சிறப்புக் கட்டுரைகள்

சாகஸத் திரைப்படங்களின் முடிசூடா ராணி, 50 களின் விஜயசாந்தி ஃபியர்லெஸ் நாடியாவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

கார்த்திகா வாசுதேவன்

தமிழர்களுக்கு விஜயலலிதா, விஜயநிர்மலா, விஜயசாந்திகளைத் தெரிந்த அளவுக்கு ஃபியர்லெஸ் நாடியாவைப் பற்றித் தெரியுமா? என்றால் அது சந்தேகத்திற்கிடமான கேள்வி தான்! 50 களில் இந்திப் படம் பார்க்கும் அளவுக்கு ரசனையான மனிதர்கள் எனில் நிச்சயம் அவர்களுக்கு நாடியாவையும் அவர் ஃபியர்லெஸ்ஸாக நடித்துப் பட்டையைக் கிளப்பிய ஹண்டர்வாலி திரைப்படத்தையும் பற்றித்  தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் படம் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாகஸ சண்டைப்படங்களில் ஒன்று. அதன் நாயகி தான் இன்று தனது 110 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நாடியா.

பிறப்பால் ஆஸ்திரேலியரான நாடியாவின் இயற்பெயர் மேரி ஆன் இவான்ஸ். ஒரு தியேட்டர் ஆர்டிஸ்டாக இந்தியாவுக்கு வந்து இந்தியத் திரைப்படங்களில் குறிப்பாக வாடியா குழுமத்தினர் தயாரித்து, இயக்கிய இந்தித் திரைப்படங்களில் சாகஸ நாயகியாக நடித்த காரணத்தாலும், ஒரு கட்டத்தின் தன்னை இந்தியாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கம் இயக்குனரின் தம்பியையே மணந்து கொண்டதாலும் மேரி ஆன் இவான்ஸ் பின்னாட்களில் மேரி இவான்ஸ் வாடியாவானார்.

1908 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவின் ஸ்காட்டிஷ் அப்பாவான ஹெர்பர்ட் இவான்ஸுக்கும், தாய் மார்கரெட்டுக்கும் மகளாகப் பிறந்தார் மேரி ஆன் இவான்ஸ். ஹெர்பெர்டுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தில் வேலை. முதலாம் உலகப்போர் சமயத்தில் இந்தக்குடும்பம் தந்தையின் பணி மாற்றத்தின் காரணமாக மும்பைக்கு குடிபெயர நேரிடுகிறது. அப்படித்தான் 1913 ஆம் ஆண்டு தனது ஐந்தாவது வயதில் மேரி இவான்ஸ் இந்தியாவுக்கு வருகிறார்.

ஜெர்மானியர்களுடனான சண்டையில் துரதிருஷ்டவசமாக மேரியின் தந்தை மரணமடைய, அதன் பின் அவரது குடும்பம் பெஷாவருக்குக் குடிபெயர்கிறது. அங்கே தான் மேரி குதிரையேற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல், துப்பாக்கி சுடுதல் என அனைத்தையும் கற்றுக் கொள்கிறார். பின்னர் 1928 ஆம் ஆண்டு தன் தாயோடும், ராபர்ட் ஜோன்ஸ் என்ற தன் மகனோடும் இந்தியாவுக்கு வருகிறார் மேரி. மேரியின் மகன் ராபர்ட் ஜோன்ஸைப் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாது. இந்தியா வந்தபிறகு மேடம் அஸ்ட்ரோவாவிடம் பாலே நடனம் கற்றுக் கொள்கிறார் மேரி.

