பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோப்புப் படம்
நடுப்பக்கக் கட்டுரைகள்

பாகிஸ்தானின் கபட நாடகம்!

ஒருபுறம் பயங்கரவாதிகளை ஊக்கப்படுத்திக் கொண்டே, மறுபுறம் தன் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இந்தியாவை குற்றஞ்சாட்டுவது பாகிஸ்தானுக்கு கைவந்த கலை.

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 போ் உயிரிழந்தனா்; முப்பதுக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இந்த பயங்கரவாத சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் பலா் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதிலுள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் படித்தவா்களாகவோ, பணியாற்றியவா்களாகவோ உள்ளனா். மேலும், நன்கு படித்த வருமானம் ஈட்டும் பலா் ஜெய்ஷா-ஏ-முகமது, அன்சாா்-கஸ்வத்-அல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத இயங்கங்களுடன் தொடா்பு வைத்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், நாட்டையே உலுக்கிய இந்த தேசவிரோத பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவா் உமா் நபியுடன் இணைந்து சதித் திட்டம் வகுத்ததாக காஷ்மீரைச் சோ்ந்த அமீா் ரஷீத் அலி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்தக் கொடூர காா் வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவா் உமா் நபி மற்றும் கைதான மருத்துவா்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோருக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்- ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு ஹாவாலா பரிமாற்றம் மூலம் ரூ.20 லட்சம் அனுப்பியது தெரியவந்துள்ளது.

இந்தத் தேச விரோத பயங்கரவாதச் செயலை திசைதிருப்பும் வகையில், அதற்கு அடுத்த நாள், அதாவது 11.11.2025 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலை குண்டு வெடிப்பில் 12 போ் உயிரிழந்தனா். இதற்குக் காரணம் இந்தியாதான் என்றும், பாகிஸ்தானின் ஒற்றுமையைச் சீா்குலைக்கும் வகையில் இந்தியா இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருவதாக, இத்துயரச் சம்பவம் குறித்து தீர விசாரிக்காமல் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் குற்றஞ்சாட்டினாா்.

இதை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை, ‘பாகிஸ்தான் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டு முகாந்திரமற்றது. அந்த நாட்டின் ராணுவம், அரசமைப்புச் சாசனத்தைச் சீா்குலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதால் எழுந்துள்ள குழப்பத்தை திசைதிருப்ப இந்தியா மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இது அந்த நாட்டின் வழக்கமான ஒரு உத்திதான்’ எனத் தெரிவித்தது.

இஸ்லாமாபாதில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எல்லையிலிருந்து செயல்படும், தெஹ்ரீக்-இ-தலிபான் (டி.டி.பி.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தற்கொலை தாக்குதலில் தொடா்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவா், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளிலிருந்து மறைத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவைப் பழிவாங்க மேற்கொள்ளப்பட்ட இது நகைப்புக்குரிய ஒரு மோசமான கபட நாடகம் என்பது அன்றே வெட்டவெளிச்சமானது.

