சிறப்புக் கட்டுரைகள்

தாம்பத்யம் என்றால் என்ன? புரிந்து கொள்ளாத முரட்டுக் கணவர்கள் & சஞ்சலத்துடன் போராடும் மனைவிகளின் நிலை மாறாதா?!

கார்த்திகா வாசுதேவன்

இந்த உலகில் கணவர்களுக்கும், மனைவிகளுக்குமான உளவியல் பிரச்னைகளும், புனிதமான திருமண பந்தத்தின் மீதான வரம்புகள் மீறப்படுகையில் அந்த இருவருக்குள்ளும் நிகழும் அபாயகரமான மாற்றங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் யுகம் யுகமாகத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் இந்த சமூகத்தின் முன்... உதாரண தம்பதிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முனைப்பு வெகு சிலருக்குத்தான் இருக்கிறது. இன்னும் சிலரோ, ஏதோ பிறந்தோம், கடமைக்கு திருமணம் செய்தோம், பிள்ளைகளைப் பெற்றோம் இதோ பிடிக்கிறதோ, இல்லையோ ஏனோ, தானோவென்றாவது வாழ்ந்து தீர்த்து விட்டுப் போய் விடலாம் என்று விட்டேற்றியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி புரிதலில்லாத சாத்வீகர்கள் வாழும் இதே உலகில் ரஜோ குணத்துடன் அனுதினமும் சண்டையிட்டுக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்துக்காகவும், சமரசத்துக்காகவும் குவியும் கூட்டமே அதற்கு அத்தாட்சி.

இன்னும் உங்களுக்கு உதாரணங்கள் வேண்டுமெனில் அகமதாபாத்தில் நடந்த கதையைக் கேளுங்கள்...

அந்தப்பெண் மெத்தப் படித்தவர். மத்திய அரசின் ஏதோ ஒரு நிறுவனத்தின் கீழ் சயன்டிஸ்ட்டாகப் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 14 வயதிலும், 10 வயதிலுமாக இரு ஆண்குழந்தைகள் உண்டு. கணவர் ஏதோ ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த இருவருக்குமான பிரச்னை திருமணத்திற்குப் பிறகு தொடங்கியதில்லை. திருமணத்திற்கு முன்பே தனக்கு கணவராகப் போகிறவர் பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்க நேரிடும் போது அங்கிருக்கும் பெண்களில் சிலரிடமும் வரம்பு மீறிய உறவு கொண்டிருந்த விஷயம் மனைவியாகப் போகும் இந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்திருக்கிறது. அப்போதே திருமணத்தை தடுத்து நிறுத்தி வேறு மாப்பிள்ளை பார்த்திருக்கலாம். ஆனால், ஏனோ இவர் அப்படிச் செய்யவில்லை. திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் இப்போது போய் திருமணத்தை தடுத்து நிறுத்தினால் குடும்பத்தில் குழப்பம் வரும் என்று கருதியோ என்னவோ, கணவராகப் போகும் நபரைக் கண்டித்து இனிமேல் இப்படியான நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. திருமணத்திற்குப் பின் ஒழுக்கத்துடன் மனைவியுடன் மட்டுமே வாழ்வைப் பகிர்ந்து கொண்டு தாம்பத்யத்தைப் புனிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் விஷயத்தை மறைத்து அந்த ஆணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் அந்த அப்பாவின் பெண்.

சம்மந்தப்பட்ட ஆணின் பெற்றோருக்கு எல்லா விவகாரங்களும் தெரியும். ஆயினும் அவர்கள் தங்கள் மகனைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு மகனுக்கும், மருமகளுக்கும் ஏதாவது சண்டை, சச்சரவு என்றால் அவர்களது ஆதரவு மகன் சார்பாகவே இருந்திருக்கிறது. திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து அவர்களுக்கும் விவரம் தெரியும் பக்குவம் வந்தபிறகும் தன் கணவனின் நடவடிக்கை மாறாத காரணத்தால் இப்போது மனைவிக்கு வாழ்க்கை வெறுத்தது. பலன்... கணவர் கண்ட கண்ட பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதால், தன்னால் இனி அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியாது, பச்சையாகச் சொல்வதென்றால் இனிமேல் கணவருடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ள முடியாது என்று அந்த மனைவி முடிவெடுக்கிறார். இப்போது கணவர் என்ன செய்திருக்க வேண்டும்? தன் தவறை உணர்ந்து மனைவியிடம் மன்னிப்புக் கேட்டு மேற்கொண்டு அதே தவறைச் செய்யாதிருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த முரட்டு முட்டாள் கணவன் செய்ததென்ன தெரியுமா?

