சிறப்புக் கட்டுரைகள்

சும்மாக் கொடுப்பார்களா துணிச்சலுக்கான தேசிய விருது?! இவர்கள் செய்த தீரச்செயல்கள் அப்படிப்பட்டவை!

கார்த்திகா வாசுதேவன்

இந்த ஆண்டு குடியரசு தின விழாவன்று சுமார் 17 குழந்தைகளுக்கு துணிச்சலுக்கான தேசிய விருது வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் 7 பேர் பெண் குழந்தைகள். அந்தக் குழந்தைகளில் சிலரது கதையைத் தெரிந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதன் பின்னுள்ள நியாயம் புரியக்கூடும்.

இந்தியாவில் துணிச்சலுக்கென்று தேசிய விருது 1957 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 680 சிறுவர்கள் முதல் 283 சிறுமிகள் வரை மொத்தம் 963 குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான துணிச்சல் தேசிய விருதுகள் மொத்தம் 17 இந்தியக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 24 ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவர்களை அழைத்துப் பாராட்டியதோடு அந்தக் குழந்தைகள் 69 வது குடியரசு தின விழா அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டன.

1.மமதா தலாய்...

துணிச்சலுக்கான தேசிய விருது பெற்ற சிறுமிகளில் மிக மிக இளையவர் மமதா தான். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் 5 வயது மமதாவும் அவரது 7 வயது அக்கா அசந்தியும் ஒதிஷா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த தங்களது கிராமத்துக்கு அருகிலிருக்க்கும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். வெயிலுக்கு இதமாக மிக அருமையான மதியக் குளியலை சிறுமிகள் இருவரும் ஆனந்தமாக அனுபவித்துக் குதூகலமாக குளித்துக் கொண்டிருக்கையில் அதை கெடுத்தே தீருவது என்பதாக மட்டுமல்ல சற்று அசந்திருந்தால் உயிருக்கே உலை வைக்கும் விதத்தில் குளத்துக்குள்ளிருந்து அரவமே இன்று விசுக்கென மேலெழுந்து வந்தது 5 அடி நீளம் கொண்ட ஒரு முரட்டு முதலை. வந்த வேகத்தில் குளித்துக் கொண்டிருந்த அசந்தியை வாயால் கவ்வி நீருக்குள் இழுக்கத் தொடங்கியது. அசந்தி பயத்தில் கதறி அழ... அவளது குட்டித் தங்கையான மமதாவோ முதலையைக் கண்டதும் பயந்துபோய் மிரண்டு ஓடுவதற்குப் பதிலாக தனது அக்கா அசந்தியின் இடது கையை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு பலம் கொண்ட மட்டும் உதவிக்காக கதறி இருக்கிறாள். மமதாவிடமிருந்து அசந்தியை பிரித்து இழுக்க முடியாமல் தண்ணீருக்குள் போராடிக் கொண்டிருந்த முதலை ஒரு கட்டத்தில் தனது பிடி வழுகியதில் அசந்தியை விட்டு விட்டது. காரணம் மமதாவின் பிடி அசந்தியை விட்டுத் தராததால் முதலை ஏமாந்து பின் வாங்கியது. அதற்குள் மமதாவின் அலறல் கேட்டு ஓடி வந்த கிராமத்தினர் முதலை விஷயத்தை வனத்துறையினரிடம் புகாராக அளிக்கவே பின்னர் அந்த முதலை பிடிக்கப்பட்டு ஒதிஷாவின் பிதர்கனிகா தேசிய பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.

முதலை வாயில் பிடிபட்ட போதும் கூட சற்றும் கலங்காததோடு தனது தமக்கையை விட்டு ஓடியும் போகாமல் முதலையுடன் எதிர்த்து நின்று போராடிய செயலுக்காகத் தான் மமதாவுக்கு இந்த விருது அளிக்கப் பட்டுள்ளது.

2. பெஸ்ட்வஜான் லிங்டோ பெய்ன்லாங்...

