ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக மாற்று அணி களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.
விரைவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வங்கதேச அணி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிசிசிஐ-ன் அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கான போட்டிகள் அனைத்தையும் இலங்கைக்கு மாற்ற வேண்டி ஐசிசியிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
மாற்று அணி களமிறக்கப்படுமா?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் நாளை மறுநாளுக்குள் (ஜனவரி 21) பதிலளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வங்கதேசத்துக்குப் பதிலாக மாற்று அணி களமிறக்கப்படும் அபாயம் இருக்கிறது எனவும் ஐசிசி எச்சரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐசிசியின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் விளையாடுவது தொடர்பாக ஜனவரி 21 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வங்கதேசம் மறுக்கும் பட்சத்தில், அந்த அணிக்குப் பதிலாக ரேங்கிங் அடிப்படையில் மாற்று அணி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வங்கதேசம் மறுக்கும் பட்சத்தில், தற்போதுள்ள ரேங்கிங் அடிப்படையில் ஸ்காட்லாந்து மாற்று அணியாக களமிறக்கப்பட வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.