மும்பையில் இருக்கும் ராணுவம் மற்றும் கடற்படையினருக்குச் சொந்தமான ஒரு விற்பனை அங்காடியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பெறுவது தான் மேரி இவான்ஸின் முதல் விருப்பமாக இருந்திருக்கிறது. அந்த வேலையைப் பெற வேண்டுமெனில் அதற்காக அவர் சுருக்கெழுத்தும், தட்டச்சும் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படித்தான் அங்கு வேலையில் சேர்ந்திருந்தார் மேரி இவான்ஸ். அங்கே அவர் பணிபுரிகையில் அஸ்ட்ரோவாவின் குழுவினர் பிரிட்டிஷ் ராணுவத்தினரை குஷிப்படுத்துவதற்காக ஷோ நடத்த அங்கே வருகை தந்தனர். அப்போது அவர்களுடன் இணைந்து பாலே நடனம் கற்றுக் கொண்ட மேரி, பிற்காலத்தில் பாலே நடனத்தை தனது பிரத்யேக ஸ்டைலில் ஆடி மேட்டுக்குடி இந்திய ரசிகர்களின் மனதை குற்றுயிரும், குலையுயிருமாகத் கிழித்துத் தொங்க விட்டு தோரணம் கட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது பாலே நடனத் திறமை, பிறகு அவர் திரையில் அறிமுகமான ஆரம்பகால கட்டங்களில் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்குப் பெரிதும் உதவியாக இருந்ததாக மேரி இவான்ஸ் தனது நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார்.

1930 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு தியேட்டர் கலைஞராக ஜர்கோ சர்கஸ் குழுவினருடன் இந்தியாவுக்கு டூர் வந்த மேரி இவான்ஸ். அப்போதைய இந்தியாவின் பிரபலத் திரைப்பட தயாரிப்பாளர் கம் இயக்குனரான J.B.H. வாடியாவின் கண்களில் விழுந்தார். பிரசித்தி பெற்ற ‘வாடியா’ குழும வாரிசான J.B.H.வாடியா, வாடியா மூவி டோன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி இந்தித் திரைப்படங்களை இயக்கி, வெளியிட்டுக் கொண்டிருந்தார். வாடியா மூவி டோன் அந்தக்காலத்தில் சாகஸம் நிறைந்த சண்டைக்காட்சிகள் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவதற்கும் பிரசித்தி பெற்றது.

அப்படித்தான் ஒரு அயல்நாட்டுப் பின்னணி கொண்ட மேரி இவான்ஸ் இந்தியத் திரைப்படங்களில் அடி எடுத்து வைத்தார். இந்தச் சமயத்தில் தான் மேரி தனது பெயரை நாடியா என மாற்றிக் கொள்ளும் சம்பவமும் நிகழ்ந்தது. அது ஒரு சுவாரஸ்யமான கதை. மேரி திரையுலகில் ஸ்டண்ட் படங்களில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அவரைச் சந்தித்த ஆர்மேனியன் துறவி ஒருவர்; மேரி, இந்தியப் படங்களில் நடிக்கையில் அதற்குப் பொருத்தமாக தனது பெயரை ‘N' என்ற எழுத்தில் துவங்குமாறு மாற்றிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தார். அப்படி மாற்றிக் கொண்டால் அவரது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதோடு, அவரது திரையுலக வெற்றிகள் நூற்றாண்டுகள் தாண்டியும் பேசப்படும் என்றும் கூறியிருந்தார். அப்போது தான் மேரி இவான்ஸ் என்ற பெயர் இந்தியத் தன்மை கொண்ட ‘நாடியா’  என மாறியது. நாடியா என்று அழைக்கும் போது அதில் ஒலிக்கும் கவர்ச்சியான ஓசைக்காகவே மேரி நாடியா என்ற பெயரை, தான் தேர்ந்தெடுத்ததாகப் பின்னர் குறிப்பிட்டார்.

பெயர் மாற்றிய ராசி நாடியாவுக்கு வொர்க் அவுட் ஆனதா?! என்றால் ஆம், வெகு ஜோராக வொர்க் அவுட் ஆனது. அதில் மிக முக்கியமான பங்கு அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் J.B.H. வாடியாவுக்கும் உண்டு.

