சமாதானமான கண்டக்டர் - காவலர்  
சிறப்புக் கட்டுரைகள்

போக்குவரத்து Vs போலீஸ் தகராறு: ‘சுமுக முடிவு’ பின்னணி என்ன?

காவல்துறை மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் டிக்கெட் தகராறு சுமுக முடிவுக்கு வந்ததன் பின்னணி பற்றி...

முத்தையா மேல்மங்கலம்

“அனைத்து அரசுப் பேருந்துகளிலும் காவல்துறையினரை டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்; இல்லாவிட்டால் விதிகளை மீறும் போக்குவரத்துத் துறை மீதும் தொழிலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம்” என்ற அறிவிக்கப்படாத நிபந்தனையுடன் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு -  துறைக்கு எதிராகக் காவல்துறையினர் எடுத்துவந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

நான்குநேரி அருகே அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த காவலருக்கும் கண்டக்டருக்கும் இடையிலான சண்டைக்காகத் தலைமைச் செயலகத்தில் இரு துறைகளின் செயலர்களும் சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தி சமாதானம் கண்டிருக்கின்றனர்!

பணியின் காரணமான பயணம் என்பதற்கான சான்று (வாரண்ட்) இல்லாத நிலையில் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று காவலரிடம் பேருந்து நடத்துநர் வலியுறுத்தியதில் எவ்விதத் தவறும் இருக்க வாய்ப்பு இல்லை. தலைமைச் செயலகப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறைச் செயலரேகூட இதைத் தவறெனக் கூற மாட்டார்.

டிக்கெட் இல்லா பயணம் தொடர்பான இந்த சண்டை விடியோ வைரலான நிலையில் இதுபற்றிய துறைசார் நடவடிக்கைக்குப் போக்குவரத்துத் துறை பரிந்துரைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. விசாரணையும் நடைபெற்றிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழகம் முழுவதும் பரவலாகப் போக்குவரத்துத் – தொழிலாளர்களின் மற்றும் துறையின் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கி, அபராதங்களையும் காவல்துறையினர் விதிக்கத் தொடங்கினர்.

இவ்வாறு தொடர்ந்து பரவலாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும்  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியது யார்? எனத் தெரியவில்லை. திடீரெனத் தாங்கள் விரும்பியபடி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பார்களா? சீருடைப் பணியிலுள்ள பல்வேறு படிநிலைகள் கொண்ட  அதிகார அமைப்பினரால் அவ்வாறெல்லாம் செய்யவும் முடியுமா? எனத் தெரியவில்லை.

இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல்துறைக்குப் பொறுப்பான உள்துறை முதன்மைச் செயலர் அமுதா, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

இந்த ஆலோசனையின்போது இரு துறைகளைச் சேர்ந்தவர்களும் சுமுகமான முறையில் பணிகளைத் தொடர முடிவெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்ட சண்டை போட்ட காவலரும் கண்டக்டரும், பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன்,  கட்டிப்பிடித்தபடி சமாதானமான படங்களும் இருவரும் நண்பர்களாக இருப்போம் எனத் தேநீர் அருந்திய புகைப்படங்களும் வெளிவந்தன.

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ மூன்று, நான்கு நாள்களாக போக்குவரத்துத் துறை, காவல்துறை மட்டுமின்றி, சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த இந்த விஷயத்தில், அரசு செயலர்கள் பேசி, எட்டப்பட்ட ‘சுமுக முடிவு’ எத்தகையது? எதன் அடிப்படையில், எத்தகைய நிபந்தனைகளுடன்  இந்த சுமுக முடிவுகள் எட்டப்பட்டன? இரு துறையினருக்கும் மட்டுமின்றிப் பொதுவெளியில் அனைத்து மக்களுக்கும் வெளிப்படையாக இவை தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம். 

எட்டப்பட்ட இந்த ‘சுமுக முடிவை’த் தொடர்ந்து, காவல்துறையினர் அனைவரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யலாமா? அல்லது பணி நிமித்தமான வாரன்ட் வைத்திருக்கும் காவலர்களைத் தவிர அனைவரும் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டுமா? நகர்ப் பேருந்துகளுக்கு மட்டுமா? அல்லது தொலைதூரப் பேருந்துகளுக்குமா? டிக்கெட் எடுக்கச் சொல்லிக் காவலர்களிடம் கண்டக்டர்கள் கேட்கலாமா? கூடாதா? சீருடை அணிந்திருக்கும் போலீசாருக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் பொருந்துமா? அல்லது சீருடை அணியாமல் செல்லக்கூடிய போலீசாருக்கும் சேர்த்துதானா?

இந்த ‘சுமுக முடிவு’க்குப் பிறகு வழக்கம்போல நோ பார்க்கிங் பகுதிகளில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாமா? நிறுத்தங்களைப் புறக்கணித்துவிட்டு நினைத்த இடத்தில் பேருந்துகளை நிறுத்திச் செல்லலாமா? சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லையா? காலாவதியான, வைப்பர் இல்லாத பேருந்துகளை இயக்கலாமா? காற்றொலிப்பான்களை அதிர விடலாமா? சுருக்கமாகச் சொல்லப் போனால் கடந்த சில நாள்களாகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் காரணமான விஷயங்கள் எல்லாம் இனிக் கவலைப்பட வேண்டியவை ஒன்றல்ல என்று போக்குவரத்துத் துறையினர் எடுத்துக் கொள்ளலாமா?

அல்லது,

காவலர்களாக இருந்தாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கத்தான் வேண்டும்; அரசுத் துறை என்றாலும் போக்குவரத்துத் துறையும் ஓட்டுநர், நடத்துநர்களும் மக்களைப் போல அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதா?

இந்தத் தகராறும், காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளும், ‘முதல்வர் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலகத்தில் துறைச் செயலர்கள் லெவலில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுப்பதும்’ போக்குவரத்துத் துறையுடன் நின்றுவிடுமா? அடுத்தடுத்த அரசுத் துறைகளுக்கும் விரிவடையுமா? தெரியவில்லை.

துறைச் செயலர்கள் நிலையில் எடுக்கப்பட்ட சுமுகமான முடிவின் ரத்தினச் சுருக்கம், ‘நீங்களும் கண்டுக்காதீங்க, அவங்களும் கண்டுக்க மாட்டாங்க!’ என்பதுதான் என்றால் நிர்வாகத்தில் இது மிக மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்பதைக் காலம் உறுதி செய்வதற்காக மக்கள் காத்திருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT