சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: திரும்பிய பக்கமெல்லாம் கடன்; நேரடி ரிப்போர்ட்-21

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

இலங்கைக்கு ஏற்கனவே பலமுறை பெட்ரோல், டீசல் மற்றும் நிதியை இந்தியா கொடுத்து உதவியுள்ளது. தற்போது, அன்னிய செலாவணி கடுமையாக சரிந்துள்ளதால், பெட்ரோலிய பொருட்களைக் கொள்முதல் செய்ய இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து ரூ.3,850 கோடி கடன் வாங்க இலங்கை அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஒப்புதல் வழங்கியது. முன்பே இந்த வங்கியிடமிருந்து ரூ.3,850 கோடியும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடமிருந்து ரூ.1,551 கோடியும் இலங்கை கடனாக பெற்றுள்ளது. ஜூன் மாதம் முதல், எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கைக்கு ரூ.4,112 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திவால் நிலையில் உள்ள இலங்கையை மீட்டெடுக்கும் வகையில், "பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்பிற்கு ஆலோசனை வழங்க முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான லசார்ட், கிளிபோர்ட் சான்ஸ் எல்எல்பி நிறுவனங்களை நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இவற்றுக்கு 43 கோடி கட்டணம் வழங்கப்பட உள்ளது.

புதிய அமைச்சரவையில் ஒவ்வொரு கட்டமாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் இருந்து மீட்க திட்டம் வகுக்க வேண்டிய நிதியமைச்சர் மட்டும் நியமிக்கப்படாமல் இருந்ததற்கு தன்னுடைய தீவிர ஆதரவாளருக்கே அப்பதவியைக் கொடுக்க வேண்டும் என அதிபர் கோத்தபய முட்டுக்கட்டை போடுவதாக கூறப்பட்ட நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இலங்கை அரசாங்க நிதி அமைச்சர்களாக ராஜபட்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே முன்னும் பின்னுமாக இருந்துள்ளனர். அதாவது இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சராக 2019 நவம்பர் முதல் 2021 ஜூலை வரை மகிந்த ராஜபட்ச, அதை தொடர்ந்து 2021 ஜூலை முதல் ஏப்ரல் 2022 வரை பசில் ராஜபட்ச  நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது, கோத்தபய ராஜபட்ச  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இலங்கை அரசாங்கத்தின் தற்காலிக நிதி அமைச்சராக இருந்துவந்த நிலையில் பதவியை ரணிலுக்கு கொடுத்திருக்கிறார். இந்த 3 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன்கள் 50 பில்லியன் அமெரிக்கா டாலராக அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக, இந்தாண்டு 8.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மீள செலுத்த வேண்டியுள்ள நிலையில் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை வரலாற்றில் முதல் தடவையாக இழந்திருக்கிறது இலங்கை. அந்நிய செலாவணி நிலுவை ‘0’ பெறுமதியை எட்டியிருக்கிறது.

இலங்கை அரச வருமானம் ரூ.1500 பில்லியனாக  இருந்த நிலையில் அரச செலவினம் ரூ.3,522 பில்லியனாக அதிகரித்திருக்கிறது.

சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களான ஸ்டாண்டர்ட், புவர் மூடி மற்றும் ஃபிட்ச் (Standard, Poor Moody & Fitch) ஆகியவை இலங்கை முறிவடைந்துவிட்டதாக அறிவித்திருக்கின்றன.

இலங்கை நாட்டின்  கடன் சுமை ஜிடிபியில் (Debt to GDP) 115% ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அதிகமான கடன்கள் நிலுவையாக இருக்கின்றன.

மேலும், இலங்கையின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.10% ஆக இருப்பதுடன் கடந்த ஏப்ரல் மாதத் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் 29.80 % ஆக உயர்ந்திருக்கிறது.

2021 ஆம் ஆண்டு 1.2 ட்ரில்லியன் பணத்தை அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.588 மில்லியன்  பணத்தை மட்டுமே அச்சிட்டுள்ளது.

முக்கியமாக, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு அனுப்பிய 248.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணமாக கிடைத்தாலும் இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 50 வீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

நிதி மேலாண்மை போன்ற அடிப்படை பொருளாதார விசயங்கள் குறித்த எந்த அறிவோ, புரிதலோ அற்ற ராஜபட்ச சகோதரர்களின் மேற்குறிப்பிட்ட பொருளாதாரச் சாதனைகள் பொதுமக்களை தெருவில் நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போது திவால்நிலையில் இலங்கை.

இதுவரை கடனில் மூழ்கிய நாடுகள்:

எகிப்தின் மொத்த கடன் சுமை கடந்த நிதியாண்டின்படி ரூ.30,18,400 கோடி. கடன் சுமை ஜிடிபியில் 88 சதவீதமாக உள்ளது. முன்பு 84 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருளின் பண வீக்கம் 26%.

69 நாடுகள் இலங்கையைபோல் திவாலாகும் நிலையில் உள்ளன. அதில் 25 நாடுகள் ஆசிய-பசுபிக் கண்டத்தில் உள்ளவை.  25 நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை. துருக்கி, கானா, எத்தியோப்பியா, கென்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் கடனைக் கட்ட திணறி வருகின்றன.

இலங்கையை தொடர்ந்து திவாலாகும் அபாயத்திலுள்ள  நாடுகள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது எகிப்து. அதற்கு அடுத்து இடங்களில், துனிசியா, லெபனான், அர்ஜென்டினா, எல் சல்வடார், பெரு ஆகிய நாடுகள் உள்ளன என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபோல் துனிசியாவின் வர்த்தக பற்றாக்குறை ரூ.6,000 கோடியாக உள்ளது. பணவீக்கம் 8.7 சதவீதமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

குடும்பத்துடன் மகிந்த மாலத்தீவுக்கு ஓட்டம்?

இலங்கையில் மக்களின் போராட்டத்துக்கு பணிந்து கடந்த மே- 9ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த, கூலிப்படையை ஏவி போராட்டம் நடத்திய மக்களின் மீது தாக்குதல் நடத்தினார். மக்கள் திருப்பித் தாக்கியதால், தனது மகன் நமல் ராஜபட்ச மற்றும் குடும்பத்துடன் தப்பி, திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்தார்.

சில நாட்களுக்கு பிறகு கொழும்பு அருகே ஒரு ரகசிய இடத்துக்கு அவர் இடம் பெயர்ந்தார். பின்னர், நாடாளுமன்றம் கூடிய 2ஆம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு அவர் வெளியில் தலையைக் காட்டவில்லை. இந்நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மகிந்த ராஜபட்சவைச் சந்தித்து பேசி உள்ளார். அப்போது, இலங்கையில் இயல்பு நிலை திரும்பும் வரை மாலத்தீவில் குடும்பத்துடன் தஞ்சமடைய மகிந்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உதவிகளை முகமது நஷீத் செய்து கொடுக்க உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மாலத்தீவு அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய முகமது நஷீத், குடும்பத்துடன் இலங்கையில் தஞ்சமடைந்தார். அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அவருக்கு உதவிகள் செய்தார். அதற்கு நன்றி கடனாக இப்போது மகிந்தவுக்கு முகமது நஷீத் உதவ முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

                                                                                                                                   -தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

நான் பியார் கர்த்தாமா!

ஹாய்.. நிக்கி!

சூர்யா - 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?

மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

SCROLL FOR NEXT