தன்னுடன் படுக்கையைப் பகிர மறுத்த மனைவியை எட்டி உதைத்திருக்கிறார். எங்கே என்று கேட்டு விடாதீர்கள். தாம்பத்யத்தின் புனிதம் காக்கப்பட வேண்டிய அத்தனை உடல் பாகங்களிலும் பெற்ற தாயிடம் கூட காட்டிப் பகிர்ந்து கொண்டு அழ முடியாத அளவுக்கு மோசமான காயங்கள். கன்னத்தை கடித்துக் குதறியதோடு உனக்குப் பாடம் கற்பிக்கவே நான் இதையெல்லாம் செய்கிறேன் என்ற வெறிக்கூச்சல் வேறு.

அத்தனையிலும் உச்சம்... மனைவியை படுக்கையறையின் நான்கு சுவர்களுக்குள் தான் கொடுமைப் படுத்துவது வெளியில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தாருக்கும் கேட்கக் கூடிய பட்சத்தில் குற்றம் தனதென்று ஆகி விடக்கூடாது என்று, மனைவி தன்னை அடிப்பதால் தான் அழுது போராடுவதைப் போன்று போலியான ஓலத்தை வேறு எழுப்பியிருக்கிறான் அந்தக் கணவன். எத்தனை சைக்கோத்தனமான எண்ணம் என்று பாருங்கள்!

இப்படியொரு கணவனை இன்னும் அந்தப்பெண் மன்னிக்கத்தான் வேண்டுமா? இதுவும் கூட முதல்முறை அல்ல, இதே போன்று பலமுறை அவள், அந்தக் கணவனால் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறாள். விஷயம் காவல்துறை புகார் வரை சென்று இரண்டொரு முறை கணவரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து கண்டித்து, இனி இது போன்ற முரட்டுத் தனமான நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் காவல்துறை நடவடிக்கைக்குப் பயந்து அந்த நிமிடம் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரு சில வாரங்களுக்குள் மீண்டும் அந்தக் கொடுமைகளை எல்லாம் அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறான் அந்தக் கணவன். இதில் தாம்பத்யத்தின் புனித பிம்பத்திற்கு இடமெங்கு விட்டு வைத்திருக்கிறார்கள் இவனைப் போன்றவர்கள்?!

தாம்பத்யம் என்பது எப்போதுமே வற்புறுத்தலின் பால் நிகழக்கூடாது. பூ மலர்வதைப் போலவோ அல்லது தென்றல் தழுவுவதைப் போலவோ, இளங்காற்றுக்கு இலைகள் ஒத்திசைவாய் அலைவுறுதல்போலவோ இரு உயிர்களுக்குள் அந்த வேட்கை முகிழவேண்டும். அது தான் திருப்தியான தாம்பத்ய உறவாக இருக்கக் கூடும் என அகப்பொருள் நூல்களில் தெள்ளத் தெளிவாக அனைத்தும் அறிந்த சான்றோர் பலர் பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால், நம் மூட மனங்கள் மட்டும் எப்போதும் அதைப்புரிந்து கொள்ள முயல்வதே இல்லை. பழுக்கத் தாமதமாகும் பழங்களை தடி கொண்டு பழுக்க வைக்க நினைத்தால் என்ன ஆகும்? அப்படித்தான் நம் நாட்டில் தாம்பத்ய உறவை அணுகுகிறார்கள்.

ஒரு பக்கம் மனோதத்துவ விளக்கம் என்ற பெயரில் உணர்வுகளின் அடிப்படையில் அல்லாமல் வெறுமே உடல் தேவைகளை மட்டுமே கணக்கில் கொண்டு கணவன், மனைவிக்கிடையில் தினமும் அல்லது இருவருக்கும் தேவைப்படும் போதெல்லாம் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதே ஆரோக்யமானது என்கிறார்கள். ஒரு வேளை கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அன்றோ அல்லது அதைத் தொடர்ந்த சில நாட்களோ தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லையென்றால் அப்போது இம்மாதிரியான நிர்பந்தங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தாதா? அல்லது மேற்சொன்ன முரட்டுக் கணவன் போன்றோர் தங்களது மனைவிகளை வதைக்க இதையும் ஒரு காரணமாக நீதிமன்றத்தில் முன் வைக்கப் பட மாட்டாதா?

இதை டொமஸ்டிக் வயலன்ஸ் என்கிறார்கள். வீட்டுக்குள் நடக்கும் வரை இது டொமஸ்டிக் வயலன்ஸ். வீட்டில் மனைவி இடம் தராத போது வெளியில் தாம் சந்திக்கும் பெண்களிடமும் இதே விதமாக ஆண்கள் நடந்து கொள்ள முற்பட்டால் அதற்குப் பெயர் பாலியல் வன்கொடுமை. இதென்ன கொடுமை. இரண்டுமே ஒன்று தானே!