பெஸ்ட்வஜானின் கதையும் கிட்டத்தட்ட மமதாவின் கதையைப் போன்றது தான். அம்மா, அருகிலிருந்த ஆற்றில் துணிகளைத் துவைத்து வரப் போய்விட 14 வயதுச் சிறுவன் பெஸ்ட்வஜான் தனது மூன்றரை வயது தம்பியுடன் சேர்ந்து வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தான். எப்படித்தான் தீப்பற்றிக் கொண்டது என்று கணிக்கவே முடியாத ஒரு நொடியில் வீட்டின் சமையலறையில் தீ பற்றிக் கொண்டு பரவத் தொடங்க பெஸ்ட்வஜானும், அவனது தம்பியும் இப்போது தீராப்பசியுடன் தங்களை விழுங்க ஓடி வந்து கொண்டிருந்த நெருப்பிடமிருந்து ஓடித்தப்பியாக வேண்டிய நிலை. அந்த நேரத்தில் பெஸ்டவஜான் தான் மட்டுமே தப்பி ஓடியிருந்தால் இன்று இந்த விருதைப் பெறும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்திருக்காது. ஆனால் அந்தச் சிறுவன் தனது உயிர் பிழைப்பை மட்டுமே கருதாமல் மீண்டும் வீட்டுக்குள் பெரு வேகத்துடன் அனைத்தையும் கபளீகரம் செய்து கொண்டிருந்த நெருப்பில் நுழைந்து தனது 3 வயதுத் தம்பியையும் காப்பாற்றி இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஒடி வந்தான். உச்ச பட்சமான ஆபத்தான கட்டத்தில் தான் தப்பிய பின்னும் கூட சுயநலமாகத் தன்னை மட்டுமே காத்துக் கொள்ள நினைக்காமல் தன் தம்பியையும் காப்பாற்ற வேண்டி மீண்டும் பற்றீ எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் தைரியமாக நுழைந்து தம்பியை மீட்ட காரணத்தால் பெஸ்ட்வஜானுக்கு துணிச்சலுக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. உடலில் ஆறா வடுக்களாக தீக்காயங்கள் சில இருந்தாலும் மனதில் மட்டும் தம்பியைக் காப்பாற்றி விட்ட சந்தோஷமும், நிம்மதியும் பொங்கி வழிகிறது பெஸ்ஜ்வஜானின் முகத்தில்!

3. லஷ்மி யாதவ்...

16 வயது லஷ்மி தனது தோழியோடு ராய்பூர் சாலையில் நடந்து கொண்டிருக்கையில், முன் பின் அறிமுகமற்ற நபர்களது பாலியல் வன்முறைக்கு ஆளாக நேரிடுகிறது. லஷ்மியின் தோழியை அடித்துக் கீழே தள்ளி விட்டு லஷ்மியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள் ஆளரவமற்ற இடமொன்றில் தங்களது வாகனத்தை நிறுத்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த எண்ணம் கொண்டனர். அப்போது நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை தானே தைரியமாக இயக்கிக் கொண்டு அருகில் இருந்த காவல்நிலையத்தை நோக்கி விரைந்த லஷ்மி குற்றவாளிகளையும் காவலர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறார். எங்கே அவர்களிடம் மீண்டும் மாட்டிக் கொண்டால் தப்புவதற்கு இருக்கும் ஒரே வழியும் அடைபட்டுப் போகுமோ என்ற பயத்தில் மோட்டார் சைக்கிள் சாவியை தூர வீசி விட்டுத்தான் லஷ்மி காவல்நிலையத்துக்கு விரைந்துள்ளார். லஷ்மியின் குற்றச்சாட்டுக்கு இணங்க லஷ்மியை தவறான எண்ணத்துடன் கடத்த முயன்ற இருவரும் அன்றே கைது செய்யப்பட்டு லஷ்மி வழக்கில் நியாயம் கிட்டியது. இத்தனைக்கும் லஷ்மி காச நோயால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் என்பதால் அவருக்கும் அவரது தீரமான செயலைப் பாராட்டும் வகையில் துணிச்சலுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

4. சம்ரிதி சுஷில் ஷர்மா...