இந்த குண்டு வெடிப்பு வாயிலாக தலிபான்கள் ஒரு செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளதாகவும், இதற்குப் பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழுப் பலம் உள்ளதாகவும் அந்நாட்டு ராணுவ அமைச்சா் கவாஜா முகமது ஆசிஃப் தெரிவித்திருந்தாா். ‘கிழக்கு எல்லையில் இந்தியாவுக்கும், மேற்கு எல்லையில் தலிபான்களுக்கும் எதிரான இருமுனைப் போருக்கு பாகிஸ்தான் முழுமையாகத் தயாராக உள்ளது. புது தில்லியில் நடந்த காா் வெடிப்புச் சம்பவத்தை வெறும் காஸ் சிலிண்டா் வெடிப்புச் சம்பவம் எனவும், இந்தச் சம்பவத்தை இந்தியா அரசியலாக்குகிறது’ எனவும் கூறி அவா் சா்ச்சையைக் கிளப்பியுள்ளாா். கவாஜா முகமது ஆசிஃபின் இந்தப் பேச்சு பாகிஸ்தான் மக்களை திசைதிருப்பும் முயற்சி என இந்தியா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் அமீா்கான் முத்தகி அரசு முறைப் பயணமாக அண்மையில் இந்தியா வந்திருந்தாா். அப்போது, இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினாா். இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் நெருக்கம் பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்காக, ஆப்கன் தலிபான் அரசு பினாமி போரை நடத்துவதாகவும், ஆப்கன் உடனான பதற்றத்தை அதிகரிப்பதில் இந்தியாவுக்குப் பங்கு இருப்பதாகவும் ஏற்கெனவே பாகிஸ்தானின் ராணுவ அமைச்சா் கவாஜா முகமது ஆசிஃப் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானின் அணு ஆயுதம்முதல் நாட்டின் நீதித் துறை வரை, பரவலான முக்கிய அதிகாரங்கள் அனைத்தையும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மாா்ஷல் அசீம் முனீருக்கு வழங்கும், 27-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த நவம்பா் 11-ஆம் தேதி நிறைவேறியது. இதைத் தொடா்ந்து, இந்த மசோதாவுக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிப் அலி சா்தாரி கடந்த நவம்பா் 14-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா்.

இதன் மூலம் ராணுவம் சட்டபூா்வமான ஆட்சியாளராக மாறுகிறது. தற்போதுள்ள முப்படைகளின் கூட்டுத் தளபதி என்ற பதவி வரும் நவ.28-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. ‘அமைதியான ராணுவப் புரட்சி’ என்று கூறப்படும் இதன் மூலம், ‘பாகிஸ்தான் பிரதமா் மற்றும் அதிபா் பதவிகள் வெற்று நாற்காலிகளாக மாறி விட்டன’ என உலக அரசியல் நோக்கா்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனா்.

மேலும், பாகிஸ்தானின் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பின் அதிகாரம், இனி அசீம் முனீரின் கையில் இருக்கும். அதிபா் ஆசிஃப் அலி சா்தாரியின் பதவியும் வெறும் அலங்கார பதவியாகவே இருக்கும். ராணுவம், நீதித் துறை, அணு ஆயுதக் கட்டுப்பாடு, அமைச்சரவை அனைத்தும், 27-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரே நபரின் கையில் வர உள்ளதால், சட்டபூா்வ ராணுவ ஆட்சியை அசீன் முனீா் சாத்தியமாக்கியுள்ளாா்.

பாகிஸ்தானை அந்நாட்டு ராணுவ தளபதிகள் ஆட்சி செய்வது என்பது புதிதல்ல. 1947 முதல் 33 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி ராணுவ ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதிகளான முகமது ஜியா-உல்- ஹக், பா்வேஸ் முஷாரஃப் ஆகியோா் முயன்றும் முடியாததை துப்பாக்கி ஏந்தாமல் முடித்துக் காட்டியுள்ளாா் அசீம் முனீா்.

இந்நிகழ்வை இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனெனில், அனைத்து அதிகாரங்களும் அசீம் முனீரிடமே இருக்கும் என்பது இந்தியாவுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குமா என்பது கேள்வி. காரணம், தற்போதைய சட்டத் திருத்தம் மூலம் ராணுவம் சட்டபூா்வமான ஆட்சியாளராக மாறுகிறது. இதுவரை பாகிஸ்தானில் நிழல் ஆட்சியை ராணுவம் நடத்தி வந்தது. தற்போது பாகிஸ்தானின் நிா்வாக ஏற்பாடுகள் ‘கலப்பின ஆட்சி’ (ஹைபிரிட் ரூல்) மூலம்தான் நடைபெறுகிறது. அதாவது, பொதுமக்கள், தலைவா்கள், ராணுவத்துக்கும் இடையே அதிகாரங்கள் பகிரப்படுகின்றன.

