ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடருக்காக வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் நீடிக்கும் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக நேற்றுக்குள் முடிவு தெரிவிக்க வேண்டும் என ஐசிசி, வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட மாட்டோம் எனவும், தங்களுக்கான போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கேட்ட நிலையில், அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
வங்கதேசம் பிடிவாதம்
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்ட நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் கூறியதாவது: உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறுவதற்காக வங்கதேச அணியின் வீரர்கள் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தியாவில் விளையாடுவதால் எங்களது வீரர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழல் அப்படியேதான் தொடர்கிறது. அதனால், வங்கதேச அணி உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் விளையாடாது.
எங்களது வீரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரின் பாதுகாப்பையும் இந்தியா உறுதி செய்யும் என்பதில் உடன்பாடில்லை. இருப்பினும், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களது அணி தயாராக இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் விளையாட மறுக்கும் எங்களது கோரிக்கைக்கு ஐசிசியிடமிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வங்கதேச அணிக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்றியமைக்க மீண்டும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி மாற்று அணியாக சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.