முகமூடி அணிந்த மனிதனொருவன் சம்ரிதியின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைய முயல, 17 வயது சம்ரிதி அவனை எதிர்த்துக் கடுமையாகப் போராடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் திருடன் சம்ரிதியின் தொண்டையில் கத்தியை வைத்து கொன்று விடப்போவதாக மிரட்டியபோதும் தனது கையால் அவனைத் தடுத்துக் கொண்டே திருடனுடன் கடுமையாகப் போராடியிருக்கிறார் சம்ரிதி. இந்தப் போராட்டத்தில் ஒரு வழியாக திருடனை விரட்ட முடிந்தாலும் கூட சம்ரிதி பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. அது மட்டுமல்ல கை விரல்களில் ஒன்றையும் இழக்க வேண்டியதாயிற்று. இப்போது தனது கைகளின் இயல்பான தோற்றம் மற்றும் பயன்பாட்டுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகையான அறுவை சிகிச்சைகளுக்கு உடன்பட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். ஆனாலும் அவரது உறுதியும் , விடா முயற்சிக்கும் எந்தக் குறைவுமில்லை.

5. கரன் பீர் சிங்....

2016 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் அட்டரி எனும் கிராமத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து ஆற்றின் மீதிருந்த பாலத்தைக் கடக்கையில் ஓட்டுநரின் மிதமிஞ்சிய வேகம் காரணமாக இலக்கின்றி ஓடி பாலத்தின் சுவரில் மோதி உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்தது. கிட்டத்தட்ட பேருந்தின் உள்ளிருந்த அத்தனை குழந்தைகளும் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த அவல நிமிடங்கள் அவை. பேருந்தின் உள்ளிருந்த குழந்தைகள் தப்பிக்க முடியாது என்பதைக் காட்டிலும் உள்ளேயே மூச்சு விடக்கூட முடியாமல் திணறி சீக்கிரத்தில் தண்ணீருக்குள் மூழ்கி உயிர்ப்பலி ஏற்பட்டு விடக்கூடிய நிலையில் பேருந்துக்குள் இருந்த பள்ளி மாணவரான 16 வயது கரன்பீர் கொஞ்சமும் தயங்காமல்  அதிரடியாக பேருந்தின் கதவை உடைத்துத் திறந்து வெளியேறினான். வெளியேறிய போது தான் தெரிந்தது பேருந்துக்குள் மேலும் பல குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலை. அதே நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வந்தது. ஆனாலும் தனது விடாமுயற்சியைக் கைவிட விரும்பாத கரன்பீர் தன் நண்பர்களுடன் கூடிய மட்டும் பேருந்துக்குள் மாட்டிக் கொண்டிருந்த குழந்தைகளை எல்லாம் கரையேற்ற உதவிக் கொண்டிருந்தார். அவனது இந்த தீரச்செயலுக்குப் பரிசாக முன் நெற்றியில் ஆழமான வெட்டுத் தழும்பு ஒன்று இன்றும் உண்டு. ஆற்று நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறக்கவிருந்த பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றிய விஷயத்துக்காகத் தான் கரன்பீருக்கு துணிச்சலுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதாம்.

6. நேத்ராவதி எம். சவான்...

2017 ஆம் ஆண்டின் மே மாதம் 13 ஆம் தேதியன்று 14 வயது நேத்ராவதி தன வீட்டின் அருகிலிருந்த கல்குவாரி குளமொன்றில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் மிக அருகில் அக்குளத்தின் ஏதோ ஒரு இடத்திலிருந்து சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்கவே துணிகளைத் துவைப்பதை நிறுத்தி விட்டு நேத்ராவதி எட்டிப் பார்த்தார். அப்போது பெய்திருந்த கனமழை காரணமாக குளம் ஏற்கனவே நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்தது. நிரம்பிய குளத்தின் ஆழமற்ற கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் எப்படியோ குளத்தின் ஆழமிக்க பகுதிக்கு வழுக்கிச் சென்றுவிட...அங்கிருந்து தான் அபயக்குரல் ஒலிக்கிறது என்பதை உணர்ந்ததும் நேத்ராவதி கொஞ்சமும் யோசிக்காமல் தன் கையிலிருந்த துணிகளை அப்படியே போட்டு விட்டு உடனடியாக அந்தச் சிறுவர்களைக் காப்பாற்ற குளத்தில் குதித்தார். நன்றாக நீந்தத் தெரிந்திருந்த நேத்ராவதிக்கு முதல் சிறுவனான 16 வயது கணேஷைக்  காப்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமாக இருக்கவில்லை. அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்து விட்டு மீண்டும் மூழ்கிக் கொண்டிருந்த மற்றொரு சிறுவனான 10 வயது முத்துவை வெள்ளத்தில் இருந்து மீட்க மீண்டும் குளத்திற்குள் குதித்தார். இம்முறை விதி சதி செய்தது. முத்து பயத்தில் தன்னைக் காக்க வந்த நேத்ராவதியின் கழுத்தை இறுக்கிப் பிடிக்க நேத்ராவதி துரதிருஷ்டவசமாக முத்துவுடன் சேர்ந்து குளத்தின் ஆழத்தில் மூழ்கி மூச்சுத்திணறி இறக்க நேர்ந்து விட்டது. அந்த வீரச்சிறுமி உயிருடன் இல்லாவிட்டாலும் கூட அவரது தீரமிக்க சேவையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு துணிச்சலுக்கான தேசிய விருது அளித்துக் கெளரவித்திருக்கிறது. 

7. நஸியா கான்...

சட்டத்திற்குப் புறம்பான வகையில் அனுமதியின்றி சூதாட்ட விடுதிகள் நடத்துவது ஆக்ராவில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வரும் துயரங்களில் ஒன்று. 18 வயது நஸியா கான் இந்த முறைகேட்டைப் பற்றி எப்படியாவது ஆதாரங்களுடன் காவல்துறை கவனத்துக்கு எடுத்துச் செல்ல உறுதி கொண்டார். அதனபடி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி போதுமான ஆதாரங்களை சேகரித்து சட்டத்துக்குப் புறம்பான முறையில் அனுமதியின்றி நடத்தப்படும் சூதாட்ட விடுதிகள் குறித்தும் அதன் உரிமையாளர்கள் குறித்தும் காவல்துறை கவனத்துக்கு எடுத்துச் சென்று வலிமையான புகாராகப் பதிவு செய்தார். இதையடுத்து அப்படிப்பட்ட சூதாட்ட விடுதிகளை நடத்தி வந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டு விடுதிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இதையடுத்து தங்களது முறைகேடான தொழிலுக்கு தடங்கல் ஏற்படுத்திய இளம்பெண் நஸியா மீது குற்றவாளிகளின் கோரக் கண் படிந்து நஸியாவைச் சார்ந்தவர்கள் மிரட்டப்பட்டனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோசமாகப் பொது இடங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். நஸியா வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவரது உயிருக்கே ஆபத்து எனும் படியான அளவுக்கு அவரால் அடையாளம் காட்டப்பட்டிருந்த குற்றவாளிகள் அவருக்கு இன்னலை ஏற்படுத்தி வந்தனர். 
இதனால் அஞ்சி அஞ்சி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட நஸியா, ஒரு கட்டத்தில் குற்றவாளிகளின் அழிச்சாட்டியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத நஸியா, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தன்னையும், தன் குடும்பத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். அவர்களது தொடர் அராஜகத்தைப் பற்றி அன்றைய உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் ட்விட்டரில் மெசேஜ் தட்டி விட்டார். அப்புறம் தான் குற்றவாளிகள் தங்களது அராஜக மிரட்டலைத் தவிர்த்து சற்றே அடக்கி வாசிக்கத் தொடங்கினர். சமூக ஊடகங்களைப் பொழுது போக்குக்கு பயன்படுத்தி வருவோர் பலர் இருக்க அவற்றின் உண்மையான நோக்கத்தை சரியாகப் பயன்படுத்திய விதத்தில் நஸியாவைப் பாராட்டலாம். தனது உயிர் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பைப் பற்றி யோசிக்காமல் சுற்றுப்புற ஒழுக்கக் கேட்டை தட்டிக் கேட்ட தைரியமான செயலுக்காகவும், அதற்காகத் தான் மிரட்டப்பட்ட போதும் அஞ்சி ஒடுங்காமல் சமூக ஊடகங்கள் வாயிலாக குற்றவாளிகளின் மிரட்டலை உலகுக்கு அடையாளம் காட்டிய சமயோசித புத்திக்காகவும் நஸியாவுக்கு துணிச்சலுக்கான தேடிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.