வாடியா, நாடியாவை இந்தியப் படங்களில் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் உடனடியாக பிரதான ஹீரோயின் ஆக்கி விடவில்லை. முதலில் சூதாட்ட விடுதியில் அடிமைத் தொழில் செய்யும் இளம்பெண் வேடத்திலும், ஒரு பாடலுக்கு நடுவில் ஸ்ப்ரிங் கூந்தலுடனும், பளிச்சிடும் நீல விழிகளுடனும் நடமாடும் கவர்ச்சிக் கன்னியாகவும் நடமாட விட்டார். இதனால், இந்திய ரசிகர்களிடையே மேரி இவான்ஸ், நாடியாவாக நீலக் கண்களுடன் பச்சக்கெனப் பதிந்து போனார். அதன் பிரதிபலிப்பு தேஷ் தீபக் பட வெற்றியில் வெளிப்படையாகத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ‘நாடியா’ நூரி யமன் திரைப்படத்தில் இளவரசி பரிஷாத்தாக வந்தார். அவர் இடம்பெற்ற அத்தனை திரைப்படங்களிலுமே மேரியின் சர்கஸ் மற்றும் ஸ்டண்ட் திறமைகளைக் காண்பிக்கும் வண்ணம் சிறப்புக் காட்சிகள் இடம் பெற்றன. இதனால் நாடியா, இந்தித் திரைப்படங்களில் தனக்கான அருமையானதொரு இடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டார். இந்த முன்னேற்றம் மட்டும் போதாது என்று கருதியதாலோ என்னவோ, விதி நாடியாவை, வாடியா குடும்பத்தின் மருமகளாகவும் ஆக்கி அழகு பார்த்தது. 1961 ஆம் ஆண்டில் நாடியா, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான J.B.H.வாடியாவின் சகோதரரும் மற்றொரு புகழ்பெற்ற இயக்குனருமான ஹோமி வாடியாவைத் திருமணம் செய்து கொண்டு இந்திய மருமகளானார். 

1993 ஆம் ஆண்டில், நாடியா குடும்பத்தின் கொள்ளுப் பெயரர்களுள் ஒருவரான ரியாத் வின்ஸி வாடியா என்பவர், ஃபியர்லெஸ் என்ற பெயரில் மறைந்த தனது கொள்ளுப்பாட்டியான நாடியாவின் சாகஸத் திரைப்பயணத்தை டாக்குமென்ட்ரி திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். இந்த டாக்குமெண்ட்டரி திரைப்படம் ஹண்ட்டர் வாலி திரைப்படத்தில் பயமின்றி பல சிக்கலான சண்டைக்காட்சிகளிலும் அனாயாசமாக நடித்துப் பட்டையைக் கிளப்பிய நாடியாவின் புகழை உலகறியச் செய்தது. 1993 இல் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட இந்த டாக்குமென்ட்ரி திரைப்படத்தைக் கண்ட டோரத்தி வென்னர் எனும் ஜெர்மானிய பத்திரிகையாளரும், திரை விமர்சகருமான ஒரு பெண்மணி ஃபியர்லெஸ் நாடியாவின் வாழ்க்கையை ‘ஃபியர்லெஸ் நாடியா - பாலிவுட்டின் நிஜமான ஸ்டண்ட் குயின்’ என்ற பெயரில் வாழ்க்கைச் சரித்திரப் புத்தகமாக எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு... 2005 ஆம் ஆண்டு விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ திரைப்படம் வெளிவர உந்துகோலானாது. கங்கனா, ரங்கூனில் ஏற்று நடித்திருந்தது ‘நாடியாவின்’ கதாபாத்திரத்தைத் தான். அத்திரைப்படம் கங்கனாவின் திரைவாழ்வில் மிகச்சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் இந்திய சினிமாக்களின் அடையாளமாகக் கருதப்படும் பாலிவுட் திரைப்படங்களின் முதல் சாகஸ ராணியும், மிகச்சிறந்த நடிகையுமான நாடியாவின் 110 ஆவது பிறந்தநாளான இன்று அவருக்கு டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது கூகுள்.

நாடியாவின் அடியொற்றிப் பிற்காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் கலக்கியவர் என்பதால் தான் விஜயசாந்தியை அவருடன் ஒப்பிடத் தோன்றியது. மற்றபடி சண்டைப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நாயகிகள் என்ற ஒற்றுமை தாண்டி இருவருக்கும் வேறெந்த தொடர்புகளும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT