இருபது நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி தொடங்க உள்ளன. இந்தப் போட்டியில் நமது அண்டை நாடாகிய வங்கதேசத்தின் கிரிக்கெட் அணி பங்கேற்கப் போவதில்லை என்ற செய்தி, கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாகத்தைச் சற்றே குறைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
1970-களில் இருந்தே உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிய இலங்கை அணி, நாளடைவில் ஐம்பது ஓவர் உலகக் கோப்பையேயே வெல்லும் அளவுக்கு வளர்ந்து நின்றது கண்கூடு. அதேபோன்று, வங்கதேச அணியும் கடந்த இரு பத்தாண்டுகளில் தனது திறமையை வெளிக்காட்டத் தொடங்கியது.
வங்கதேச கிரிக்கெட் அணி ஐ.சி.சி. தரவரிசையில் டெஸ்ட், 20 ஓவர் ஆகிய போட்டிகளில் ஒன்பதாம் இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் பத்தாம் இடத்திலும் உள்ளது. எனினும், அந்த அணியானது 50 ஓவர், 20 ஓவர் ஆகிய போட்டிகளில் தன்னைவிட வலிமை மிகுந்த பன்னாட்டு அணிகளை அவ்வப்போது தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வங்கதேச வீரர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்துள்ளனர். குறிப்பாகச் சொல்வதென்றால் பந்துவீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் ஆல்ரவுண்டர்களுக்கான உலகக் கிரிக்கெட் தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் ஆகிய மூன்று வகைப் போட்டிகளிலும் ஷகிப் அல் ஹசன் முதலிடம் வகித்தவராவார்.
வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் திறமை காரணமாகவே ஆண்டுதோறும் நம் நாட்டில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு அந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வங்கதேசத்தில் ஆட்சிபுரிந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் சேர்ந்து அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய ஷகிப் அல் ஹசன் 2024-ஆம் ஆண்டு அந்நாட்டில் நிகழ்ந்த கலவரங்களை அடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சொந்த நாட்டை விட்டுக் குடும்பத்துடன் வெளியேற வேண்டியதாயிற்று.
அந்த நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்துவரும் வன்முறையில் இந்திய வம்சாவளியினர்களான ஹிந்துக்கள் பெருமளவு பாதிக்கப்படுவது கண்கூடு.
நிகழாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேர்விலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாஃபிசூர் ரஹ்மானின் பெயரை நீக்குவதென்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்புவதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதன் அடுத்தகட்டமாக ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய மைதானங்களில் ஆடுவதற்கும் வங்கதேச அணி மறுப்புத் தெரிவித்தது. மேலும், தாங்கள் விளையாட வேண்டிய போட்டிகள் அனைத்தையும் இந்தியாவுக்குப் பதிலாக இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த அணி கோரிக்கை விடுத்தது.
இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுப்பதையும், வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுப்பதையும் நிச்சயமாக ஒரே தட்டில் வைத்துப் பார்க்க இயலாது. பலூசிஸ்தான் போராளிகளோ, ஆப்கானிஸ்தானின் தலிபான்களோ யாராயினும் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடிய அளவுக்குப் பாதுகாப்பற்ற சூழல் பாகிஸ்தானில் நிலவும்போது, தகுந்த பாதுகாப்பை வழங்குவது மட்டுமின்றி, எல்லா நாடுகளைச் சேர்ந்த வீரர்களையும் பாரபட்சம் காட்டாமல் உற்சாகப்படுத்தக்கூடிய பண்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ள இந்தியாவில் விளையாட மறுப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
உண்மையில் சொல்வதென்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராட்டக் களமாகவே தொடர்ந்து காட்சி அளிக்கிற வங்கதேசத்தில் விளையாடுவதுதான் சவாலான விஷயம் என்பதை அந்த நாட்டின் ஆட்சியாளர்களும், கிரிக்கெட் நிர்வாகமும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், இந்திய மண்ணில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் பிடிவாதத்துக்கு அந்த நாட்டுடன் திடீர் தோழமை பாராட்டும் பாகிஸ்தானின் கிரிக்கெட் நிர்வாக அமைப்பிலும்கூட ஆதரவான சிந்தனை நிலவவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீம்பு செய்யும் வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் மோதல் போக்கை மேற்கொள்ளத் தேவையில்லை என்றே பாகிஸ்தானின் முன்னாள்-இந்நாள் வீரர்கள் கருதுகின்றார்களாம்.
இந்தச் சூழலில், இந்தியாவில் விளையாட மறுக்கும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய ஐ.சி.சி. வழங்கிய வாய்ப்பை வங்கதேச அணி ஏற்க மறுத்ததால், அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கச் செய்வதென ஐ.சி.சி. முடிவு எடுத்துள்ளது.
சென்ற நூற்றாண்டில், அமெரிக்கா- ரஷியா இடையே நிலவிய பனிப்போரின் காரணமாக சிற்சில நாடுகளால் ஒலிம்பிக் போட்டிகள் புறக்கணிக்கப்பட்டதையும், தென்னாப்பிரிக்க நாடு கடைப்பிடித்த நிறவெறிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிறநாட்டு அணிகள் அந்த நாட்டின் விளையாட்டு வீரர்களுடன் விளையாடுவதைத் தவிர்த்ததையும் பார்த்துள்ளோம்.
இந்த நூற்றாண்டில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமடைந்துள்ளதாலும், வங்கதேசத்தில் தொடரும் உள்நாட்டுக் கலவரத்தாலும் முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படுவதைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாடுகளுக்கிடையிலான பகையுணர்வு, உள்நாட்டில் ஸ்திரமற்ற தன்மை ஆகிய காரணங்களால் விளையாட்டுகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உலக நாடுகளும், உலக அளவிலான விளையாட்டு நிர்வாக அமைப்புகளும் ஆலோசனை நடத்தமுன்வரவேண்டும் என்பதே விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.