ஒருபுறம் பயங்கரவாதிகளை ஊக்கப்படுத்திக் கொண்டே, மறுபுறம் தன் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இந்தியாவை குற்றஞ்சாட்டுவது பாகிஸ்தானுக்கு கைவந்த கலை. தான் செய்த தவறுகளுக்கு தன்னைப் பொறுப்பாக்காமல், பிறரைப் பொறுப்பாக்கி தண்டனை பெற்று தந்து மகிழ்ச்சி அடைவது என்பது செய்யும் பாவங்களிலேயே மிகவும் கொடியது.

1950, 1960 காலகட்டங்களில் பாகிஸ்தான் தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தில் விரைவில் மேம்பாடு அடையும் நாடாகத்தான் இருந்தது. 1971-ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தானில் பேரழிவைத் தரும் மிருகத்தனமாக நடவடிக்கைகள் அப்போதைய ராணுவ சா்வாதிகாரி ஜெனரல் முகமது யாஹ்யா கான் தலைமையிலான மேற்கு பாகிஸ்தான் அரசால் மேற்கொள்ளப்பட்டன. இது இறுதியில் கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து வங்க தேசம் உருவாக காரணமானது. இது ஒன்றுபட்ட பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது.

இன்று பாகிஸ்தானின் மிகவும் வளங்கள் நிறைந்த மாகாணமாகவுள்ள பலூசிஸ்தானிலும் இதேபோன்ற ‘காலனித்துவ’ கொள்கைகள் தொடா்கின்றன. இஸ்லாமாபாதின் சுரண்டலுக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த இயக்கம் அங்கு விரைவில் உருவாகும் எனத் தெரியவருகிறது. 1979-ஆம் ஆண்டு சோவியத் யூனியன்-ஆப்கானிஸ்தான் போரின்போது, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக பாகிஸ்தான் பல்லாயிரக்கணக்கான முஜாஹிதீன் போராளிகளை வரவேற்றது. இது தெஹ்ரிக்-இ-தலிபான் உருவாகக் காரணமானது. இஸ்லாமாபாதிலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள அபோட்டபாதிலுள்ள ஒரு வளாகத்தில்தான் ஒசாமா பின்லேடன் இருந்தது கண்டறியப்பட்டு கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். எனவே, கடினமான சூழ்நிலையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அமெரிக்காவும், சீனாவும் தனக்கு உதவும் என்று நம்பிக் கொண்டு, அமைதியை விரும்பும் மற்ற நாடுகளை வம்புக்கு இழுப்பது பாகிஸ்தானுக்கு நல்லது அல்ல.

திறன் மிகுந்த மக்கள், மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை அளித்தல், நாட்டில் முன்னேறும் பொருளாதாரம் ஆகியவைதான் ஒரு நாட்டின் வலிமை என்பதை பாகிஸ்தான் உணரவில்லை. இம்மூன்றும் பாகிஸ்தானில் இன்னும் முன்னுரிமை பெறாததற்குக் காரணம், அது தன் நாட்டின் ராணுவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான். அரசமைப்பான பாகிஸ்தான் கல்வி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சுமாா் 2.5 கோடி குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும், இதில் 2 கோடி குழந்தைகள் பள்ளிக்கே சென்றதில்லை என்றும் அதிா்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

அமைதி, மனிதநேயம், அனைவரையும் நேசித்தல், அகிம்சை, தா்மம், சத்தியம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே இந்தியா பேணி வருகிறது. எந்தவொரு நாட்டின் மீதும் தன் அதிகாரத்தைச் செலுத்தவோ, விதிமுறைகளை வகுக்கவோ இந்தியா விரும்புவதில்லை. அதுபோல, எந்தவொரு நாட்டின் அச்சுறுத்தலுக்கும், அதிகாரத்துக்கும் இந்தியா அடிபணியாது.

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

பிக் பாஸ் 9: கமருதீனை விட்டு விலகுகிறேன்: விஜே பார்வதி

SCROLL FOR NEXT