இரண்டுக்குமே ஒரே விதமான தண்டனைகளை அளித்தாலும் தவறில்லையே! 

கணவன், மனைவி இருவரும் மனமொப்பி இணைவது தான் தாம்பத்யம். அப்படியல்லாமல் இருவரில் எவர் ஒருவர் தேவைக்காகவும் மற்றவர் பூரண சம்மதமின்றி நிர்பந்தப்படுத்தப் பட்டால் அதன் பெயர் பாலியல் வன்முறை தான். இதை உலகத்தின் அத்தனை கணவன், மனைவிகளும் உணர வேண்டும்.

விவாகரத்துகளை உற்சாகப்படுத்துவதாக நினைத்து விடத் தேவையில்லை. நிச்சயமாக மேற்கண்ட சம்பவத்தில் இப்போது அந்த மனைவி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவள் மீண்டும் தனது நடத்தை தவறிய கணவனுடன், முரட்டு, முட்டாள் கணவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டுமா?

அந்த வாழ்க்கை சரி இல்லையென்றால் அதிலிருந்து விலகி இருக்க அவளுக்கு சட்ட ரீதியாக உரிமை இல்லையா?

கணவனைப் பிரிந்து வாழும் மனைவிகளை இந்தச் சமூகம் நடத்தும் மனப்பான்மை நிச்சயம் மாற வேண்டும். கணவர்கள், மனைவிகளைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். நான் குறிப்பிடுவது மேற்கண்ட சைக்கோக்களை அல்ல. அவன் விஷயத்தில் அந்தப் பெண் விவாகரத்துக்கு அப்ளை செய்து விட்டு தன் வேலையிலும், குழந்தைகள் வளர்ப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கலாம். இனிமேலும் அவன் திருந்துவதற்கு வாய்ப்புகள் அளிக்கத் தேவை இராது என்றே தோன்றுகிறது. அந்தப் பெண்மணி இம்முறையும் காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறார். அவர்களின் கதை இங்கொன்றும் புதிதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் உள்ள நிலவரம் தான். அந்த நிலை மாற வேண்டும்.

இப்போதும் பெண்களின் அல்லது மனைவிகளின் பால் தவறில்லை முழுத் தவறும் கணவர்களது தான் என்று சொல்ல முற்படவில்லை.

இங்கே வலியுறுத்த விரும்புவது தாம்பத்யம் குறித்த நமது சமூக மனப்பான்மை மாற வேண்டும் என்பதையே!

கணவன், மனைவி என்றால் தினமும் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில்லை. அத்துடன் கணவனுக்கோ, மனைவிக்கோ மனநிலை இடம் தராவிட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நிர்பந்தப்படுத்தியாவது அந்த உறவில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்பதும் இல்லை. அகமதாபாத் தம்பதிகள் விவகாரத்தில் தாம்பத்ய உறவுக்கு மனைவி மறுத்தது தான் கணவனின் கொடூரத் தனத்திற்கு காரணமாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.

நாம் எப்போது நளாயினியை கற்புக்கரசியாகக் காட்டிக் கொள்ள விழைந்தோமோ அன்று தொடங்கியது இந்தப் பிரச்னை.

குஷ்டரோகியான கணவன், வேசி வீட்டுக்குச் செல்ல விரும்பினான் என்று அவனைக் கூடையில் சுமந்து சென்று வேசி வீட்டில் விட்டு வந்தால் நளாயினி எனும் பேதை. அவள் நம் இந்தியத் திருநாட்டின் கற்புக்கரசி என்றால் அவளாக் கூடையில் வைத்து சுமந்து செல்லப்பட்ட கணவன் யார்? உண்மையில் மனைவியின் உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் அவனை நளாயினி என்ன செய்திருக்க வேண்டும்? என்று தானே இதில் விவாதங்கள் கிளைத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இன்றும் கூட நளாயினியையும், மாதவிக்கு கோவலனை விட்டுக் கொடுத்த கண்ணகியையுமே நாம் கற்புக்கரசிகளாகக் கொண்டாடிக் கொண்டிருப்பதால் தான் நம் தேசத்துப் பெண்கள் இப்போதும் அநியாயக் கணவர்களிடத்தில் அடியும், உதையும் பட்டு சித்ரவதைப்பட்டுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நரகத்தில் உழன்று கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால் பெண்ணை அவளது முடிவுகளுக்காக சதா விமர்சிக்கும் நம் சமூகத்தின் மனப்பான்மை மாறியே தீர வேண்டும்.

இல்லையேல் இது ஒரு தொடர்கதையாகி சமூகத்தில் புரையோடிப்போன நோய்களில் ஒன்றாகும். 

Image courtesy: spikedkoolaid.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT