ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக தயாராகி வந்த நிலையில், வங்கதேச அணி உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் விளையாட தொடர்ச்சியாக மறுத்ததால் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்தை மாற்று அணியாக ஐசிசி சேர்த்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐசிசி தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் விளையாடுவது தொடர்பாக முடிவு செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு 24 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் விளையாடுவது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஐசிசிக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு நேற்று (ஜனவரி 23) ஐசிசி சார்பில் இ-மெயில் அனுப்பப்பட்டது.
வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதும், ஸ்காட்லாந்து புதிய அணியாக உலகக் கோப்பைத் தொடரில் சேர்க்கப்பட்டதும் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்குப் பதிலாக டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணி வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தனது முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்து விளையாடுகிறது.
பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இத்தாலி அணியையும், பிப்ரவரி 14 ஆம் தேதி இங்கிலாந்து அணியையும், பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் நேபாளத்தையும் எதிர்த்து ஸ்காட்லாந்து விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.