவில்லை. அது உலகின் முதல் குடியரசாக அறியப்படும் இந்தியாவின் பண்டைய வைசாலிநகரத்துக்கு விரிந்து உத்தரமேரூர் கல்வெட்டுகளில் செழுமையாக காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுகளில் தேர்தல்களில் வெளிப்படைத் தன்மை, தகுதி, பொறுப்புணர்வு, குடிமக்கள் பங்கேற்பு குறித்து மெய்யாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மரபை சரியான நேரத்தில் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். அதற்கு அவசியமும் உள்ளது. ஆதிக்கம் செலுத்தும் அரசியல் அணுகுமுறை, பண அதிகாரம், தவறான தகவல்கள் உள்ளிட்ட காரணங்களால் உலகில் மக்களாட்சி அழுத்தத்தில் உள்ளது.
இந்தியாவின் மக்களாட்சி கடன் வாங்கப்பட்ட ஆடை அல்ல என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். அது கூட்டாக முடிவு எடுக்கும் பூர்விக பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளதுடன், நீதிநெறி, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையின் காப்பாளராக உள்ள இந்திய தேர்தல் ஆணையம், தற்கால சட்டக் கோட்பாடு அல்லது தத்துவம் மூலம் மட்டும் அல்லாமல், நமது சொந்த வரலாற்றில் இருந்தும் தேர்தல்கள் குறித்து நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
இந்தியாவில் மக்களாட்சி என்பது உள்நாட்டில் வளர்ந்த, பலகாலமாக கொண்டிருக்கும் நடத்தை முறையால் ஆழமாக நிறுவப்பட்ட, நீதிநெறிக்கு உள்பட்டதே தவிர, அது கடன் வாங்கப்பட்ட சிந்தனை அல்ல என்பதை எனது நூலில் நான் எழுதியுள்ளேன். உலக அளவில் மக்களாட்சியின் தாய் இந்தியா என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.