8.செபஸ்டியன் வின்சென்ட்...

8, 9 ஆம் வகுப்பு வந்ததும் பள்ளி செல்லும் சிறுவர்கள் பள்ளிப்பேருந்து மற்றும் வேன்களைத் தவிர்த்து விட்டு தங்களுகே, தங்களுக்கு எனச் சொந்தமாக சைக்கிள் வாங்கி அதை ஓட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்வது என்பது அந்த வயதின் ரசிக்கத் தக்க விஷயங்களில் ஒன்று. அப்படிப் பல சிறுவர்களை நாம் இந்தியாவின் எல்லா மூலைகளிலும் பார்த்திருக்கலாம். அப்படித்தான் 13 வயது செபஸ்டியனும் அவரது பள்ளித் தோழர்களும் தங்களது பள்ளிக்குத் தினமும் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆனால், திடீரென ஒருநாள் அப்படி சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்ட ரயில்வே தண்டவாளக் குறுக்கு கட்டையொன்றில் செபஸ்டியனின் நண்பன் அபிஜித்தின் ஷூ சிக்கிக் கொள்ளவே சைக்கிள் மற்றும் அதிக எடை கொண்ட தனது புத்தகப் பையுடன் சேர்ந்து அபிஜித் ரயில்வே டிராக்கில் எழ முடியாமல் விழுந்து விடுகிறான்.

உடன் வந்த மற்ற நண்பர்கள் அனைவரும் விழுந்தவனை எப்படி மிட்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்ப்புறத்தில் அபிஜித் விழுந்து கிடந்த டிராக்கை நோக்கி சற்றுத் தொலைவில் ஒரு ரயில் வந்து கொண்டிருக்கும் ஓசை வேறு வெகு அருகே நெருங்கிக் கொண்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் அரண்டு விட்டனர். எவ்வளவு முயன்றாலும் அபிஜித்தை அவர்களால் மீட்க முடியும் என்று தோன்றவில்லை எனவே அவர்கள் பயத்தில் அலறிக் கொண்டு டிராக் மேடையில் நின்று கொண்டிருக்க, செபஸ்டியன் மட்டும் உடனே கொஞ்சமும் யோசிக்காது டிராக்கில் குதித்து விட்டான். மீண்டும் அவன் முயன்று கொண்டே இருக்க அபிஜித்தை அத்தனை எளிதாக மீட்க முடியுமென்று தோன்றவில்லை. வேறு வழியின்றி தன் நண்பனை மட்டும் இறுகப் பற்றியவாறு செபஸ்டியன் சம்மர் சால்ட் அடித்து தாவிக் குதிக்கவே இருவரும் தண்டவாளத்தை விட்டுப் பிரிந்து துள்ளி விழுந்தனர். ஆபத்தான நேரத்தில் செபஸ்டியனின் புத்திசாலித்தனமான முடிவே அன்று அவனது நன்பனைக் காப்பாற்றியது எனவே அவனது சமயோசித முடிவுக்காக அந்தச் சிறுவனுக்கு துணிச்சலுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT